தேர்தலும் சட்டங்களும் 5| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

தேர்தலும் சட்டங்களும் 5

Added : மார் 01, 2016
Advertisement

தேர்தல் சம்பந்தப்பட்ட சட்டங்களில் தலையாயது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951. அந்த தேர்தலை நடத்தும் ஆணையம் அமைக்கப்படும் விதம், அந்தத் தேர்தல் ஆணையத்தின் கடமைகள், உரிமைகள், அந்தஸ்து போன்றவை குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 எந்த இடத்திலேனும் ஆணையம் என்றோ தேர்தல் ஆணையம் என்றோ குறிப்பிடுமாயின் அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 324-329A வரையான பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட வகைமைகளின் கீழ் அமைக்கப்பட்ட தேர்தல் ஆணைத்தையே அது குறிக்கிறது.தேர்தல் ஆணையம் என்பது மேற்சொன்ன அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவின் கீழ், ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரியும் இவருக்கு உதவியாக மற்ற தேர்தல் ஆணையர்களையும் கொண்டிருக்கும். இவர்களை குடியரசுத் தலைவரே நியமிப்பார்.மற்ற தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படும்போது, தலைமைத் தேர்தல் ஆணையாளர் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருப்பார் என ஆர்டிகில் 324 (3) கூறுகிறது.மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலுக்காக குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்த பிறகு, தேர்தல் ஆணையாளர் தன் தேர்தல் கடமைகளை நிறைவேற்ற உதவியாக வட்டார ஆணையாளர்களை நியமித்துக் கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர்களாக இருப்பவரும் தலைமைத் தேர்தல் ஆணையருக்குச் சமமான்வரே. தேர்தல் ஆணையத்திற்குள் ஒத்த கருத்து இல்லாத போது, இந்த மூவரில் பெரும்பான்மையரின் கருத்தே மேலோங்கும்.இது குறித்த இந்த முடிவு பிரபலமான வழக்கான T.N.ஷேஷன் அவர்களின் வழக்கில் தீர்ப்பானது.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 324(2)ல் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி 1993-ல் திரு. எம் எஸ் கில் மற்ரும் திரு GVG. க்ருஷ்ண மூர்த்தி இருவரை தேர்தல் ஆணையாளர்களாக குடியரசுத் தலைவர் நியமித்தார். அக்டோபர் 2, ம் தேதி 1993-ல். இந்திய அரசு ஒரு அவர்சச் சட்டம் (Ordinance) ஒன்றைப் பிறப்பித்தது. அதன் படி, தேர்தல் ஆணையத்தை பல்நபர் ஆணையமாக மாற்றியமைத்தது.அதாவது, தேர்தல் ஆணையத்தின் கீழ் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட, தலைமைத் தேர்தல் ஆணையர், மற்றும் மற்ற இரு தேர்தல் ஆணையர் அனைவருக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு என எந்த சிறப்பு முடிவெடுக்கும் அதிகாரமும் வழங்கப்படவில்லை. அதாவது தேர்தல் ஆணையர்களுக்குள் ஒத்த கருத்தில் செயலாற்ற வேண்டும். அவர்களுக்குள் மாற்றுக் கருத்து இருந்தால், பெரும்பான்மையான கருத்தே ஏற்கப்பட வேண்டும் என்பதே அந்த ஆர்டினன்ஸ் சொல்வது. ஆனால், அதுவரை ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரியும், இரு தேர்தல் அதிகாரிகளும் என இருந்த நிலை மாறி மூவருக்கும் ஒரே அந்தஸ்து அதாவது பல்நபர் தேர்தல் ஆணையமாக மாறியது.குடியரசுத் தலைவரால் கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டத்தின் படி தேர்தல் தொடர்பான அத்தனை வேலைகளும் பல்நபர் தேர்தல் ஆணையமாகவே நடைபெறவேண்டும் எனப்பட்டது. 'அன்று தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த திரு. டி.என்.சேஷன் அவர்களின் செயல்பாடுகள் மீதான குற்றச்சாட்டாகவே இந்த அவசரச் சட்டம் அமைந்தது எனும் கருத்து எழுந்தது.இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து அன்று தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த திரு டி.என்.