யாதுமாகி நிற்பவள் பெண் | Dinamalar

யாதுமாகி நிற்பவள் 'பெண்'

Added : மார் 02, 2016
யாதுமாகி நிற்பவள் 'பெண்'

பெண் அன்பின் ஸ்வரூபம், சக்தியின் மூலம், குடும்பத்தின் சுமைதாங்கி, கற்பகதரு, கம்ப்யூட்டர் யுவதி. உலகை தன் அறிவால், ஆற்றலால், அழகால் வலம் வருபவள்.வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையில் நுாறு பெண்கள் பயணம் செய்கிறார்கள் என்றால், முதல் புறக்கணிப்பிலே 90 சதவீதம் பேர் நின்று விடுகிறார்கள். மீதம் உள்ள 10 பேர் மட்டுமே பயணத்தை தொடங்குகிறார்கள். இவர்கள் தான் வெற்றியாளர்கள்.
கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் 'பெண் என்பவள் கட்டிலறைக்கும், சமையலறைக்கும் ரன்கள் எடுத்தே ரணமாகிப் போனவள்' என்ற காலம் காலாவதியாகிவிட்டது. இன்று பெண்கள் சந்திக்காத, சாதிக்காத துறைகளே இல்லை. இதற்கு காரணம் அவர்களின் பொறுமை, அன்பான அணுகுமுறை, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் தன்மை, கற்பூர புத்தி, நட்புணர்வு, நினைவாற்றல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அன்பை எங்கு காணலாம்:அன்பினை வெளிப்படுத்துவதற்கு ஏதாவது ஒன்றை வகுப்பிற்கு கொண்டுவருமாறு ஆசிரியர் 4 மாணவியரிடம் கூறினார். முதல் மாணவி கையில் பட்டாம் பூச்சியுடன் வந்தாள். இரண்டாம் மாணவி மலருடன் வந்தாள். மூன்றாம் மாணவி கையில் பறவை குஞ்சுடன் வந்தாள். நான்காம் மாணவி வெறும் கையுடன் வந்தாள்.ஆசிரியர் கேட்ட போது சொன்னாள், ''நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலே அது இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியின் சுதந்திரத்தை தடுக்க மனமில்லை. குஞ்சுப் பறவையை தாய்ப்பறவை தேடும் என விட்டு விட்டேன்'' என விவரித்தாள், மாணவி. அவளை அணைத்துக் கொண்டு ஆசிரியர் சொன்னார், ''அன்பு என்பது பிற உயிர்களை மதிப்பதில் தான் உள்ளது'' என்று. தான் பெற்ற குழந்தையிடம் அன்பு காட்டுவதும் பாசத்தை சொரிவதும் தாயின் இயல்பு. அப்படி உலகம் முழுக்க அன்பை பொழிந்தவர் அன்னை தெரசா.
வீரத்தில் பெண்கள் :அமைதியான பெண்ணினத்தில், அவ்வப்போது வீராங்கனைகளாக பெண்களை தோற்றுவிப்பதுண்டு. 1857 கலகத்தின் போது ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட பெண்மணி ஜான்சி ராணி லட்சுமிபாய். நவீன படைகளை வழிநடத்திக் கொண்டு, பெரிய படைகளுக்கு தலைமை ஏற்று, அதை நிர்வகித்து இரண்டு ஆண்டு சுதந்திரமாக வாழ்ந்த வீரப் பெண்.அந்த போரில் தன் மூன்று மகன்களை இழந்த ஒருவர் தன் பிள்ளைகளைப் பற்றி பேசும் போது சாந்தமாக இருப்பார். ஆனால் ராணியைப் பற்றி பேச ஆரம்பித்தால் அவரது குரல் தழுதழுத்துவிடும். அந்த ராணியைப் போல் சிறந்த தளபதியை தாம் கண்டதில்லை என்றார் அந்த முதியவர்.சாந்த்பீவி என்ற சாந்த் சுல்தானா (1546 -1599) வைரச் சுரங்கங்கள் இருக்கின்ற கோல்கொண்டாவின் ராணி. மாதக்கணக்காக எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார். கடைசியில் எதிரிகள் கோட்டைச் சுவரில் ஒரு பிளவை ஏற்படுத்தி உள்ளே புக முயன்றனர். அதனை எதிர்பார்த்து தயாராக இருந்த ராணி அந்த படைகளை திரும்பி ஓடும்படிச் செய்தாள். அரசியல் நிர்வாகம், எல்லைப் பாதுகாப்பு, நாட்டை ஆளுதல் என்பது மட்டுமல்ல போர்திறனிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நிரூபித்து வருகிறார்கள் பெண்கள், அன்று முதல் இன்று வரையிலும்.