சபிக்கப்பட்ட தேவதைகளா?

Updated : மார் 07, 2016 | Added : மார் 07, 2016 | கருத்துகள் (12)
Advertisement
 சபிக்கப்பட்ட தேவதைகளா?

இறைச்சி உண்டு விட்டு ஒருநாள் விரதம் இருப்பதை போலத்தான் ஆகிவிட்டது மகளிர் தினக்கொண்டாட்டங்கள். வருடத்திற்கு ஒருமுறை சீராட்டிவிட்டு, வருடம் முழுவதும் கைவிலங்கிட்ட சிறைப்பறவையைப் போல் வாழும் நிலைதான் பெண்களின் நிலை.
'விஞ்ஞானம் வளர்ந்து விட்டது; எல்லாதுறைகளிலும் இன்று பெண்கள் முன்னேறி வருகிறோம்' என்று பெருமை பட மார்த்தட்டிக் கொண்டாலும், பெண் என்னும் சொல்லின் தாக்கம் வெறும் உடல் கூறுகளால் மட்டும்தான் அளக்கப்படுகிறது என்பது ஒப்புக் கொள்ளவேண்டிய உண்மையே!
சமூகத்தின் வேறான பார்வை ஒரு பெண்ணின் வளர்ச்சியை முடக்க வேண்டுமா? அவளின் வெற்றிகளை சிதைக்க வேண்டுமா? அதற்கு ஆயுதமாய் சமூகம் எடுத்துக் கொள்வது, என்ன அவள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது? எத்தனையோ மகத்தான கனவுகள் கொண்ட பெண், பாலியல் பண்டமாய் துண்டாக்கப்பட்டு விருந்தாகிறாள்.
உடலளவில் மனதளவில் அவளை இம்சிப்பது, ஒழுக்கக்கேட்டினை அவள் பாதையில் விதைப்பது. இன்று சிகரம் தொட்டிருக்கும் பெண்கள் அனைவருமே ஒருகாலத்தில் இப்படிபட்ட சமூகக்கேடுகளைத் தாண்டி வந்திருக்கிறவர்கள்தான். பெண் என்னும் வார்த்தைக்கு உண்டான அர்த்தத்தை, முழுமையாக புரிந்து கொண்ட பிறகு, அதை கொண்டாடவேண்டும் என்பதே என் எண்ணம். எப்போதும் பிறருக்கு பதில் தேடி வரும் புத்தகமாகவே, அவள் இருக்கிறாள். ஒரு போதும் அவள் கேள்விகள் சுமப்பதை சமூகம் அனுமதிப்பதில்லை.
அப்படியே தங்களின் உரிமைகளைப் பற்றி விவாதிக்கும் பெண்களின் ஒழுக்கம் விவாதிக்கப்படுகிறது. திருமணம் ஒன்றுதான் பெண்ணின் இலக்கு என்று அதை நோக்கித்தான் அவள் செலுத்தப்படுகிறாள். பெண்களை கேலிப்பொருளாய் சித்தரிப்பதையே, இன்றயை பட்டிமன்றங்கள் கூட செய்கின்றன. 'நகைச்சுவையாய் பேசுகிறேன்' என்ற பெயரில், மனைவியின் முட்டாள்தனத்தை கணவர் எடுத்துரைப்பதைப் போல அமைந்திருக்கிறது இது போன்ற பேச்சுக்கள். இயல்பாகவே மனைவி என்பவள், தன் ஆதிக்கத்தின் கீழ் அமைந்தவள் என்ற கருத்துக்கு வலுசேர்ப்பதைப் போல்தான் இருக்கிறது.
