எது பெண்ணியம்

Updated : மார் 03, 2016 | Added : மார் 03, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 எது பெண்ணியம்

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை தன்னைக் கொளுத்துவோம். சட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் பெறுவதும், பாரினில் பெண்கள் செய்யவந்தோம்.இதெல்லாம் முண்டாசுக்கவிக் காலத்திலிருந்தே தினந்தோறும் எழுதியும், பேசிப்பார்த்தும், ஓய்ந்துப் போயிருக்க, மறுபுறம் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்முறை, வயதான பெண்களையும் துரத்தும் பாலியல் சீண்டல்கள் மட்டும் 'சேஸ்' செய்தபடியே இருக்கின்றன.
சரி. என்னதான் எதிர்பார்க்கிறோம் வரப்போகும் மகளிர் தினத்தில்? அல்லது எப்படித்தான் எதிர்நோக்குகிறோம் இந்தத் தினத்தை?
பெண் என்பவள் யார் பெண் இயற்கையின் அங்கமான தனிசக்தி என்பதை அவள் உணரத் தொடங்கும் போது சாதிக்கத் தொடங்குகிறாள்.சாதனை என்பது ஆணுக்குப் பெண் நிகரானவள் என்று தலை நிமிர்ந்து சொல்வதா! இல்லை... ஆணுக்கு நிகராக நாங்களும் மது அருந்துவோம், புகைபிடிப்போம்... வேண்டிய வாழ்க்கைத் துணையை மாற்றியபடி இருப்போம் என்பதா... எனில் என் பார்வையில் 'இல்லை' என்பேன்.
பெண் பெண்ணாகவே சமூகத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, திறம்படச் செய்து, வாழ்வின் அடுத்தடுத்த இலக்குகளை நகர்த்தியப்படியே மற்ற பெண்களுக்கு உதவியபடியே தானும் உயர்தல்.ஆண்களை வெறுப்பதும், பெண்ணடிமைத்தனத்தை எதிர்ப்பதும் மட்டுமே பெண்ணீயம் என வெற்றுச் சொல் வீசி வீழ்ந்து போகிறோம்.
ஆணும் பெண்ணும் இரட்டை நுால்களால் ஆன சமுதாயக் கயிறு இதுவே பலமான உறவுகளைக் கட்டிவைத்து, ஆரோக்கியமான சமுதாயத்திற்கும் காரணமாகிறது. இதில் ஒரு நுால் அறுந்தாலும் பல உறவுகள் சிதறித்தான் போகின்றன.
என்ன நிலையில் வாழ்க்கை கடந்த பதினான்கு ஆண்டுகளாக பலநாட்டு பெண்களை அவர்களின் நிலை, வாழ்வு நிலைகளை பார்த்து வருகிறேன். விவாகரத்தாகி தனித்திருக்கும் பெண்கள், குடும்பச்சுமையால், சிறுவயதில் திருமணமாகி கணவன் விட்டு பிரிந்துபோய் பிள்ளைகளைக் காப்பாற்ற ஏஜன்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு எதோ ஒரு அடிமை வாழ்க்கையில் சிக்கி 2 மணி நேரம் மட்டுமே துாங்கும் பெண்கள், அதிலிருந்து தப்பித்து அன்றாடம் வேலைப் பார்த்து, அதில் வளரும் குழந்தைகளின் படங்களைப் பார்த்தபடியே கண்ணீரில் காலத்தைத்தள்ளும் பெண்கள்,
மேக்கப்பிற்காக மால் தரிசனம் செய்தும், வாங்கும் சில சாமான்களுக்காக பின்னால் பணிப் பெண் ஏந்திவரும் பையுடன் பெருமையாக கடக்கும் பெண்கள், ஆடைகளுக்கும் அழகு சாதனப் பொருட்களுக்கும் இலக்காகி தன் மூன்றிலக்க சம்பளம். நான்கு இலக்கத்தைத் தொட தினம் பயிற்சி எடுத்து கம்பெனிகளுக்கு படையெடுக்கும் பெண்கள்... இப்படி பலப்பல பெண்கள்.
எல்லாருக்கும் தேவை என்ன... பொது பிரச்னைகள் என்னென்ன!சாதனைகள் சாதாரணமல்ல ஒருபுறம் கோல்கட்டாவில் பிறந்து, பெப்ஸிகோவின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள இந்திரா நுாயியைப் பற்றி பெருமை கொள்வதா அல்லது சுனிதா கிருஷ்ணன் பெங்களூருவில் பிறந்து 16வயதில் ஒரு கும்பலால் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு அதனால் நாலு சுவர்களுக்குள் முடங்கிகிடக்காமல், தன்னை போலவே பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணீர் துடைக்கும் கரமாக மாறிப்போய், பல பெண் குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக விற்கப்படும் அவலத்தைத் தடுத்து நிறுத்தி அதனால் தன் காதுகள் பல முறை பாதிக்கப்பட்டும் அயராது செய்து வரும் சேவையை எண்ணி வியந்து வருந்துவதா... புரியவில்லை.
