அடையாறும் அதன் கரைகளும்| Dinamalar

அடையாறும் அதன் கரைகளும்

Added : பிப் 29, 2016 | கருத்துகள் (5)
Advertisement
அடையாறும் அதன் கரைகளும்

அன்றைய நாட்களில், நாகரிகத்தில் இந்தியர்களை விடப் பின்தங்கியிருந்த ஐரோப்பியர்கள், கடல்வழி வணிகத்தின் பெருமையை முற்றிலும் உணர்ந்து, இந்தியாவின் செல்வத்தையும் தெரிந்து கொண்டு, 15ம் நூற்றாண்டில் இந்தியாவை நோக்கித் தம் பார்வையைத் திருப்பினர். அன்று, இந்திய நாடு ஒற்றுமை குலைந்து பல சிற்றரசர்கள் தமக்குள் போர் புரிந்து கொண்டிருந்த நேரம். ஐரோப்பியர்களின் ஆளுமைக்கு ஒரு பெரும் நல்வரவளிக்கும் விருந்தாகவே ஆகிவிட்டது.

பொருளீட்டுவதற்காக ஸ்பானியர் களுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் கீழைநாடுகளை நோக்கிச் செல்லும் அவா ஏற்பட்டபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியைத் தீர்த்து வைக்க அன்றைய போப்பாண்டவர் முன் வந்தார். ஏனெனில் அவ்விரு நாட்டினரும் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் மத்தியஸ்தத்திற்கு போப்பாண்டவரை நோக்கினர். 'பேப்பல் புல்' என்றறியப்பட்ட போப்பாண்டவரின் ஆணை, 1493ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது.

அதன்படி உலகை அசோரஸ் என்ற தீவின் வழியாக, வடக்கிலிருந்து தெற்காக இரண்டாகப் பிரித்து, கிழக்குப் பகுதிகளை போர்த்துகீசியர்களுக்கும் மேற்குப் பகுதிகளை ஸ்பானியர்களுக்கும் அவர் பகிர்ந்தளித்தார்.
ஆங்கிலேயர்களின் தேர்வுநில, நீர் ஆக்கிரமிப்புகள் ஒன்றும் புதிதல்ல; அன்றே துவங்கி விட்டன. வேடிக்கை என்னவெனில் இவ்வுலகம் போப்பாண்டவருக்கும் சொந்தமானதல்ல! அவ்வாறுதான் வாஸ்கோடகாமா, கோழிக்கோடு வந்தடைந்து மெல்ல மெல்ல இன்றைய கேரள நாட்டின் முக்கியப் பகுதியைப் போர்த்துகீசியர்களுடையதாக்கிக் கொண்டான்! அங்கிருந்து போர்த்துகீசியர்கள், கோரமண்டலக் கரையிலும் தமது ஆக்கிர மிப்பைக் கிறிஸ்தவ மத பரப்புதலுடன் துவக்கினர். 16ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அவர்கள், இன்றைய சாந்தோமை அடைந்தனர்.

சாந்தோம், அன்று மயிலாப்பூரின் ஒரு பகுதியாக இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, மயிலாப்பூர் ஒரு பாதுகாக்கப்பட்ட துறைமுகமாக விளங்கியதற்குச் சான்று, பொன்னேரி, வீற்றிருந்த பெருமாள் கோவிலில், 11ம் நூற்றாண்டின் கல்வெட்டாகக் காணக் கிடைக்கின்றது. மயிலாப்பூரின் தெற்குப் பகுதி, அடையாறு கடலில் சங்கமிக்கும் இடத்திற்கு சற்றே வடக்கில் இருந்தது. கோரமண்டல் கரை வந்த போர்த்துகீசியர்கள், அடையாறு சங்கமிக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வடக்கில், தமது கோட்டை ஒன்றை அமைத்தனர்.

