"கலெக்டரையே மிரட்டுனதுனால, என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருக்காங்க...'' என, பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.
"நம்மூர் கலெக்டர் புதுசாச்சே; எதையும் விட்டுக் கொடுக்க மாட்டாங்களே? அவுங்கள யாரு மிரட்டுனாங்க,'' என, கேட்டாள் சித்ரா.
"தாராபுரம் பக்கத்துல இருக்கற சூரியநல்லூரில், மருத்துவக்கழிவு எரிக்கும் ஆலை அமையக்கூடாதுனு விவசாயிகள் போராடிட்டு இருக்காங்க. குறைகேட்பு கூட்டத்துல விவசாயிகள் சொன்னப்ப, "ஆலையை மூட ஏற்பாடு செய்யலாம்'னு கலெக்டர் சொல்லியிருந்தாங்க. அதுக்கு அப்புறம், மாசுக்கட்டுப்பாடு வாரியம் மூலமா நடவடிக்கை எடுத்திருக்காங்க. அப்பத்தான், மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் ஒருத்தரிடம் இருந்து, கலெக்டருக்கு போன்ல மிரட்டல் வந்திருக்கு.
"என்ன பேசினார்னு தெரியலை; வேகத்தை கலெக்டர் குறைச்சுக்கிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த கூட்டத்துல, "தினமும் இரண்டு டன் கழிவு தானே எரிக்கிறாங்க; பிரச்னை இருக்காது'னு மழுப்பலா பதில் சொல்லியிருக்காங்க. ஆத்திரமான விவசாயிகள், "என்ன நடந்துச்சுனு தெரியலையே; பெரிய அளவில் போராட்டம் நடத்தினாத்தான் தீர்வு கிடைக்கும் போலிருக்கு'னு "காச்மூச்'சுனு கத்திட்டு போயிருக்காங்க. கூட்டம் முடிஞ்சதும், தனியா கூப்பிட்டு, நிலைமையை சொல்லி, கலெக்டர் வருத்தப்பட்டிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
"சட்டசபை தேர்தல்ல வடக்கு தொகுதி பரபரப்பா இருக்கும் போலிருக்கே,'' என, கேட்டாள் சித்ரா.
"ஆளும்கட்சியில, பெரும்பாலான தொகுதியில புதிய வேட்பாளரை நிறுத்தப்போறாங்க. மா.செ., மட்டும் வடக்கு தொகுதியில நிக்கலாம்னு காய் நகர்த்திட்டு இருக்காரு. போன தடவை, ஆளும்கட்சி அமைச்சரை தோற்கடிச்ச மாதிரி, இந்த முறையும், ஆளும்கட்சி அமைச்சரை தோற்கடிக்கனும்னு, தி.மு.க., தரப்புல "பிளான்' போட்டிருக்காங்க. வடக்கு தொகுதியில, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காம இருக்கறதால, எவ்வளவு செலவானாலும், பிரச்னையை பெரிசுபடுத்தி, ஆட்டம் காட்டணும்னு பேசிக்கிறாங்க. தி.மு.க., முன்னாள் அமைச்சர், முன்னாள் மேயர், முன்னாள் எம்.எல்.ஏ.,னு மூணு பேரும் நேர்காணலுக்கு போயிட்டு வந்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.
"தோழர்கள் தரப்புல, என்ன பண்ண போறாங்க?'' என, கேட்டாள் சித்ரா.
"தெற்கு தொகுதியில, மா.கம்யூ., - வடக்கு தொகுதியில ம.தி.மு.க., நிக்க தயாரா இருக்கு. தனித்தொகுதியில் வி.சி.,யை களமிறக்க திட்டம் போட்டிருக்காங்க. இ.கம்யூ., கோவையில் போட்டியிடுறதால, திருப்பூர்ல நிக்கற ஐடியாவுல இல்லைனு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
"ஏ.டி.பி., தொழிற்சங்கத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் விலகப் போறாங்களாமே,'' என, கொக்கியை வீசினாள் சித்ரா.
"ஊழியர்களுக்கு முறையாக வர வேண்டிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு எதுவும் பட்டுவாடா செய்யாம இருக்கு. ஆளும்கட்சி தொழிற்சங்கத்தில் சேர்ந்தால், சலுகை கிடைக்கும்னு எதிர்பார்த்து சேர்ந்தாங்க. தொழிற்சங்கத்துல மேலிருந்து கீழ வரைக்கும், எதற்கெடுத்தாலும் பணம் எதிர்பார்க்கிறாங்க. ஆனா, தொழிலாளர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்ல. அதனால, பலரும் விலகறதுக்கு முடிவு பண்ணியிருக்காங்க. சிலர், தங்களது கிளைகளில் கடிதமும், அடையாள அட்டையை திருப்பியும் கொடுத்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.
"பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில், நிர்வாகிகளும் அதிருப்தி ஆகிட்டாங்களாமே,'' என, ஆச்சரியத்துடன் கேட்டாள் சித்ரா.
"ஆமாக்கா, அரிசி கடை வீதியில் நடந்த கூட்டத்துக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை அழைச்சிட்டு வந்திருந்தாங்க. சில்வர் குடம், சேலை, தையல் மிஷின் கொடுக்கப் போறாம்னு, கூட்டத்தை திரட்டியிருந்தாங்க. ஆனா, சிறப்பு விருந்தினர்கள் பேசியபோது, யாருமே கைதட்டலை. அழைச்சிட்டு வந்த பெண்களில் பலரும், வீடுகளுக்கு குடிநீர் சப்ளையாகும் தகவல் தெரிஞ்சதும், பாதியில கௌம்பிட்டாங்க.
"மீதமிருந்தவர்களும், பொருள் எப்ப கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தே அமர்ந்திருந்தாங்க. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பெயரை கூறியபோது மட்டும், மேடையில் நின்றிருந்த நான்கு பேர் கைகளை தட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு சரி. இதனால், கட்சி நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தி. இன்னொரு கூட்டம் இருக்குன்னு சொல்லி, நிர்வாகிகள் கௌம்பிட்டாங்க. அதுக்கப்புறம், சேலை, சில்வர் குடம் வாங்குறதுக்கு பெண்களுக்குள்ள தள்ளுமுள்ளு ஏற்பட்டுச்சு; சமாளிக்க முடியாமல் திணறிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE