போதகர் மீது பாலியல் பலாத்கார புகார் திருச்சபை முன் மக்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதகர் மீது பாலியல் பலாத்கார புகார் திருச்சபை முன் மக்கள் ஆர்ப்பாட்டம்

Added : மார் 07, 2016 | கருத்துகள் (2)

வசந்தபுரம்:பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற, திருச்சபை போதகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல்லில் கிறிஸ்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் -- திருச்சி சாலை குப்பம்பாளையத்தில், ஷெக்கினா ஏஜி கிறிஸ்தவ திருச்சபை உள்ளது. அதன் போதகராக, கடந்த, 15 ஆண்டுகளாக சாமுவேல் ஆரோன் இருந்து வருகிறார். இவர், திருச்சபைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
மிரட்டல்:இதுகுறித்து, எருமப்பட்டி கைகாட்டியை சேர்ந்த நிர்மலா, நாமக்கல் எஸ்.பி.,யிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:ஷெக்கினா ஏஜி சபை போதகர் சாமுவேல் ஆரோன் வீட்டில், வீட்டு வேலை செய்து வந்தேன். பாலியல் தொந்தரவுகளால் அவதிப்பட்டேன். பலாத்காரம் செய்ய முயன்றதால், வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டேன். அடிக்கடி தொலைபேசியிலும், வழியிலும் மிரட்டி, மீண்டும் வேலைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார்.
கடந்த மாதம், 9ம் தேதி, தன் மனைவியை, ஆரோன் மயக்கி கெடுத்து விட்டதாக, கோவையை சேர்ந்த போதகர் வேலுசாமி கண்ணீர்மல்க என்னிடம் கதறினார். எனக்கு ஏற்பட்ட பாதிப்பை சபையினர் முன் தெரிவித்தேன். நாமக்கல் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தேன். ஆனால், இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாமுவேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஉள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கிறிஸ்தவ மக்கள் திருச்சபைக்கு சென்றனர். அப்போது, திருச்சபைக்கு பூட்டு போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கோஷம்:ஆத்திரமடைந்த அவர்கள், திருச்சபையை முற்றுகையிட்டு, 'போதகர் சாமுவேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவரிடம் இருந்து சபையை மீட்டுத்தர வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.நாமக்கல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், 'சாமு வேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X