கடத்தப்பட்ட காரு இங்கே... கார்ல இருந்த தங்கம் எங்கே?| Dinamalar

கடத்தப்பட்ட காரு இங்கே... கார்ல இருந்த தங்கம் எங்கே?

Added : மார் 01, 2016
Share
நஞ்சுண்டாபுரம் ரோட்டில் நடந்த விரிவாக்கப்பணியால் ஊர்ந்து சென்று கொண்டிருந்த வண்டிகளில், மித்ராவின் 'டியோ'வும் ஒன்று. பின்னால் உட்கார்ந்திருந்த சித்ரா கேட்டாள்.''பாலம் கட்டுறப்பவே, இந்த ரோட்டை அகலப்படுத்தியிருந்தா, இப்போ இவ்ளோ அவதிப்பட வேண்டியதில்லை. அப்பவே, பத்திரிகைகள்ல எழுதுனாங்க. அதெல்லாம் யாரு கேட்டா?''''இதை மட்டுமா...பேப்பர்ல, 'டிவி'யில போட்ட எந்தப்
கடத்தப்பட்ட காரு இங்கே... கார்ல இருந்த  தங்கம் எங்கே?

நஞ்சுண்டாபுரம் ரோட்டில் நடந்த விரிவாக்கப்பணியால் ஊர்ந்து சென்று கொண்டிருந்த வண்டிகளில், மித்ராவின் 'டியோ'வும் ஒன்று. பின்னால் உட்கார்ந்திருந்த சித்ரா கேட்டாள்.
''பாலம் கட்டுறப்பவே, இந்த ரோட்டை அகலப்படுத்தியிருந்தா, இப்போ இவ்ளோ அவதிப்பட வேண்டியதில்லை. அப்பவே, பத்திரிகைகள்ல எழுதுனாங்க. அதெல்லாம் யாரு கேட்டா?''
''இதை மட்டுமா...பேப்பர்ல, 'டிவி'யில போட்ட எந்தப் பிரச்னைக்குதான், இந்த கவர்மென்ட்ல நடவடிக்கை எடுத்திருக்காங்க.
அப்பிடியெல்லாம் எடுத்திருந்தா, ஊர்ல பாதி பிரச்னை தீர்ந்திருக்குமே'' என்றாள் மித்ரா.
''பேப்பர்ல போட்டா போட்டுட்டுப் போறாங்க. நீங்க எதையும் கண்டுக்க வேணாம்னு ஆளும்கட்சி விஐபி சொன்னதாலதான், நம்மூரு ஆபீசருங்க யாருமே, என்ன நியூஸ் போட்டாலும், நடவடிக்கையும் எடுக்குறதில்லை. பயப்படுறதுமில்லை. இப்போ, எலக்ஷன் வர்றப்போ, மக்களுக்கு பதில் சொல்லியாகணும்ல'' என்றாள் சித்ரா.
''ஓட்டுப்போடுற மக்கள், யாரு பேப்பரைப் பாத்து முடிவெடுக்கப்போறாங்க. துட்டைக் கொடுத்தா, ஓட்டைப் போடுவாங்கங்கிற நம்பிக்கையில தான், பல பேரு திரியுறாங்க'' என்றாள் மித்ரா.
''ஆனா, ஓட்டை மட்டுமில்லை. சீட்டைக் காலி பண்ற பல விஷயங்கள், வெளியாகப் போகுதாம். மினிஸ்டர் ரமணா ஸ்டைல்ல, நம்மூருலயும் விஐபிக்களோட வீடியோ, பரவிட்டு இருக்காம். நீ ஏதாவது பார்த்தியா?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.
''நானும் கேள்விப்பட்டதுதான்க்கா. அது உண்மையா, இல்ல வதந்தியா, மெரட்டுறதுக்காக, இப்படிப் பரப்புறாங்களா ஒண்ணுமே புரியலை. ஆனா, எலக்ஷன் டைம்ல இறக்குறதுக்குன்னே, பல பேரோட போட்டோஸ், வீடியோ, ஆவணமெல்லாம் தயாராயிட்டு இருக்கு'' என்றாள் மித்ரா.
