துாத்துக்குடி;துாத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து மூன்று நாட்டுப்படகுகளில் சென்ற 20 மீனவர்களை எல்லை தாண்டியதாக, இலங்கை ராணுவத்தினர் சிறைபிடித்தனர். இவர்களை விடுவிக்க கோரி அவர்களது குடும்பத்தினர், குழந்தைகளுடன் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.துாத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து மார்ச் 2,3ம் தேதிகளில் கடலில் மீன் பிடிக்க சந்தியா பச்சேக், டெல்லஸ், ரோஸ்டன் ஆகியோருக்கு சொந்தமான நாட்டுப் படகுகளில், சுனாமி காலனி, லுார்தம்மாள்புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 20 மீனவர்கள் சென்றிருந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் கடல் பகுதியில், பாம்பனுக்கு தென் பகுதியில் , 45 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை ராணுவத்தினர், மார்ச் 5ம் தேதி படகுடன் சிறை பிடித்தனர்.
கல்பட்டி பகுதியில் விசாரணை நடத்தி ,அங்குள்ள கோர்ட்டில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களை விடுவிக்க கோரி 20 மீனவர்களின் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுடன், கண்ணீருடன், துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சித்திரை ராஜிடம் மனு கொடுத்தனர்.இதில் தெரிவித்திருப்பதாவது: எங்களது மீனவர்கள் பாரம்பரிய முறைப்படி இயற்கையாக மீன் பிடி தொழில் செய்தவர்களை, இலங்கை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என, அதில் தெரிவித்திருந்தனர்.
நாட்டுப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ஜான்சன் கூறியதாவது: இலங்கை ராணுவம் சிறை பிடித்துள்ள 20 மீனவர்களின் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். தங்களின் வாழ்வாதாரமான குடும்பத்தலைவர்களை பிரிந்துள்ளதால் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும், என தெரிவித்தார்.மீனவர் சங்கத்தலைவர் சேசு கூறியதாவது: மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது, இலங்கை ராணுவம் மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. படகுகளை பறிமுதல் செய்துள்ளது. மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் இலங்கை ராணுவம் நடந்துகொள்கிறது.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுவித்து மீனவ குடும்பங்களை காப்பாற்ற வேண்டும், என தெரிவித்தார்.