சென்னை;'பழைய மருத்துவமனை கட்டடங்களில், சாய்வுதள வசதி இல்லை என்றால், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த, ஜவகர் சண்முகம் தாக்கல் செய்த மனுவில், 'மருத்துவமனைகளில், சாய்வுதள வசதி இருக்க வேண்டும். அவசர காலத்தின் போது, நோயாளிகளை வெளியேற்ற, இது அவசியம். எனவே, அனைத்து மருத்துவமனைகள், கல்லுாரிகளுடன் இணைந்த மருத்துவமனைகளில், சாய்வுதள வசதி அளிக்க, உத்தரவிட வேண்டும்; மீறுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திக், நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
சி.எம்.டி.ஏ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'அதிகாரிகள் அடங்கிய குழு, 150 மருத்துவமனைகளை ஆய்வு செய்ததில், 124 மருத்துவமனைகளில் சாய்வுதள வசதி இல்லை. அந்த மருத்துவமனைகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது'
என, கூறப்பட்டு உள்ளது.
மனுவை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளில், 'மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளில், சாய்வுதள வசதி இருக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது., 2009க்கு பின் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடங்களில், சாய்வுதள வசதி இருக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் கட்டப்பட்ட மருத்துவமனைகளை பொறுத்தவரை, அதில் இட வசதி இருந்தால், சாய்வுதளம் அமைக்க வேண்டும்; இல்லையென்றால், மாற்று ஏற்பாடுகள் செய்ய, பரிசீலிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை ஏற்படுத்த, இந்திய மருத்துவ கவுன்சில், சி.எம்.டி.ஏ., சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறை தலைமை ஆணையர் அடங்கிய குழு கூடி, விவாதிக்க வேண்டும்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, மனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக, ஒரு மாத அவகாசம் கோரப்பட்டுள்ளது. மத்திய சமூக நீதி துறையும், வழக்கில் சேர்க்கப்படுகிறது. அதற்காக, உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், 'நோட்டீஸ்' பெற்றுக் கொண்டுள்ளார். விசாரணை, ஏப்., 21க்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.