இது 'எட்டப்பன்' வரலாறு!| Dinamalar

இது 'எட்டப்பன்' வரலாறு!

Updated : பிப் 29, 2016 | Added : பிப் 29, 2016 | கருத்துகள் (11)
Advertisement
இது  'எட்டப்பன்'  வரலாறு!

திருநெல்வேலி சீமையிலுள்ள பாளையங்களில் மிகப்பெரிய பாளையம், எட்டயபுரம் இதை ஆண்ட மன்னர்கள் 'எட்டப்பன்' என அழைக்கப் பட்டனர். இம்மன்னர்களில் ஒருவரான வீரராமகுமார எட்டப்ப நாயக்கர், அங்கு எட்டிஸ்வரமூர்த்தி என்ற சிவன் கோயிலை கட்டினார்.இந்த பாளையங்களை ஆண்ட மகாராஜாக்கள், மக்களிடம் நேர்மையாகவும், அன்பானவர்களாகவும், நீதி பரிபாலனை செய்யும் பொழுது பாரபட்சமின்றியும் நடந்துகொண்டனர்.
எட்டப்ப மன்னர்களின் முன்னோர் 'சந்திரகிரி' என்ற ஊரில் ஆட்சி செய்தனர். அவர்களின் மிக சிறந்தவராக கருதப்படுபவர் குமாரமுத்து நாயக்கர். இவருக்கு இரண்டு மகன்கள். அவர்களின் ஒருவர் நல்லமநாயக்கர்; மற்றொருவர் வடலிங்கமநாயக்கர். மூத்தவர் நல்லமநாயக்கர், அப்போது விஜய நகரத்தை ஆண்ட சாம்பு மகாராஜாவை அக்கால முறைப்படி தரிசிக்க சென்றார். மகாராஜாவின் கோட்டையின் வடக்கு வாசலை சோமன் என்ற யாராலும் தோற்கடிக்க முடியாத மல்யுத்த வீரன், தன் தம்பிகளுடன் காவல் காத்தான். நீளமான தங்க சங்கிலியின் ஒரு முனையை இடது காலிலும், மற்றொரு முனையை வடக்கு வாசல் சுவற்றின் ஒரு பகுதியிலும் கட்டிக் கொண்டு காவல் காத்தான்.
இரண்டில் ஒன்று இதில் முக்கியமானது என்னவென்றால், மகாராஜாவை தரிசிக்க யார் வந்தாலும் ஒன்று அந்த தங்க சங்கிலியின் கீழ் தலை குனிந்து தரிசிக்க செல்ல வேண்டும் அல்லது மல்யுத்த வீரனுடன் போட்டியிட்டு அவனை வென்ற பின் தரிசிக்க வேண்டும் என்ற நடைமுறையை சோமன் வைத்திருந்தான். இது அவனின் பெருமையை நிலைநிறுத்துவதாக இருந்தது. மகாராஜாவை காணவரும் மக்கள், அவரது ஆட்சியின் கீழ் உள்ள குறுநில மன்னர்கள் பெரும்பாலும் சோமனின் சங்கிலியின் கீழ் தலை குனிந்தே சென்று தரிசித்தனர். ஆனால், நல்லமநாயக்கன், சோமனுடன் மல்யுத்தம் செய்து வென்று தரிசிக்க முடிவு செய்து சோமனுடன் மல்யுத்தத்திற்கு தயாரானார்.
மல்யுத்தம் :இதை கேள்விப்பட்ட வடக்கு வாயிலில் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் பெரும் ஆச்சரியம். இதுவரை யாராலும் வெற்றி பெற முடியாத சோமனை இவர் எப்படி வெல்வார் என்று. இருவருக்கும் கடுமையான சண்டை நடந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் கண் இமைக்காமல் அச்சத்துடன் சண்டை காட்சியை பார்த்தனர். கடைசியில் சோமனின் தலையை துண்டித்து, நல்லமநாயக்கன் வென்றான்.
ஒரு வல்லயத்தில் (ஈட்டி போன்றது) குத்தி அவன் தலையை ஒரு கையில் வைத்துக்கொண்டும், சோமனின் ரத்தத்தில் நனைந்த அவன் உடையை மறுகையில் வைத்துக்கொண்டும் மகாராஜாவின் தர்பார் மண்டபத்தில் விழுப்புண்களுடன் சென்று நின்றான். சோமனின் தம்பிகள் கண்ணீருடன் நல்லநாயக்கன் பின்னால் சென்றனர்.
மகாராஜாவிற்கும் தர்பார் மண்டபத்திலிருந்த, திவான், சிரஸ்தார் மற்ற பிரமுகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். யாராலும் வெல்ல முடியாத சோமனை, தன்னை காணவந்த நல்லமநாயக்கரான இவர் எப்படி வென்றார்? அதுவும் ஒரு கையில் சோமன் தலையையும் மற்றொரு கையில் ரத்தம் தோய்ந்த சோமன் உடைகளையும் ஏந்தி தன் முன் நிற்கும் நல்லமநாயக்கன், ஒரு சிறந்த வீரன் என்று தீர்மானித்தார். அக்கால வழக்கப்படி, நல்லமநாயக்கரின் வீரத்தையும், தீரத்தையும் பாராட்டி அவனுக்கு பல கிராமங்களையும், பரிசு பொருட்களையும் வழங்கி 'யாராலும் வெல்ல முடியாத சோமனை வென்ற நீ மிகச் சிறந்த வீரன்,' என பாராட்டினார். 'எட்டப்பன்' பெயர் காரணம்
தர்பார் மண்டபத்தில் நல்லமநாயக்கன் பின்னால் வந்த சோமனின் தம்பிகள், மகாராஜாவின் காலில் விழுந்து, "மகாராஜா... என் அண்ணன் இறந்து விட்டான். நாங்கள் நிற்கதியாகிவிட்டோம்," என கதறி அழுதனர்.இதை கண்ட ராஜா, நல்லமநாயக்கரை பார்த்து, "சோமனை தவிர அவர்களுக்கு யாரும் இல்லை. அவனது தம்பிகளுக்கு தாயாகவும், தகப்பனாகவும் இருந்து கண் போல காத்து, இந்த எட்டு பேரையும் உன் மகன்களாக பாவித்து அவர்களுக்கு அப்பனாக இருக்க வேண்டும்," என்றார்.
இதன்படி, சோமனின் எட்டு தம்பிகளுக்கும், அப்பனாக நல்லமநாயக்கன் இருக்க சம்மதித்ததால், அதன்பின் வந்த அவரது பரம்பரைக்கு 'எட்டப்பன்' (எட்டு அப்பன்) என பெயர் வந்தது.
'சோமன் தலை' விருது :மேலும் நல்லமநாயக்கனுக்கு தங்கத்தால் ஆன, சோமன் தலை விருதும் அளித்து, ரத்தக்கறை படிந்த அவன் துணிகளை கொடியாக (காவி நிறம்) பயன்படுத்திக்கொள்ளவும் ராஜா அனுமதித்தார். இந்த சோமன் தலை விருதை தற்போதைய ராஜா பட்டம் சூட்டும் போது, தன் இடது கணுக்காலில் அணிந்து பட்டம் சூட்டினார்.(தற்போதைய மகாராஜாவிற்கு பட்டம் சூட்டும் போது, இக்கட்டுரையாளரான நான் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது).
இவ்விருதை தான் எட்டப்ப மகாராஜாக்கள், பட்டத்திற்கு வரும்போது தமது இடது கணுக்காலில் அணிந்து கொள்ள வேண்டும். காரணம், சோமன் தலை விருதை, காலில் அணிந்தவுடன் இந்த நாக்கு இடது வலதாக அசையும். இப்படி அசைந்தால் அந்த நபரை எட்டப்ப மகாராஜாவாக சோமன் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். மன்னருக்கு மரியாதை எட்டயபுரம் மக்கள் அந்த காலத்தில் மகாராஜா மீது அபரிமிதமான அன்பும் மரியாதை கலந்த பக்தியும் வைத்திருந்தனர். மன்னர் படத்தை மக்கள் வீடுகளிலும் வைத்திருந்தனர்.
தங்கள் நிலத்தில் விளையும் தானியங்களை, ராஜாவின் களஞ்சியத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கொடுக்க வேண்டும் என்பது ஜமீனில் எழுதப்படாத சட்டம். அப்படி தானியங்களை அளந்து கொடுக்கும்போது 'லாபம் 1.., 2, 3, 4, 5, 6, 7, மகாராஜா, 9, 10,' என அளந்து கொடுப்பவர், 'எட்டு' என சொல்ல மாட்டார். ஏனென்றால் மகாராஜா பெயரை உச்சரிப்பது மரியாதைக்குரியது அல்ல என்று தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
எட்டப்பன்- கண்ணப்பன் எட்டப்ப மன்னர்களின் வழி வந்த பெண்களுக்கும், மகாராஜாவின் துணைவியர்களுக்கும் அவர்கள் பெயருடன் 'கண்ணப்பன்' என்ற பெயரை சேர்ந்து மக்கள் அழைத்தனர். மன்னர் எட்டப்பன் எல்லோரையும் தன் பிள்ளைகளாக பாவித்தது போல, மன்னர் வழி வந்த பெண்களும் மக்களை, கண் போல் காத்ததால் 'கண்ணப்பன்' என்று பெயர் வந்தது. இந்த ஜமீன்களுக்குள் புதைந்து கிடக்கும் சுவாரஸ்யங்கள் இன்னும் பல.
இதுபோன்ற வெளிவராத வரலாறுகளை இந்த கம்ப்யூட்டர் கால இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். வரலாற்றை புரிந்து கொண்டால் வாழ்க்கை அர்த்தமாகும்.
-- முனைவர் கே.கருணாகரப் பாண்டியன்வரலாற்று ஆய்வாளர்மதுரை, 98421 64097