சாதனைப் பெண்மணி 'சாதிக்கப் பிறந்தவள் பெண்சரித்திரம் படைப்பவள் பெண்'இக்காலப் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய கிரண் பேடியின் சாதனைகள் பல. ஆணாதிக்க குடும்பத்திலிருந்து வந்தவர் கிரண். ஒரு பெண்ணின் சம உரிமையை நிலைநாட்ட அவர் தீவிரமாக முயற்சி செய்து அடைந்த பயன்கள் பாராட்டப்படவேண்டியவை என்றாலும், பட்ட பாடுகள் சொற்பமானவை அல்ல. பெண் என்பவள் 'வழங்குபவராக' இல்லாமல் 'பெறுபவராக' உள்ளவரை பெண்கள் அநீதியை தான் சகித்துக் கொள்ள வேண்டி வரும் என கூறியவர் கிரண் பேடி.வீட்டின் செல்வம் பெண் என்பவள் வீட்டின் செல்வம். சிறுவர்களைப் போல் சிறுமிகளும் அதே ரீதியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். நான் ஆண், நான் பெண் என்ற எண்ணங்களை விட்டு நாம் மனிதர்கள், அன்பு காட்டவும் உதவி புரியவும் பிறந்திருக்கிறோம் என்று நினைக்க வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும். எந்த வீட்டில் பெண்ணின் ஒரு துளி கண்ணீர் விழுகிறதோ அந்த வீட்டில் இறைவன் மகிழ்ச்சி அடைவதில்லை.'பெண்ணின் கிழிந்த ரவிக்கை வழியேதேகத்தை பார்ப்பவன் பிற்போக்குவாதிதேசத்தை பார்ப்பவன் முற்போக்குவாதி'என்கிறது புதுக்கவிதை. பெண்கள் இன்று நவீன உலகின் காவலராக,நாவலராக, பாவலராக ஜொலிப்பவள் இன்றையப் பெண். கோவையில் 70 சதவீதம் பெண்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். கென்யா நாட்டின் வங்காரி முட்டா மத்தாய் சுற்றுச்சூழலை பாதுகாக்க 3 கோடி மரங்களை நட்டு, உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.அகிம்சைப் பாதையில் அறவழிப் போராட்டம் நடத்தி வருபவர் ஆங்சான்சூகி. சமூக பொருளாதார ரீதியில் வளர்ந்த நிலையில் இருப்பது போல தோன்றினாலும் பெண் என்பவள் இன்றும் முடிவுகளை எடுப்பதில் துணையை தேடுபவளாக இருக்கிறாள். ஒரு வீடு சிறக்க அவ்வீட்டின் பெண் காரணமாகிறாள். அதனால் தான் பெண்ணை 'மகராசி' என்று புகழ்கின்றனர்.பெண்கள் வேலைக்கு செல்வது தன் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காகத் தான் என எண்ண வேண்டும். தன் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களிடம் மனம்விட்டு பேசி நல்வழிப்படுத்த வேண்டும். ஒரு வீர சிவாஜி உருவாக அவரின் தாய் காரணம். காந்தியின் புலால் உண்ணாமை, மது அருந்தாமைக்கு காரணம் அவரின் தாய். குழந்தைகளின் முதல் ஆசிரியர் தாய். குடும்பத்தின் ஆதாரம் தாய். லட்சியப் பெண் தாய். பெண்ணின் லட்சியம் தாய்மையில் அடங்கி உள்ளது. மனைவியில் குவிந்துள்ளது.பெண்ணே...நீ அடுப்பங்கரை பூனையல்லஆளவந்த புலிநீ அலங்காரப் பொம்மையல்லஉணர்வுள்ள பெண்மைநீ சுவரோவியமல்ல உலகஉன்னதங்களை உனக்குள்அடக்கிய உயிரோவியம் -என்பது புதுக்கவிதை. பெண்களே நாம் சுவரோவியமாக இல்லாமல் உயிரோவியமாகி பல உன்னதங்களை, உச்சங்களை படைக்க வேண்டும். நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கை வேண்டும். அடுத்த வீட்டு லட்சுமி பெண் கன்று ஈன்றது. ஆஹா என்றார்கள். எதிர்வீட்டு லட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது ஐயோ! என்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். பெண்ணே! யாதுமாகி நின்று உன் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்து உலகிற்கு.புறப்படு புது உலகம் படைத்திடுவிழித்திடு வழிகளை உருவாக்கிடுஎடுத்திடு முடிவுகளை சுபமாக்கிடுதுணிந்திடு தோல்விகளை துாளாக்கிடு-மு.சுலைகாபானு, ஆசிரியை, ராஜம் வித்யாலயம் நடுநிலைப்பள்ளி, மதுரை.sulaigabanu@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X