சேஷன் அவர்கள் வழக்கிட்டார். இது தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான குழப்பமாக மாறியது. இதை ஒட்டி, திரு சேஷன் அவர்கள் சில இடைத் தேர்தல்களையும், (ராஜ்ய சபா, மாநில சட்டசபை) ஒத்தி வைத்தார். அது போக, தேர்தல் சமயத்தைல் CPF ஐ எந்த எந்த இடங்களில் பயன்படுத்தவேண்டும் என முடிவெடுத்து அதை அரசைக் கொண்டு செயல்படுத்தச் செய்யும்(direct the government) தேர்தல் ஆணையத்திற்கே உண்டு எனவும், தேர்தல் பணிகளில் (poll duty) ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நபர்கள் செய்யும் குற்றங்களுக்கு இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு எனவும் உச்ச நீதிமன்றத்தின் முன் தேர்தல் கமிஷனால் விண்ணப்பிக்கப்பட்டது.தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு என தனி (exclusive) அதிகாரம் இல்லாததை எதிர்த்து போடப்பட்ட வழக்கினை ஒட்டி, டி என் சேஷனுக்குச் சாதகமாக இடைக்கால உத்திரவு ஒன்றைப் பிறப்பித்தது. ஆனால் அதே வழக்கில் 1995ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில்,தேர்தல் சம்பந்தமான வேலைகள் அனைத்திலும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் அளவு கடந்தது என்பதால், அந்த அதிகாரம் தேர்தல் தலைமை ஆணையர் எனும் ஒரு நபரிடம் மட்டும் குவிவது இந்திய இறையாண்மைக்கு நியாயமானது அல்ல என்பதால் டி என் சேஷனுக்கு எதிராக, அதாவது பல்நபர் தேர்தல் ஆணையத்தையும் அதுகுறித்து அரசு வெளியிட்ட அவசரச் சட்டத்தையும் ஆதிரித்து தீர்ப்பு வெளியிட்டது. ஆனாலும் அதன் பின்னிட்டும் டிஎன் சேஷன் அவர்கள் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதிலும் பல்நபர் ஆணையமே சரி என முடிவானது.ஆகவே, பிற ஆணையர்களை விட தலைமை தேர்தல் ஆணையாளர் முழு அதிகாரம் படைத்தவர் அல்ல. அனைவரின் நிலையும் அந்தஸ்தும் அதிகாரமும் ஒன்றே.தேர்தல் ஆணையத்தின் கடமைகள் என்றால், தேர்தலை நடத்துவதில், வாக்காளர் பட்டியலை தயாரிப்பதில் ஆரம்பிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 324(1)ன் படி பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் மற்றும் குடியரசுத் தலைவர்ம் குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர்களின் தேர்தலுக்குண்டான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.தேர்தலை நடத்தி, கண்காணித்து, நெறிப்படுத்தி கட்டுப்படுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் முழு பொறுப்பே.பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதிகளை அந்தத் தேர்தலில் வேட்பாளராக நிற்பவர் கொண்டிருக்காவிட்டால் (போன கட்டுரையில் வேட்பாளரின் தகுதியின்மைகள் பற்றிப் பார்த்தோமல்லவா? அவை இல்லாத ஒருவர் வேட்பாளராக நின்றால்) அதுகுறித்து, அவரது தகுதி இன்மை குறித்து கருத்துரை ஒன்றை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அவரைத் தகுதியற்றவராக குடியரசுத் தலைவர் விளம்ப வகை செய்ய வேண்டும்.மேலும் சில சூழல்களில் தொகுதி முழுமைக்கும் மறு வாக்கெடுப்பு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் (Mahinder Singh Vs Chief Election commission of India).தேர்தல் ஆணையத்தின் செயல்பாடானது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 324-ற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அந்தப் பிரிவின் வகையங்களூக்கு உட்பட்டு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருக்கும் வரை நீதிமன்றம், அரசு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் தலையிட முடியாது. உதாரணமாக, தேர்தல் ஆணையம் வாக்களர் பட்டியலைத் தயாரிக்கிறது. அதில் கால ஒட்டத்தில் சில சமயங்களில் திருந்தங்கள் செய்யப்பட வேண்டி இருக்கலாம். அப்படி ”வாக்காளர் பட்டியலைத் திருத்தி அமைக்கும் வரை தேர்தலை நடத்தக் கூடாது' என தேர்தல் ஆணையத்திற்கு, நீதிமன்றம் உத்தரவு போட முடியாது என இந்தர்ஜித் எதிர் தேர்தல் ஆணையம் வழக்கில் தீர்ப்பானது.