குழந்தைகள் காப்பகங்களில் நடக்கும் முறைகேடுகள் அம்பலம்! நிர்வாகிகளின் பணத்தாசைக்கு இரையாகும் பிஞ்சுகள்| Dinamalar

தமிழ்நாடு

குழந்தைகள் காப்பகங்களில் நடக்கும் முறைகேடுகள் அம்பலம்! நிர்வாகிகளின் பணத்தாசைக்கு இரையாகும் பிஞ்சுகள்

Added : மார் 02, 2016
Share
காஞ்சிபுரம் : அனுமதியற்ற குழந்தைகள் நலக்காப்பகங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த காப்பகங்களில் உள்ள குழந்தைகள், வீடுகள் மற்றும் தொழிற்கூடங்களுக்கு பணிக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், விதிகளை மீறி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்த காப்பகங்கள் பராமரிப்பதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது.அத்தகைய காப்பகங்களை இழுத்து மூட

காஞ்சிபுரம் : அனுமதியற்ற குழந்தைகள் நலக்காப்பகங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த காப்பகங்களில் உள்ள குழந்தைகள், வீடுகள் மற்றும் தொழிற்கூடங்களுக்கு பணிக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், விதிகளை மீறி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்த காப்பகங்கள் பராமரிப்பதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது.அத்தகைய காப்பகங்களை இழுத்து மூட வேண்டும் என, குழந்தைகள் நல ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
சில தனியார் தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து நிதியை பெற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில், குழந்தைகள் நல காப்பகங்களை, லாப நோக்கில் நடத்தி வருகின்றன.மாவட்டம் முழுவதும், 112 காப்பகங்கள், அரசு அனுமதியோடு இயங்கி வருகின்றன. இந்த காப்பகங்களில் வளரும் குழந்தைகள், முறையாக பராமரிக்கப்படுகிறார்களா... குழந்தைகள் மீது அத்துமீறல்கள் நடத்தப்படுகிறதா... என, மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு போன்ற அமைப்புகள் கண்காணித்து வருகின்றன.ஆனால், மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசு அனுமதியின்றி, ஏராளமான காப்பகங்கள் முளைத்து வருகின்றன; அவற்றில், ஏராளமான குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அந்த, 'காப்பகங்களில்' எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, மோசமான நிலை உள்ளது. அங்கு பராமரிக்கப்படும் குழந்தைகள், வேலைக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; அதற்கு, அரசு அனுமதியில்லை. எனினும், முறைகேடாக, பச்சிளம் குழந்தைகள் அங்கு பராமரிக்கப்படுகின்றன.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், மாவட்டம் முழுவதும், 53 அனுமதியற்ற குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் கண்களை மறைத்து, சில அதிகாரிகள் துணையுடன், காப்பங்கங்கள் மீண்டும் முளைத்து வருகின்றன. இந்த காப்பகங்கள் மீது, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட ஆட்சியர், இந்த விஷயத்தில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, குழந்தைகள் நல ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
செங்கல்பட்டு மாமல்லபுரம்காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் தான் அதிக அளவில், சட்ட விரோத காப்பகங்கள் செயல்படுகின்றன. அந்த காப்பகங்களில், மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் ஆய்வு செய்துள்ளது. செங்கல்பட்டு காப்பகத்தில் உள்ள குழந்தைகளை, வேலைக்கு அனுப்பி, அவர்களின் வருமானத்தை, நிர்வாகிகள் பெறுகின்றனர்.மேலும், அங்கு, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது.
காப்பகம் நடத்த தேவை= சிறார் நீதி சட்டத்தின் படி, காப்பகங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்= ஒரு குழந்தையை பராமரிக்க, 40 சதுர அடி இடம் இருக்க வேண்டும். எத்தனை குழந்தை கள் உள்ளனரோ அதற்கு ஏற்ப, அங்கு இட வசதி அதிகரிக்க வேண்டும்= ஐந்து குழந்தைகளுக்கு, ஒரு கழிவறை இருக்க வேண்டும்= எட்டு குழந்தைகளுக்கு ஒரு குளியலறை இருக்க வேண்டும்= ஆண், பெண் என, இருபாலருக்கு தனித்தனி தங்கும் இடம் இருக்க வேண்டும்= பெண்களுக்கு தனி காப்பாளர் இருக்க வேண்டும்= பாதுகாவலர் அவசியம் வேண்டும்= வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.
செங்கல்பட்டில் அனுமதியின்றி செயல்படுவதாக கூறப்படும் குழந்தைகள் நலக்காப்பகங்கள் குறித்து, முதலில் ஆய்வு செய்யப்படும்; அதன் பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.-கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குழந்தைகள் நல காப்பகங்கள் அதிகமாக முளைத்து வருகின்றன. பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு காப்பகம், அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. முறையாக அனுமதி வாங்க வேண்டும் என, எங்கள் கமிட்டி மூலம் அறிவுறுத்தப்பட்டும், அவர்கள் அனுமதி வாங்க மறுக்கின்றனர். அனுமதியற்ற காப்பகங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-உறுப்பினர், மாவட்ட குழந்தைகள் நல குழுமம்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X