புதியதோர் உலகம் செய்வோம்

Added : மார் 04, 2016 | கருத்துகள் (2)
Advertisement
புதியதோர்  உலகம்

வீடுகளில் மட்டுமே வேலை செய்து வந்த பெண்கள், 19-ம் நுாற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியால், தொழிற்சாலைகளில் அடியெடுத்து வைத்தபோது, பல்வேறு பிரச்னைகளை சந்தித்தனர். குறைந்த கூலி, 16 மணிநேர வேலை, வீடு திரும்பினால் குடும்பப் பராமரிப்பு என ஓய்வின்றி உழைத்தனர்.
பெண்களின் பிரச்னைகள் குறித்து, முதன் முதலில் 1866-ல் கோரிக்கை சாசனத்தை முன்மொழிந்தவர் காரல் மார்க்ஸ். அது பெண்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. நியுயார்க் பஞ்சாலைகளில் 16 மணிநேரம் உழைத்து, நொந்து நுாலாகிப் போன பெண்கள், ௧௮௭௦ மார்ச் ௮ ல் வீதியிலிறங்கி 8 மணி நேர வேலை கோரி, வீரஞ் செறிந்த போராட்டம் நடத்தினர். அதை சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக கொண்டாட 1910-ல் முடிவானது. 1911-ல் முதன்முறையாக கொண்டாடப்பட்டது.வியன்னாவில் இந்த தினம் கொண்டாடப்பட்டபோது, வீட்டு வேலைகள், குழந்தைகளை கணவன்மார்கள் கவனித்துக் கொண்டு, மனைவிமார்களை ஆர்ப்பாட்டத்திற்கு அனுப்பி வைத்தார்களாம். 30 ஆயிரம் பெண்கள் கூடிய இந்த ஆர்ப்பாட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றபோது, ஓடோடி வந்து உதவியவர்கள் ஆண் தொழிலாளர்கள். 8 மணி நேர வேலை என்ற பொருளாதார கோரிக்கை, ஓட்டுரிமை என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்து உருவான உழைக்கும் பெண்கள் தினம் தான், காலப்போக்கில் உலகப் பெண்கள் தினமாக உருமாறியது.
பெண்களும், குடும்ப வன்முறையும் ஆங்கில எழுத்தாளர் சிட்னி பிராண்டன், 'புள்ளி விபரப்படி, மேற்கத்திய நாடுகளில் இருட்டிய பிறகு பெண்கள் வீட்டுக்குள் இருப்பதை விட, தெருவில் அடையாளம் தெரியாத நபருடன் இருப்பது பாதுகாப்பானது,' என்றார். இந்தியாவில், பெண்கள் அவர்கள் குடும்பத்திற்குள் அனுபவிக்கும் வன்முறைகள் அதிகம். சுதந்திரத்திற்கு பின் பெண்கள் மீதான வரதட்சணை கொடுமைகள் அதிகரித்தது. அரசு வரதட்சணை எதிர்ப்பு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், அச்சட்டத்திற்கு பல்லில்லை என்று சொல்வதை விட கண், காது, மூக்கு, இதயம் என்று எதுவுமே இல்லை.
1970--80-களில் திருமணமான பல பெண்கள், வரதட்சணைக்காக தீயிட்டு கொளுத்தப்பட்டனர். சரியான சட்டம் இல்லாததாலும், கணவன் வீட்டிலேயே இக்கொலைகள் நடப்பதாலும், சாட்சியம் கிடைக்காமல் இவ்வழக்குகள் 'ஸ்டவ்' வெடித்து இளம் பெண் விபத்தில் பலியானதாக முடிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான நிவாரணங்களை வழங்க சட்டங்கள் இல்லை.பெண்களை பாதுகாக்க சட்டம் 2005-ல் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் உலகில் 40- நாடுகளில் உள்ளது. திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்வோருக்கும் இச்சட்டம் பொருந்தும். துன்புறுத்தல் எனில் மனம், உடல், பாலியல், பண ரீதியான துன்புறுத்தல்களும் இதில் அடங்கும்.
குற்றவாளிகளை தண்டிப்பதை விட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே இச்சட்டத்தின் நோக்கம். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண்களுக்கு குடியிருக்க உத்தரவாதம், வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு, ஜீவனாம்ச உத்தரவு விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தால் வழங்கப்படும். கணவரும் தனது தரப்பில் எதிர்வாதம் செய்யலாம். தீர்ப்பை நிறைவேற்றவில்லையென்றால், ஓராண்டு தண்டனை, அபராதத்திற்கு உட்படவேண்டும். குழந்தை யாரிடத்தில் இருக்கவேண்டும் என்ற உத்தரவும் தேவையானபட்சத்தில் வழங்கப்படும்.
பணியிடங்களில் வன்முறை :1993-ல் ராஜஸ்தான் அரசு குழந்தை திருமணத்தை தடுக்க, அந்தந்த ஊர்களில் ஊழியர்களை நியமித்தது. அதில் பன்வாரி தேவியும் ஒருவர். அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்ததைச் சேர்ந்தவர். உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில், ஒரு வயது குழந்தைக்கு நடக்கவிருந்த திருமணத்தை பன்வாரி தேவி தடுத்து நிறுத்தினார். கோபமடைந்த உயர் ஜாதி ஆண்கள் ௫ பேர், பன்வாரி தேவியை அவர் கணவர் கண்ணெதிரில் பாலியல் பலாத்காரம் செய்தனர். நீதி கேட்டு போராடினார் பன்வாரி தேவி. நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்தது. இந்நிலையில் விசாகா என்ற அமைப்பு, 4 மகளிர் அமைப்புகள்,'பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டு வர உத்தரவிட வேண்டும். அதுவரை சில நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்,' என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் 1997-ல் உச்ச நீதிமன்றம் சில நெறிமுறைகளை வரையறுத்து உத்தரவிட்டது.
இதன் முக்கிய அம்சம், பணியிடங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடந்தால், விசாரிக்க ஒவ்வொரு பணியிடத்திலும் ஒரு பெண் தலைமையில் புகார்க்குழு அமைக்கவேண்டும். அதில் பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மகளிர் அமைப்பு பிரதிநிதியும் இடம் பெறவேண்டும். அரசு விரைவில் சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. ஆனால், இச்சட்டத்தை மத்திய அரசு இயற்ற 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.சட்டம் சொல்வது என்ன பணியிடங்களில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறை தீர்க்கும்) சட்டம் 2013: பாலியல் துன்புறுத்தல் என்பது வரவேற்கப்படாத பாலியல் நடத்தை, பாலியல் ரீதியான வசனங்களை அல்லது கருத்துக்களை பெண்ணிடம் கூறுவது, உடல் ரீதியாக தொடுவது அல்லது அதற்கான முயற்சிகள், பாலியல் படங்களைக் காட்டுவது போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
பணியிடம் என்பது அரசு, தனியார் துறை அடங்கும். பெண்கள் வேலை செய்யும் அனைத்து இடங்களிலும் உச்சநீதிமன்றம் கூறியதுபோல், புகார்குழு அமைத்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலில் வேலை செய்யும் பெண்களின் புகாரை விசாரிக்க, மாவட்டம் தோறும் புகார் குழுக்களை மாநில அரசு அமைக்க வேண்டும். 3 மாதங்களுக்குள் புகார் அளிக்க வேண்டும். 90 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும்.ஓரடி முன்னால்; ஈரடி பின்னால் என்னதான் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், நடைமுறைப்படுத்துவதில் அரசின் அங்கங்கள் சுணக்கம் காட்டுகின்றன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு கூட உயர்நீதிமன்றத்தை நாடவேண்டியுள்ளது. அது மட்டுமின்றி இத்தகைய புதிய சட்டங்களை பாதுகாப்பதற்கே போராட வேண்டியுள்ளது. கடும் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை.
தவறான, நியாயமற்ற சில வழக்குகளில் காவல்துறை அதிக அக்கறை செலுத்தி, துரித நடவடிக்கை எடுத்து சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், அதை நீக்க வேண்டும் எனவும் எழுப்பப்படும் கூக்குரல்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. இத்தகைய வழக்குகள் உச்சநீதிமன்றம் வரை செல்வதால், இது போன்ற சட்டங்கள் பெண்களால் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்ற பார்வை உருவாகி, அது தீர்ப்பாக உருமாறி விடுகிறது. ஆனால் உண்மை நிலை வேறு.நாடுமுழுவதும் எத்தனையோ பெண்கள், பாலியல் வன்முறைக்கு எதிராக, நீதிக்காக இன்னமும் போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
இத்தகைய வன்முறைகள் இல்லாத புதியதோர் உலகத்தை படைப்பது தான் நமது கடமை. அது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையில்லா பாதையை வகுக்கும்.-உ.நிர்மலா ராணிவழக்கறிஞர்,உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 94422 00616