தமது வணிகத்திற்காக, ஆங்கிலேயர்கள், 17ம் நூற்றாண்டு துவக்கத்தில், கோரமண்டலக் கரையில் ஒரு ஆற்றின் முகத்துவாரத்தைத் தான் தேடிக் கொண்டிருந்தனர். அடையாறு முகத்துவாரம் சிறந்ததாகத் தெரிந்தாலும், அருகில் போர்த்துகீசியர்கள் இருந்தமையால், கூவம் முகத்துவாரத்தைத் தேர்ந்தெடுத்தனர். வடக்கில் பழவேற்காடு, டச்சுக்காரர்கள் கைகளில் இருந்தது. போர்த்துக்கீசியர்களின் சாந்தோம் கோட்டை, ஆங்கிலேயர்களால் 17ம் நூற்றாண்டு இறுதியில், தரைமட்டமாக்கப்பட்டது. 1749ல் அந்த இடம், ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமாகிற்று.

அப்போது அடையாறு, ஒரு சிறந்த ஆறாகத் திகழ்ந்தது. அது கடலில் கலக்குமிடம் -கழிமுகப் பகுதி, இயற்கையின் எழில் மிகு பகுதியாக அமைந்திருந்தது. பறவைகளின் ஒரு பெரும் சரணாலயமாகவும் இருந்தது. கடந்த, 1639ல் இங்கு வந்த ஆங்கிலேய வணிகர்களான ஆண்ட்ரூ கோகன் எனபவரும் பிரான்சிஸ் டே என்பவரும், அன்றைய நாயக்க அரசப் பிரதிநிதியான தாமரல வெங்கடாத்ரியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு, கூவம் முகத்துவாரத்தில் தமது வணிக தலத்தை நிறுவிக் கொண்டனர். அதுதான் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டையாக உருவானது.

அப்போது, சாந்தோமில் போர்த்துகீசியர் பலம் சற்றே குறைந்திருந்தது. ஆங்கிலேயர் பிராடஸ்டண்டு பிரிவை சேர்ந்தவர்கள்; போர்த்துகீசியர்கள் கத்தோலிக்கர்கள். ஆகையால் இருவரிடையேயும் பகை புகைந்து கொண்டு இருந்தது.பண்ணை வீடுகள்அழகான அடையாற்றங்கரையோ ஆங்கிலேயர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தது. இருமருங்கிலும் பசுமை நிறந்து கண்கொள்ளாக் காட்சியாக அது இருந்தது. நீளத்தில் கூவத்தை விட குறைவான அடையாற்றின் பிறப்பிடம் கூடுவாஞ்சேரி செம்பரம்பாக்கம் ஏரியருகில், செம்பரம்பாக்கம் போன்ற சில நீர்நிலைகளின் உபரிநீரும், மற்ற சில ஆறுகளின் உபரிநீரும் அடையாற்றில் கலந்து ஓடுகிறது.

இந்தியாவின் சிறந்த நதிகளைப் போல ஏதோ மலைப்பாங்கான இடத்தில் தோன்றிய நதியல்ல அடையாறு; ஏரிகளின் உபரிநீர் வடியும் ஒரு வடிகால் தான். அங்கிருந்து, 40 கி.மீ., ஓடிய பின், கடலில் சங்கமிக்கிறது. சென்னை நகரத்தில், நந்தம்பாக்கம் வாயிலாக நுழையும் அடையாறு, நகரத்துள் 13.5 கி.மீ., தூரத்திற்கு ஓடுகிறது. கூவத்தைப் போலல்லாது, இதன் முகத்துவாரம் விரிந்து பரந்து கிடக்கிறது. இந்த முகத்துவார பரப்பளவு, 300 ஏக்கர். சென்ற நூற்றாண்டின் முதல் பாதி வரை இப்பகுதி, சிறந்த மீன்வள நீர்ப் பரப்பாக இருந்தது. மீனவர்கள் வாழ்வாதாரமாகவும் விளங்கியது. சுற்றிலும் பெரும் மீனவ சமுதாயமே செழிப்பாகத் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தது.