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
14-மார்-201622:35:59 IST Report Abuse
ஏடு கொண்டலு எட்டு என்பதை எட்டய்யபுரத்து மக்கள் 'மகாராஜா' என்று அழைத்தது போலவே சிவகங்கைச் சீமையில் மருது பாண்டியர் ஆட்சியின்போது மருத மரத்தை வெட்டுவதை மக்கள் தவிர்த்தனர் என்று உ வே சா கட்டுரை ஒன்றில் படித்த நினைவு. இந்த மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள் சிதிலமடைந்து கிடப்பதை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப் பக்கத்தில் கண்டு வருந்தினேன். இவர்கள் வெள்ளைக் காரர்கள் பக்கம் நின்றார்கள் என்று நொண்டிச் சமாதானம் சொல்லாமல் அவற்றைப் புதுப்பித்து அருங்காட்சியகமாக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Dr. D.Muneeswaran - Kavasakottai, Madurai,இந்தியா
11-மார்-201612:30:37 IST Report Abuse
Dr. D.Muneeswaran நல்ல கட்டுரை ,
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
07-மார்-201608:12:30 IST Report Abuse
Raj Pu இப்படித்தான் ஆண்டாண்டு காலமாய் உண்மைகள் பொயாவதும் பொய்கள் கோலோச்சுவதும் நடக்கிறது இன்று ஊடகங்கள் இப்பணியை செய்கின்றன, அன்று அரசு அமைச்சு மூலம் இது நடைபற்றது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X