உரிமைகள் இருக்கிறதா பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் நாள்தான் பெண்கள் தினம். தன் உரிமைகளை கேட்ட மூன்று பெண்களின் உயிரைப் பறித்திருக்கிறது கல்வி நிறுவனம். பகல் இரவு பாராமல் குழந்தைகள், பெரியவர்கள் என்று எண்ணாமல் பெண் என்ற அடையாளங்கள் இருந்தால் மட்டும் போதும். அதை சிதைக்க வீறுகொண்டு எழும் கூட்டத்தில். தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே இன்று பெண்கள் போராடத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகளிர் தினக்கொண்டாட்டங்கள் பெரிய பள்ளத்தில் தள்ளிவிட்டு, எழுந்து வரமுடியாதபடி ஆயிரம் கைகள் கொண்டு அடக்கி, அடங்கிய சவத்தின் மேல்மாலை மரியாதை போட்டு கும்பிடுவது போலத்தான் ஆகும்.அரசியலானாலும், குடும்பமானாலும், பணிபுரியும் இடமானாலும் எல்லா இடங்களிலுமே ஏதாவது ஒருவகையில் அவள் வஞ்சிக்கப்படுகிறாள்.
வலியா வலிமையா:என்ன முன்னேற்றங்கள் கண்டுவிட்டோம்? நாங்களும் சரிநிகர் சமானம் என்று வார்த்தைகளில் மட்டும் சொல்லி விட்டு, குடும்பம் அலுவலகம் என்று இரட்டை சவாரி செய்கிறோம். கணவரின் தேவையறிந்து நடக்க, பிள்ளையின் பசியைபோக்க, உறவுகளை உவகையோடு அணைக்க என நாம் நடக்க, நிற்க, செயல்பட பெண் என்னும் சக்தி தேவைப்படுகிறது என்று ஒரு பெண் குழந்தையின் பிறப்பு சமூகத்தில் கொண்டாடப்படுகிறதோ அன்று உண்மையான மகளிர்தினம்.
உடன்கட்டை ஏறுதல், கைம்பெண் என்ற நிலையெல்லாம் மாற எத்தனை போராட்டங்கள் இன்று மறுமணங்கள் வரவேற்கப்பட்டாலும், அதிலும் பாரபட்சம்தானே நிகழ்கிறது. ஒரு ஆணுக்கு தன் முதல் மனைவியின் நினைவுகளோடு வாழ்ந்து, உன்னை அவளாக நினைத்து வாழ்கிறேன் என்று சொல்ல உரிமையிருக்கிறது. ஆனால் அதே மறுமணம் செய்து கொண்ட பெண் தன் முதல் கணவனைப் பற்றியோ அவனின் நினைவுகளைப் பற்றியோ தப்பித்தவறிக்கூட பேசிடக்கூடாது.
ஒருபக்கம் பெண் சிசுக் கொலை நடந்து கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் பெண் பிரதமர், முதல்வர், ஜனாதிபதி, சபாநாயகர் விளையாட்டு வீராங்கனைகள், தொழில்முனைவோர், காவல்துறை என பல துறைகளிலும் பெண்கள் நிலை உயர்ந்திருக்கும்.
பலமுறை பிரபலங்களின் மறுமணத்தைப் பற்றி மணமுறிவைப்பற்றி உச்சுக்கொட்டும் மக்கள் ஒருபுறம், பால்ய விவாகங்கள், கவுரவக்கொலைகள், பாலியல் பிரச்னைகள் என்று மற்றொரு பக்கம் செய்தியாக வரும் முரண்பாடுகளைக் கொண்டது, நமது இந்தியாவில் பெண்களின் நிலை. சமுதாயத்தின் தீநாக்குகளில் சிக்கி புகைந்து கொண்டு இருக்கும் பெண்களுக்கு தனக்கு சுதந்திரம் எது என்று முறையாக தெரியவேண்டும்.
எழுதப்படாத சட்டங்கள் :பெண் விடுதலை என்பதன் பொருள் சம உரிமை, வேலை நேரம் சம்பளம் இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை மன உணர்வுகள் வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய விஷயம் என்பதை முதலில் பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அடுத்து அதை ஆண்களுக்கும் சமூகத்திற்கும் புரியவைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலைக் குறித்த புரிந்துணர்வு ஏற்படும். இப்படித்தான் வாழவேண்டும் என்று வீட்டுக்குள் நியாயமற்ற எழுதப்படாத சட்டங்களால், கண்ணுக்குத் தெரியாத ஆனால் பெண்ணின் உயிரையும், உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.