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில், மாசு மிக்க பகுதியாக மாறி மீன்வளம் செத்து விட்டது. சுனாமியின் போது நடந்த நல்ல நிகழ்வு, பின்னோக்கி வந்த பேரலைகளால் (அவை சைதாப்பேட்டை வரை வெள்ளமெடுத்தன) அடையாற்றின் பெரும்பகுதி சுத்தப்படுத்தப்பட்டு விட்டது தான்!


பதினேழாம் நூற்றாண்டின் இறுதி வரை, ஆங்கிலேயர் சென்னையின் இன்றைய தெற்குப் பகுதிக்கு வரவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டிலும், அதன் பின்னரும் தமது ஆக்கிரமிப்புகளை அவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கையில், தெற்கு நோக்கி நகர்ந்தனர். சிறு கிராமங்கள் வழியாக எழில் மிகு நதியாக ஓடிக்கொண்டிருந்த அடையாற்றின் இரு மருங்கிலும், சிறு கோவில்களும் வசிக்குமிடங்களும் அமைந்திருந்தன. சலனமற்ற அந்நாட்களின் வாழ்வு சிறந்ததாக இருந்திருக்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் இயற்கையை ரசித்தவர்கள். அடையாற்று கரையினில் அவர்கள் பண்ணை வீடுகள் கட்ட துவங்கினர். இந்த இடத்தைப் பற்றிய முதற்குறிப்பு, மெட்ராஸ் கலெக்டரின் 1806ம் ஆண்டு அறிக்கையில் தென்படுகிறது. அதன்படி ஒரு பெரும் பரப்பளவு (50 காணி நிலம்) பனை மரத் தோட்டமாக இருந்தது. அதன் உரிமையாளர் வெங்கடாசலபதி என்பவர். 1807ம் ஆண்டில் அதிகார பூர்வமாக இந்த சொத்துரிமை அவருக்குக் கலெக்டரால் அளிக்கப்பட்டது. அதற்குப் பின்புலமாக இருந்தவர் ஆலந்த நாராயணசுவாமி நாயக் என்பவர். அங்கு இரு சிறு கோவில்களும் இருந்தன. அதில் ஒன்று கடாரி அம்மன் கோவில்.

இந்த நாயக், அடையாற்றின் வடகரை முழுவதையும் சொந்தம் கொண்டாடியவர்! துரதிர்ஷ்டவசமாக இவர் முத்துக் குளிப்பதில் போட்டிருந்த செல்வமெல்லாம், 1821ல் தொலைந்து விட, இவ்விடங்கள் ஆங்கிலேய பிரபுக்களுக்கு விற்கப்பட்டன. கடந்த, 1792ல் இருந்து, 1831 வரை ஐ.சி.எஸ்., அதிகாரியாக இருந்த, எல்.ஜி.கே.முர்ரே என்பவரிடம், நாயக் கடன்பட்டிருந்தார். ஆகையால் அவர் கைக்கு, நாயக்கின் பெரும் பகுதி சொத்துகள் போய்விட்டன.

பிராடீஸ் கேசில் அவர் இந்த நிலங்களை, எட்வர்ட் பிரான்சிஸ் எலியட் என்பவருக்கு விற்றார். இவர் பெயரில் தான் எலியட்ஸ் பீச் இன்று அறியப்படுகிறது. இந்த எலியட்டின் தந்தை, மெட்ராஸ் கவர்னராக 1814 - 1820 காலகட்டத்தில் இருந்தவர். பின்னர் பல கைகள் மாறி நிலங்கள் பக், நார்ட்டன் போன்றோருக்குச் சொந்தமாயின. அடையாற்று கரையை ஒட்டிய இடங்கள் விற்கப்பட்டு, அங்கு ஆங்கிலேயர்கள் தமது பண்ணை வீடுகளைக் கட்டிக் கொண்டனர். மேற்கு முனையில் அவ்வாறு கட்டப்பட்ட வீடுகளில் ஒன்று தான் கிரேஞ்ச் என்று அன்றறியப்பட்ட இன்றைய காஞ்சி என்னும் இல்லம். இப்போது அண்ணா மேலாண்மைக் கல்லூரி. 1853ம் ஆண்டு ஜான் ப்ரூஸ் நார்ட்டன் (நன்கறியப்பட்ட வக்கீல் நார்ட்டனின் தந்தை) என்பவரால் இது கட்டப்பட்டது.