அப்படியாயின், தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் நீதிமன்றம் தலையிடவே முடியாதா? எனும் கேள்வி எழலாம். ஆம். தேர்தல் விசயங்களில் நீதிமன்றம் தலையிட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 329 (a) தடை செய்கிறது. அதன் படி தேர்தல் ஆணையத்தின் முடிவெடுக்கும் உரிமைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தொகுதிகளை வரையறுத்தல், தொகுதிகளில் இட ஒதுக்கீட்டைச் செய்தல் தொடர்பான தேர்தல அணையத்தின் முடிவுகளில் எந்த நீதிமன்றத்திலும் வினா எழுப்ப இயலாது. ஆனால், பாராளூமன்ற அவைகளுக்கு, மாநில சட்டமன்ற அவைகளுக்கு உண்டான தேர்தலை எதிர்த்து, நீதிமன்றத்தில் வினா எழுப்ப இயலாது என்ற போதிலும், உரிய சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் வாயிலாக ஏற்படுத்தப்பட்ட அதிகார அமைப்பின் முன்பு ஒரு தேர்தல் மனுவைத்(an election petition) தாக்கல் செய்வதன் மூலம் எதிர்த்து வாதாடலாம்.Ponnusamy Vs Returning Officer எனும் வழக்கில், வேட்பாளராக விண்ணப்பித்த விண்ணப்பமானது Returning Officer ஆல், நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து விண்ணப்பதாரர் உயர் நீதிமன்றாத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், Rerutning Oficer செயலை இல்லை என ஆக்கும்படி கோரி இருந்தார். அதாவது விண்ணப்பமனுவை நிராகரித்ததை எதிர்த்திருந்தார். அத்தோடு தனது பெயர வேட்பாளர் பட்டியலில் இணைக்கும்படியும் கோரி இருந்தார். ஆனால் உயர் நீதிமன்றமானது தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலில் நீதிமன்றத்திற்கு தலையிடும் அதிகாரம் இல்லை எனவும், அதனால் இந்த ரிட் மனு நிலைக்கத் தக்கதல்ல என்றும் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும், ஒரு வேட்பாளர் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்பதும் நிராகரிப்பதுமான செயல் ”தேர்தல்” எனும் பததினுள் அடங்குவதால், ஒரு நீதிமன்றத்தின் பரவெல்லைக்குள் (Jurisdiction) வராது என்றும், ஆனால் அதே பிரச்சனை election petition மூலம், தேர்தல் முடிந்த பிறகே நீதிமன்றத்தின் முன் கொண்டு வர முடியும் என்றும் தீர்ப்பானது.K.venkatachalam Vs Swamickan வழக்கில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் அவ்விதம் உறுப்பினராக இருக்கும் தகுதியினைக் கொண்டிருக்கவில்லை எனத் தெரியும் பட்சத்தில், அவர் அவையில் அமர்ந்தாலோ, வாக்களித்தாலோ, அவ்விதம் அமர்ந்த காலத்திற்கு அவர் அபராதம் செலுத்த வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆர்டிகில் 193 கூறுகிறது. அதாவது தேர்தல் முடிந்த பிறகு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு அக்குற்றம் தெரிய வரும்போது நீதிமன்றத்தின் முன் வழக்கிட்டு, அதாவது நீதிமன்றம் தலையிட்டு அவரை விசாரிக்கலாம். அதற்கு ஆர்டிகில் 329-ன் கீழான பாதுகாப்பு கிடையாது என தீர்ப்பானது.ஆக, ”தேர்தல்” மற்றும் “தேர்தல் ஆணைய பணிகள்” இவற்றின் நிகழ் சமயத்தில் நடக்கும் சம்பவங்களின் மீது நீதிமன்றம் தலையிடாது. அதைப் பற்றி வினவ வேண்டும் எனில் election petition மட்டுமே. ஆனால், அதன் பின்னிட்டு எழும் பிரச்சனைகளில் நீதிமன்றம் தலையிடலாம்.ஆக, இங்கே நாம் அறிந்து கொண்டவைதேர்தல் பற்றி மக்கள் பிரதிநிதித்துவம் சொன்னாலும் தேர்தல் ஆணையம் பற்றி இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே சொல்கிறது.தேர்தல் ஆணையம் என்பது பல்நபர் ஆணையம். ”தேர்தல்” எனும் பதத்தினுள் வரும் சம்பவங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது.தேர்தல் குறித்து இந்தத் தேர்தலுக்குள் நாம் அறிய வேண்டியது இன்னும் இன்னும். ………………………….(சேர்ந்தே அறிவோம்)…………………………………_ஹன்ஸா (வழக்கறிஞர்)Legally.hansa68@gmail.comவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X