''ஒனக்குத் தெரிய, யாரோட போட்டோவாவது சிக்கிருக்கா?''
''நம்மூரு அரச குமாரனும், எதிர்க்கட்சியில இருக்குற 'வள்ளல் வாரிசு'ம், உற்சாகத்துல மெதக்குறா மாதிரி ஒரு போட்டோவைப் பார்த்தேன். அது ஒட்டு வேலையா, ஒரிஜினலான்னு தெரியலை''
''உற்சாகம்னு சொன்னியே...கார்ப்பரேஷன் பட்ஜெட் கூட்டத்தன்னிக்கு, நம்ம கவுன்சிலர்க பல பேரு, படுஉற்சாகமா இருந்தாங்க. அந்தக் கூட்டத்துல, லேடி கவுன்சிலர்க பட்ட பாட்டை, வீடியோவுல பார்க்கணுமே...பரிதாபம். மதியம் சாப்பாடு முடிஞ்சு வந்தப்போ, கவுன்சில் ஹால்ல, பிரியாணி வாசத்தை விட, வேற வாசம்தான் துாக்கலா இருந்துருக்கு''
''அது மட்டுமா... அன்னிக்கு கவுன்சில் ஹால்ல வச்சு, சேச்சி, புலியகுளம் கட்டப்பஞ்சாயத்து கவுன்சிலரு, டவுன் ப்ளானிங் கவுன்சிலரு பேசுன கெட்ட வார்த்தைய கேட்டா காதுல ரத்தம் வந்துரும்னாங்க. கவுன்சிலர்க பல பேருக்கு பிரியாணி பத்தாமப் போனதை விசாரிச்ச மேயரு, இதையும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தா நல்லாருக்கும்''
''அவரு...நடவடிக்கை எடுத்துட்டாலும்...!'' என்று இழுத்தாள் சித்ரா.
''டிஎம்கே கவுன்சிலர்கள்ல, சாமியைத் தவிர, மத்த ஒம்பது பேரும், இனிமே, கவுன்சில் மீட்டிங்குக்கு வர முடியாதுல்ல....!'' என்றாள் மித்ரா.
''ஏன்டி...மூணு மாசத்துக்கு தான 'சஸ்பென்ட்' பண்ணிருக்காங்க'' என்று கேட்டாள் சித்ரா.
''ஆமா....அடுத்த மூணு மாசத்துக்கு, கவுன்சில் மீட்டிங் நடக்காது. அடுத்த மூணு கூட்டத்துல இவுங்க கலந்துக்க முடியாது. செப்டம்பர்ல 'எலக்சன்' அறிவிப்பு வந்துரும். போன கூட்டம்தான், அவுங்களுக்குக் கடைசிக் கூட்டம்'' என்றாள் மித்ரா.
''என்னா 'டெக்னிக்'கா அடிச்சிருக்காங்க?'' என்று விழிகளை விரித்தாள் சித்ரா.
''இதெல்லாம் என்ன டெக்னிக்...ஆவாரம்பாளையத்துல இருக்குற ஆளும்கட்சி லேடி கவுன்சிலரம்மா, ஒரு ஏரியாவுல ரோடு போட்டதுக்கு, அங்க இருக்குற பெரிய வீட்டுக்காரங்ககிட்ட, வீட்டுக்கு நாலாயிரம்னு வசூல் பண்ணிருக்காங்க. கேட்டதுக்கு, இந்த ஏரியாவுக்கு ரோடு போட நிதி வரலை. நான்தான் போட வச்சேன்னு சொல்லி 'டெக்னிக்'கா, கலெக்ஷன் பண்ணிருக்காங்க'' என்றாள் மித்ரா.
''யாரு...அந்த மணமான கவுன்சிலரா?''