அன்றைய பிராடீஸ் கேசில் - இன்றைய தென்றல் (இசைக் கல்லூரி) எனப்படும் கட்டடத்தின் கதையே விசித்திரமானது. சாந்தோமின் தெற்குப் பகுதியில், கிவிபிள் தீவு என்பது அடையாறு முகத்துவாரத்தில் உள்ளது. இப்போது அது கல்லறைகள் நிறைந்த இடம். அதன் தெற்கில் அடையாற்றங்கரையின் எழிலில் மயங்கிய ஜேம்ஸ் பிராடீ என்ற ஆங்கிலேயர், இங்கு, 11 ஏக்கர் நிலத்தை வாங்கி,1796 - -98ல் ஒரு பெரும் மாளிகை கட்டினார். அதன் பெயர்தான் பிராடீஸ் கேசில்.

அங்கு குடியேறும் முன்னரே அவர் மனைவி ஒரு கெட்ட கனவு கண்டதாகவும், அதனால் அவருக்கு அவ்வீடு செல்லத் தயக்கம் இருந்ததாகவும், பென்னி என்ற ஆங்கிலப் பெண்மணி, 'கோரமண்டல் கோஸ்ட்' என்ற பத்திரிகையில் கூறியுள்ளார். அவர்கள் அங்கு குடியேறியவுடன் அவர்களது, 600 ஆண்டுகள் பழமையான குடும்ப ஆவணங்கள், ஒரு தீ விபத்தில் சாம்பலாயின. சில நாட்களுக்குப் பின், பிராடி ஒரு படகில் தனது வீட்டருகில் அடையாற்றில் பொழுது போக்கச் சென்று கொண்டிருக்கையில், படகு கவிழ்ந்து அவர் அங்கேயே மூழ்கி இறந்தார். தாளாத துயரத்தில் அவரது மனைவி அங்கிருந்து வேறு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

கடந்த, 1866ம் ஆண்டில் ஜான் மெக்கைவர் என்பவர் இங்கு குடியேறினார். 1866 டிச., 23ம் தேதி அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட இவ்வீட்டிற்கு கர்னல் டெம்பிள் என்பவர் விருந்தாளியாக வந்திருந்தார். அவர் மெக்கைவரின் இரு குமாரிகளையும் அழைத்துக் கொண்டு, கேப்டன் ஹோப் ஸ்கட்மோர் போஸ்டாக் என்பவருடன் ஒரு படகில் உல்லாசமாகச் சென்றார். ஆனால் அடையாற்றின் துரோகத்தால் (அப்படித்தான் அவர்கள் கருதினர்) அந்த படகு கவிழ்ந்ததில் அடையாற்றின் பசிக்கு, போஸ்டோக் தவிர மற்றவர்கள் விருந்தாகினர். அன்றிலிருந்து அந்த மாளிகை பேய் மாளிகையாகிவிட்டது!

இன்று பிராடீஸ் கேசில் என்ற பெயர் மாற்றப்பட்டு, தென்றல் என்ற பெயரில், இசைக் கல்லூரி செயல்படுகிறது . கடந்த, 1700களில் அடையாறுதான் சென்னையின் தெற்கு எல்லையாகத் திகழ்ந்தது. ஆயினும் இரண்டு ஆங்கிலேயர்கள் ஆற்றைத் தாண்டித் தெற்கில் பண்ணை வீடுகள் கட்டினர்.