அதிர்ச்சியான புள்ளிவிபரம் :2 வயது சிறுமி முதல் 70 வயது பாட்டி வரை இன்றைக்கு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிவருகின்றனர். ஆண்களின் காமப்பார்வையில் இருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்றும்; பெண்கள் மற்றும் சிறுமியரின் பிறப்புறுப்பை சிதைத்து, மார்பகத்தை தட்டையாக்கல் என்ற கொடூரமான நிகழ்வு
உலகநாடுகளில் நடப்பதாக ஐக்கியநாடுகளின் துணை அமைப்பான யுனிசெப் சபை சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவித்திருந்தது. எகிப்து, எத்தியோபியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் 50 சதவீத பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆப்ரிக்க நாடான சோமாலியாவில்தான் இந்த பழக்கம் அதிக அளவில் உள்ளது.
எல்லோரும் சரிசமம் :\ஆண், பெண் இருவரும் சரிநிகர்சமானம் என்று என்றைக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உணர்கிறார்களோ அன்றுதான், நாம் கொண்டாட்டங்களை கையில் எடுக்கவேண்டும். பெண்களின் உரிமைகள், என்று கேட்கப்படாமல் பெறப்படுகிறதோ அன்றுதான் உண்மையான மகளிர்தினம்.
- லதா சரவணன்எழுத்தாளர்lathasharn@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyagarajan Srimbhs - Coimbatore,இந்தியா
18-ஏப்-201605:53:17 IST Report Abuse
Thiyagarajan Srimbhs அப்பப்பா,உண்மை ஏற்கும் மனநிலை யாருக்கும் இல்லை. அம்மாவுக்கு மட்டும் தெரியும் மகன் பசி....வயதான காலத்தில் அம்மாவுக்கு என்ன வேண்டும்என மகனுக்கு தெரியாது.அவள் சுமை ஆகிறாள்.
Rate this:
Share this comment
Cancel
kusumban - london,யுனைடெட் கிங்டம்
08-மார்-201605:28:01 IST Report Abuse
kusumban /இறைச்சி உண்டு விட்டு ஒருநாள் விரதம் இருப்பதை போலத்தான் ஆகிவிட்டது மகளிர் தினக்கொண்டாட்டங்கள். இறைச்சிகும் இந்த கட்டுரைக்கும் என்னடா சம்பந்தம்.
Rate this:
Share this comment
Cancel
HARINARAYANAN - Chennai,இந்தியா
07-மார்-201617:01:47 IST Report Abuse
HARINARAYANAN //வலியா வலிமையா:என்ன முன்னேற்றங்கள் கண்டுவிட்டோம்? நாங்களும் சரிநிகர் சமானம் என்று வார்த்தைகளில் மட்டும் சொல்லி விட்டு, குடும்பம் அலுவலகம் என்று இரட்டை சவாரி செய்கிறோம். // பெண்ணியம் பேசும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.உங்களின் வார்த்தைகளே சொல்லவில்லையா இரட்டை சவாரி செய்து கண்டது முன்னேற்றம் அல்ல என்று. பணத்தேவை துரத்துகிறது இருவரும் சம்பாதிக்க வேண்டியுள்ளது.குடும்பத்துடன் செலவிடும் நேரம் மிக குறைகிறது. கடைசியில் கண்டது என்ன? என்னை பழமைவாதி என்பீர்கள். இருக்கட்டும் புதுமை வாதிகள் இதில் ஜெயித்திருந்தால் ஒப்புக்கொள்ளலாம். இல்லையே. அடிப்படையில் தவறு எங்கோ இருக்கிறது.நாம் எதற்கு முக்யத்துவம் கொடுக்கிறோம் என்பதில்தானே இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X