''அவுங்களே தான்...அவுங்க தங்கச்சியோட ஹஸ்பென்ட்தான், இந்த வேலையெல்லாம் பண்றதாம்''
''கவுன்சிலைப் பத்திப்பேசவும், நம்ம டாக்டர் ஆபீசரோட வேலை ஞாபகம் வந்துச்சு. அவருக்கும், அரச குமாரனுக்கும் 'லடாய்'ன்னு சொல்லிட்டு இருந்தாங்களே. அவரு, இப்பல்லாம், இவரோட 'ரெகமண்டேஷன்'ல வர்ற 'ஃபைல்'ன்னா உடனே கையெழுத்துப் போட்றாராம். ஆனா, ஆளும்கட்சி விஐபி ஆளுங்க கொண்டு வர்றதை, 'பெண்டிங்' போட்றாராம்''
''ஏன்க்கா...மறுபடியும் ரெண்டு பேருக்கும் 'கெமிஸ்ட்ரி' சரியாயிருச்சா?''
''அதெல்லாம் ஒண்ணுமில்லை. அரசகுமாரன் அனுப்புற கோப்புக்கெல்லாம், கரெக்டா 'கமிஷன்' வந்துருதாம். ஆனா, விஐபி ஆளுங்க அனுப்புறதுக்கு, கையெழுத்துப் போட்டுட்டா, 'அல்வா' கொடுத்துர்றாங்களாம்'' என்றாள் சித்ரா.
இளநீர்க்கடை தென்படவே, வண்டியை ஓரம் கட்டி, இரண்டு இளநீர் வெட்டச்சொன்னாள் மித்ரா.
''எல்லா வேலையையும் ஒரு வாரத்துல முடிக்கணும்னு நம்ம 'டிஸ்ட்ரிக்ட் மானிட்டரிங் கமிட்டி' ஆபீசர் ஹர்மந்தர்சிங் சொல்லிட்டுப் போனதுல இருந்து படுவேகமா வேலைங்க
நடக்குது'' என்றாள் மித்ரா.
''ஓ... அதனால தான், கலெக்டராபீஸ் புது கட்டிடம் வேலை முடியாமலே, வெள்ளை அடிக்கிறாங்களா?'' என்றாள் சித்ரா.
''அது மட்டுமில்லைக்கா. பாலம், கலெக்டராபீஸ், ஜி.எச்., எல்லாத்துக்கும் கல்வெட்டு 'ஆர்டர்' பண்ணியாச்சு. வேலை முடிஞ்சாலும், முடியாட்டாலும் காணொளிக்காட்சியில சி.எம்., திறக்கப்போறாங்க'' என்றாள் மித்ரா.
''அப்போ...அந்த 2,378 கோடி ரூபா அறிவிப்புகள்?''
''அதெல்லாம் நடக்காதுன்னு தெரிஞ்சுதான், இந்த வருஷம் பட்ஜெட்ல, கவர்மென்ட் நிதியை எதிர்பார்க்காம, கார்ப்பரேஷன் ஃபண்ட்லயே பண்ணிக்கிறது மாதிரி 44 வேலைய அறிவிச்சிருக்காங்க''
''எனக்கென்னமோ இது பரவாயில்லைன்னு தோணுது. செய்ய முடியாததை சொல்றதுக்குப் பதிலா, முடிக்கிற மாதிரி வேலைகளைச் சொல்லலாமே. என்னைக்கேட்டா...அஞ்சு வருஷ பட்ஜெட்ல, இதான் 'பெஸ்ட்'ன்னு சொல்லுவேன்''
''அது சரி... அம்மா பொறந்த நாளைக்கு, நம்மூரு எம்.எல்.ஏ.,க்கள் பல பேரு, காசையே இறக்காம, கண்ணாமூச்சி காட்டிட்டுப் போயிட்டாங்களாம். அதுவும் உளவுத்துறை 'ரிப்போர்ட்' மேல போயிருக்காம்''
''இதெல்லாம் 'ரிப்போர்ட்' போடுறாங்களே... 68 கல்யாணம் நடந்த இடத்துல, திருவண்ணாமலையச் சேர்ந்த 19 வயசுப் பையன் சிதம்பரம், 'கரன்ட்'ல அடிபட்டு இறந்து போனானே. அதை வேற இடத்துல ஆனது மாதிரி, எப்ஐஆர் போட்டாங்களே. அதெல்லாம் மேல போயிருக்கா?'' என்று கேட்டாள் சித்ரா.