-- -தொடரும்

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
12-மார்-201602:17:13 IST Report Abuse
jagan தமிழ்நாடு பாளையகார்கள் ( 74 மொத்தம் ) கொடுங்கோல் மன்னர்கள். இவர்களில் 72 பேரை யூசுப் அலி கான் என்கிற மருதநாயகம் கொன்றான்...மேலும் முகலாயர் சிவாஜியுடன் சண்டை, ஆர்க்காடு நவாப், சந்தா சாகிப் ( கர்நாடிக் ) சண்டையின் போது, இவர்கள் படை திரட்ட வெள்ளையனிடம் ( கம்பினி ) கை நீட்டி காசு வாங்கினார்கள்...திருப்பி குடுக்க முடியாத ( வக்கில்லாத என்றும் கொள்ளலாம் ) போது, கிராமங்களுக்கு வரி வசூல் (கிஸ்தி) செய்து எடுத்துகொள் என்று நம் மன்னர்கள் சாசனம் எழுதி கொடுத்துவிட்டார்கள்....குடுத்த காசை அவனுக்கு வசூல் செய்யும் படை பலம்/திராணி இருந்தது, நாட்டை பிடித்தான்....வரலாற்று படி பார்த்தால், நம் மன்னர்களிடமே அதிக குற்றம் உள்ளது....
Rate this:
Share this comment
Cancel
Karthi Natraj - chennai,இந்தியா
08-மார்-201620:26:13 IST Report Abuse
Karthi Natraj தமிழன் இன்னும் திருந்தவில்லை. அன்று வெள்ளையனிடம் அண்டி பிழைத்தான், இன்றோ அரசியல்வாதியிடம் 500/1000 க்கும் அடிமையை இருக்கிறான். அன்று கொள்ளைக்காரன் அள்ளி சென்றான் கேட்கவில்லை, இன்று தீவிரவாதிகளுக்கு உதவுபவர்களை எதிர்க்கவில்லை. நமக்குள் ஒற்றுமை இல்லையெனில் யாரும் உதவ இல்லை...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
02-மார்-201604:59:29 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எங்கேருந்து வந்தோ தன மதத்தையும் பரப்பி காசும் பார்த்து செர்த்துன்ன்டுதான் போனாக , எல்லாம் இருந்தும் லக்ஷம் சாதிகல்வச்சுண்டு நீ ஒசத்தி நீமட்டம்னு குறையே சொல்லின்னு நம்மளையே நாம் எமாத்திண்டு அடிச்சுண்டு சாவுறோம் இதுலே பல கச்சிக்காரனுகளும் அடக்கம் ஒலைகுடிசெலே இருந்தவங்கல்லாம் இன்று மாடமாளிகைலே இருக்காங்க அடிமட்டத்து உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சுண்டு , நாம் எமார்ரபடுகிரொம்னுகூட தெரியாமல் அலற தம் உழைப்பை நல்கி இன்னம் எசிகலாவே இருக்காங்க பாவம் , எவ்ளோ துட்டுவந்தாலும் தெருவுலே கிடக்கும் 10ரூ நோட்டுக்கு பறக்குரஅணுக அளப் பிசினாரிக
Rate this:
Share this comment
Raj Pu - mumbai,இந்தியா
14-மார்-201614:25:55 IST Report Abuse
Raj Puஎங்கிருதோ வந்தான் தமிழனின் சிவநெறியை வைணவம் என்னும் மார்க்கமே மேல் என்று தோற்றம் செய்து பிறப்பில் உயர்வு தாழ்வு நிலையையை ஏபடுத்தி, பிறகு முகலாயரின் இந்து மதம் என்னும் சொல்லை தமிழன் மேல் ஏற்றி படிப்பு இன்றி கூலி இன்றி தமிழன்னை விலங்கினும் கேவலமாக மாற்றியது யார்<...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X