மார்ச் 8 - மகளிர் தினம்: பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுங்கள் பெண்களே!| Dinamalar

மார்ச் 8 - மகளிர் தினம்: பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுங்கள் பெண்களே!

Added : மார் 05, 2016 | கருத்துகள் (2)
Share
மார்ச் 8 - மகளிர் தினம்: பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுங்கள் பெண்களே!

'மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!' - கவி பாரதி கரைந்து பாடியது, பெண்மையின் மேன்மையை உணர்வுப்பூர்வமாக அறிந்ததால் தான். பல்வேறு கட்டுப்பாடுகளுக்குள் மனம் புழுங்கி, வெம்பி, வெதுங்கிய அக்காலப் பெண்களுக்கு, சிறிது நேரமே கலந்துரையாடும் கணவனின் அன்பு பெரும்பாலும் இருந்தது.

கல்வி, வேலைவாய்ப்பு, சம உரிமை என்று, பல கோணங்களில் பெண்களின் வாழ்க்கை வசந்தத்தை நோக்கி, தற்போது சென்று கொண்டிருந்தாலும், சிகரங்களைத் தொட அவர்கள் சிரமம் பாராமல் முன்னேறினாலும், அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாய் இருப்பது, அவர்கள் சார்ந்த குடும்பப் பெண்களே.

பெண்களில், ௯௦ சதவீதத்தினர் மாமியார், நாத்தனார், அண்ணி என்று, பிற பெண்களாலேயே வார்த்தை வசவுகளாலும், பல நேரங்களில் மறைமுக உடல் ரீதியான வதைப்புகளுக்கும் ஆளாகி, பல பேர் தற்கொலை முடிவுக்கும் முயற்சித்திருக்கின்றனர். பிழைத்தெழுந்தோரை மருத்துவர்கள் கவுன்சிலிங் செய்த பிறகே, மருத்துவமனையை விட்டு அனுப்புகின்றனர். புகுந்த வீட்டில், தான் அனுசரித்துச் சென்றால் தான், தன் பிறந்த வீட்டிற்கு மதிப்பு என்ற முடிவோடு, புகுந்த வீட்டினரை தன் பெற்றோர், உடன் பிறந்தோர் என்றே மனமார ஏற்று, அவ்வீட்டுப் பழக்க வழக்கங்களை ஆர்வத்துடன் கற்று, கடைபிடிக்க ஆரம்பிக்கின்றனர் பெண்கள். தன் மனைவி, தன் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், அன்பையும் புரிந்து கொள்ளாத கணவர், கூடா நட்பின் துாண்டுதலால், விரைவில் பணக்காரனாக வேண்டும் என்று, தெரியாத தொழில்களை எல்லாம் முயற்சித்து, தோல்வியை தழுவுகின்றனர்.கூடா நட்பின் மற்றொரு பரிசாக குடிப்பழக்கமும் ஏற்படுகிறது. 'திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்பதுபோல், 'குடி குடியைக் கெடுக்கும்' என்பதை எவன் உணர்கிறோனோ, அவனே குடியை நிறுத்த முயற்சிப்பான்.

எனவே, பெண்கள் சுயமாக சம்பாதித்து, அதில் மூன்றில் ஒரு பகுதியை கல்விக்கும், ஒரு பகுதியை திருமண செலவுகளுக்கும் மற்றொரு பகுதியை, சுய தேவைகளுக்கும் சேமிக்க வேண்டும். இப்படி திட்டமிட்டு செலவுகள் பராமரிக்கப்பட்டால், அதைப் பார்த்தாவது கணவர், சுயமாக சரியான பாதையில் யோசித்துத் திருந்த வழி அமையும்; அமையாமலும் போகலாம். இதற்குப் பல ஆண்டுகள் ஆனாலும், இவருக்கு நட்டம் ஏதும் வரப் போவதில்லை. பணியில் சேர்ந்த ஓரிரு மாதங்களிலேயே மேலிடத்திலிருந்து, உடன் பணியாற்றுவோர், கீழ் நிலையில் பணிபுரிவோர் என்று, ஒட்டு மொத்த மாக எல்லாராலும் நேசிக்கும்படி பணியாற்றிய வேண்டும். உண்மையான, நேர்மையான உழைப்பு, பணியிடத்தில் பொறாமை கொண்டு, அவரை இம்சிக்க நினைத்தோரை எல்லாம் மனப் பயிற்சியின் மூலம், அவரின் எல்லைக் கோட்டுக்குள் வராமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.'வேலைக்கு செல்லும் இடத்தில் மாற்றத்தை சுலபமாகக் கொண்டு வர முடிகிறது; ஆனால், வீட்டில் ஏன் என்னால் கொண்டு வர இயலவில்லை?' என்று கேட்பர்.இதற்கு ஒரே பதில், பெண்ணே, தன் இனமான மற்றொரு பெண்ணைப் பார்த்து பொறாமைப் படுவதால் தான்.

எவரிடமும் தன் பிரச்னைகளைக் கூறாமல் தனித்து நின்று போராடி வெல்ல, மன வைராக்கியம், எந்த நிலையில் இருந்தும் உழைத்து முன்னேற முடியும் என்ற நல்ல எண்ணத்தை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.நம் சமுதாயத்தில் பெண்கள், குடும்பங்களில் மதிக்கப்பட்டால் தான், சமுதாயத்தில் மாற்றம் வரும். 'சமுதாய மாற்றம் வேண்டும்' எனக் கூக்குரலிடுவோர் முதலில், தம் வீட்டுப் பெண்மணிகளை சமமாக மதித்து, மரியாதையுடன் நடத்தட்டும்; பின், தானே மாற்றம் உருவாகும்.காரணம், 'மாற்றம் ஒன்றே மாறாதது!' அந்த நிலையை அடையும் வரை, பெண்கள் அவரவர் துறையில் தனி முத்திரை பதித்து விட்டு, சென்று கொண்டே இருக்க வேண்டும். உண்மையான மாற்றத்திற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை இறைவன் மட்டுமே அறிவார்.இ-மெயில்: ramas_s@rediffmail.com

- எஸ்.ரமா -
மனோ தத்துவ நிபுணர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X