''நம்மூரு உளவுத்துறை தான...கண்டிப்பா போட்ருவாங்க'' என்று கிண்டலாய்ப் பேசினாள் மித்ரா.
இருவரும் 'டியோ'வில் பயணத்தைத் தொடர்ந்தனர். நகைக்கடை விளம்பரப் பலகையைப் பார்த்ததும் ஞாபகம் வந்தவளாய்க் கேட்டாள் சித்ரா.
''மித்து... கேரளாவுக்கு நடுவுல, 'மாகி'ன்னு புதுச்சேரி ஸ்டேட் ஏரியா இருக்கு தெரியுமா?''
''ஆமா... அதுக்கென்ன...என்னோட ஜெனரல் நாலெட்ஜை 'செக்' பண்றியா?''
''இல்லடி...உன்னோட 'போலீஸ் சோர்ஸ்' எப்பிடியிருக்குன்னு பார்த்தேன். அந்த ஊர்லயிருந்து, ஒரு காரைக் கடத்திட்டாங்கன்னு, நம்மூரு சிட்டி போலீசுக்கு தகவல் வந்துருக்கு. எல்லாரையும் 'அலர்ட்' பண்ணிருக்காங்க. சொன்னது மாதிரியே, அந்த காரும் சிக்கிருச்சு. ஆனா....!''
''காருக்குள்ள இருந்த ஆளைப் பிடிக்க முடியலையா?''
''இல்லை...அந்த காரைப் பிடிச்சு ஒப்படைச்சிட்டாங்க. ஆனா, அந்த காருக்குள்ள இருந்த ரெண்டு கிலோ தங்கத்தை ஒப்படைக்கலை. அடிச்ச போலீசு யாருன்னு தெரியலை'' என்று சித்ரா சொல்ல, தலை சுற்றுவது போல நடித்தாள் மித்ரா.
''அக்கா! நம்ம 'டிஸ்ட்ரிக்ட் மேடம்' கிட்டத்தட்ட ஆறேழு வருஷமா, இதே 'போஸ்ட்டிங்'ல இருக்காங்கள்ல. அவுங்க, இங்க இருந்தா, ஆளும்கட்சிக்கு ஆதரவா, பல வேலை பண்ணுவாங்கன்னு, எலக்ஷன் கமிஷனுக்கு எதிர்க்கட்சிக்காரங்க 'பெட்டிஷன்' தட்டி விடப்போறாங்களாம்'' என்றாள் சித்ரா.
''வர்ற எலக்ஷன்ல, வடக்கு தொகுதியில மட்டும், 'ஓட்டுப்போட்டதை உறுதி பண்ற மெஷின்' வைக்கிறாங்களாமே. அப்போ, அங்க தப்பு நடக்காதா?'' என்றாள் மித்ரா.
''அது தெரியலை...ஆனா, தெற்கைப் பத்தி ஒரு தகவல். அந்தத் தொகுதியில 'சீட்டு' வாங்க, ஆளும்கட்சியில ஆளுக்கு ஆளு முட்டி மோதுறாங்களே. ஆனா, 'அலையன்ஸ்' உறுதியாயிட்டதால, வானதி சீனிவாசனுக்குதான் அந்தத் தொகுதின்னு பிஜேபிக்காரங்க குஷியா இருக்காங்க'' என்றாள் சித்ரா.
போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில் வண்டியை நிறுத்தி விட்டு, ரயிலில் வரும் தோழியை வரவேற்க, இருவரும் உள்ளே நுழைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X