வெளிநாடுகளில் என்ன நிலை :ஆசியாவில் மட்டுமே பெண் என்றால் தனிச் சலுகைகள் தரப்பட்டும் ஏற்கப்படவும் செய்கின்றன. ஐரோப்பிய, அமெரிக்க சமூகங்களில் பெண்கள் சமமாகவே உள்ளனர். ஆனாலும் இங்கிலாந்தில் மட்டுமே பாலியல் துன்புறுத்தல் அதிகமென்று அங்குள்ள சர்வே சொல்கிறது.இன்று பாக்சிங், பளுதுாக்குதல், ஆட்டோடிரைவிங், டாக்சி ஓட்டுனர் இப்படி கடினமான வேலைகளில் பங்கேற்றாலும், அழகு சாதன பொருட்கள் பெண்களை குறிவைத்தே தன்சந்தையை விரிவுபடுத்தவும் சிகப்பழகே தன்னம்பிக்கை எனவும் பிரசாரம் செய்கின்றன.
பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், ஒரு எல்லைக்குஉட்பட்டே இயங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவது மறுக்க இயலாததாக உள்ளது.கல்வி, பொருளாதாரம், தொழில் இப்படி போட்டிப் போட்டு எவ்வித தடங்கல், இடையூறுகளுக்கும் பலியாகாமல், வெற்றி பெற்றாலும் அவள் 'அட்ஜஸ்ட்' செய்துதான் வந்திருப்பாள் என்ற பார்வையும், பெருசா ஒண்ணும் திறமையில்லைன்னாலும் 'ஆள் பளீச்சுன்னு இருக்கா இல்ல, அதான்' என்ற வசனங்களைக் கேட்டப்படியே புறந்தள்ளியபடியே பெண்ணுலகம் முன்னேற வேண்டியுள்ளது.
வெற்றிப்படிகளில் பெண்கள் :நிலவுக்கும், மலருக்கும் ஒப்பிட்டு ஒப்பிட்டே வெறும் அழகு சாதனப் பதுமைகளாகவே பெண்களைப் பார்க்கும் மனோபாவம் குறையுமா! நாம் என்ன செய்யலாம்?!அழகைத்தாண்டி அறிவுடன், பல்நோக்கு சிந்தனையுடன், பெண் என்பவள் தனக்கென தனிப்பாதையுடன் புறப்பட்டு விட்டாள் என்பதை, ஆசிய நாடுகள் உணர ஆரம்பித்துவிட்டன.
இன்று திருமணத்திற்கு முன்பே ஆண் துணையின்றி, பெண்களும் ஆணுக்கு நிகராக வெளிநாடுகளில் தங்கி வேலைப்பார்க்கவும், தனக்கென வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துக்கொள்வதிலும் எந்த முன்னுரிமையையும் இன்றி தனக்கான கல்வியைப் பெறவும் வைத்திருக்கின்றன.ஆயினும்.. பொருளாதார சிக்கலில் துண்டாடப்பட்ட ரஷ்ய நாடுகளின் பெண்கள் பிழைப்பிற்காக, தன் உடலை ஏ.டி.எம்., மெஷினாக்கி பார்க்கும் அவலமும், ஐரோப்பாவிற்கு தொடர்ந்துக் கடத்தப்படுவதும் தொடர்ந்த படியே உள்ளன.
பெண்களுக்கு, பெண்களே எதிரிகளாக இல்லாமல், நல்ல கைதுாக்கிவிடும் சிநேகிதியாகக் கற்றுத்தரும் ஆசானாக, வழிகாட்டிடும் விளக்காக இருப்பது உண்மையான பெண்ணியம்.வெற்றி என்பது இலக்கே அல்ல. வெற்றியடைபவர்கள் மேலேயே கற்களும் வீசப்படுகிறது... வீசுபவர்கள் கை வலிக்க, அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நகர்வதே பெண்ணியம்.
- சுமிதா ரமேஷ்வானொலி அறிவிப்பாளர், துபாய்ramesh.sumitha@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
03-மார்-201610:19:54 IST Report Abuse
நக்கீரன் என்று பெண் தன் உடலை, அழகை தாண்டி, வெற்று பெண்ணியம் பேசாமல், சிந்திக்க தொடங்குகிறாளோ அன்றே அவள் உயர்ந்து விடுகிறாள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X