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
05-மார்-201603:18:18 IST Report Abuse
Nagan Srinivasan வீடுகளில் மட்டுமே வேலை செய்து வந்த பெண்கள், இப்போது ஆண்களை வீட்டில் வேலை செய்ய வைக்கின்றார்கள்? கொடுமை. வேலை இல்லா திண்டாடத்தில் வீட்டுக்கு ஒருவர் மட்டுமே வேலை திட்டத்தை கொண்டுவரவேண்டும். டெல்ஹியில் கார் ஒற்றைப்படை இரட்டை படை நம்பர் மட்டுமே குறிபிட்ட நாட்களில் பயணம் செல்லலாம் போல் ?
Rate this:
Share this comment
Cancel
babu - Nellai,இந்தியா
04-மார்-201610:06:43 IST Report Abuse
babu பெண் அதிகாரிகள் ஆண்களிடம் அதிகாரத்தை காட்டினால், கட்டிய மனைவி கணவனுக்கு சமையல் செய்யாமல் மற்றும் ஊதாரித்தனமாக செலவு செய்து சுற்றினால் ஆண்களாகிய நாங்கள் எங்கு செல்வது............ ஆண்கள் என்பவர்கள் வெறும் வேலை செய்து சம்பாதித்து பணம் தரும் மனித ATM இயந்திரம் அல்ல என்று பெண்களாகிய நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.................................. வேலை செய்யும் இடத்தில எங்களுக்கும் 1000 பிரச்னை உண்டு மறவாதீர் பெண்களே.............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X