சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

தேர்தலும் சட்டங்களும் 6: தேர்தல் நடத்துதலும் சமூக ஊடகங்களில் தேர்தல் விளம்பரங்களும்

Added : மார் 08, 2016
Advertisement

தேர்தல் நடத்துதல் என்பது வேட்புமனு தாக்கலுக்கான, தேர்தலுக்கான தேதியினை தேர்தல் ஆணையம் வெளியிடுவதில் இருந்து துவங்குகிறது.

அதாவது தமிழகத்தில் தேர்தல் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.

தமிழகம் 234 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்தல் தேதி விவரங்களை தேர்தல் ஆணையமானது அரசிதழில் வெளியிடுவதன் வாயிலாகவே செய்யும். (இந்த தேர்தல் தேதி விவரங்களை ஏப்ரல் 22ம் தேதி அரசிதழில் வெளியிடும்.)

தேர்தல் குறித்த தேதிகள் எனில், வேட்பாளர் மனுதாக்கல் நாட்களின் ஆரம்பம் முடிவு,

மே மாதம் வரவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர் மனுதாக்கல் ஏப்ரல் 22ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரைக்கும் வேட்பாளர்களாக நிற்பவர் மனு தாக்கல் செய்யலாம்.


அத்தோடு, எந்த இடத்தில் ஒரு வேலை நாளின் எந்த நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்பதையும் குறிப்பிடும்.

அதே போல, வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான தேதியிலிருந்து குறைந்த பட்சம் 14 நாட்கள் அல்லது அதற்க்குப்பின்னரே தேர்தலுக்கான நாள் அமையும். அதாவது இப்போது நடக்கவிருக்கும் தேர்தலுக்கு வேட்பாளராக நிற்க விண்ணப்பித்திருந்து பின் அந்த விண்ணப்பத்தினை எவரேனும் திரும்பப் பெற விரும்பினால் அந்த விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி மே மாதம் இரண்டாம் நாள்.

இந்த தேதியில் இருந்து 14 நாள் அல்லது அதற்கு மேற்பட்டு நாட்கள் கழித்தே தேர்தலுக்கான தினம் அமைய வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 -ன் ஐந்தாம் பாகத்தின் முதல் அத்தியாயத்தின் பிரிவு 30 சொல்கிறது. இதன்படியே கணக்கிட்டால், மே 2 - ம் தேதி வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைச் தேதி. அந்தத் தேதியில் இருந்து 14வது நாள் ஆகிய மே 16-ம் தேதி அன்று தேர்தல் நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய நாட்கள், இடம், நேரம், வேட்புமனு திரும்பப் பெறுதல், கூர்ந்தாய்வு, தேர்தல் தேதி அறிவித்தல், ஆகியவற்றின் பின் தேர்தலுக்கு வேட்பாளர்களை நியமனம் செய்யும். அதாவது, வேட்பாளராக நிற்க தகுதி உடைய நபர்களை வேட்பாளராக அறிவிக்கும்.

வேட்பாளர் வேட்பு மனுவைத் தாமாகவோ, அல்லது மற்றவர் முன்மொழிவதன் மூலமோ, வேட்பாளர் கையெழுத்து, நிற்கப்போகும் தொகுதியில் வாக்காளராக உள்ள முன் மொழிபவர் ஒருவராலும் ஒப்பமிடப்பட்டு தேர்தல் ஆணையம் சொன்ன இட, நேரத்தில் சமர்பிக்கப்பட வேண்டும்.

அரசியல் கட்சி அல்லாத சுயேட்சை வேட்பாளர்கள், அதே தொகுதியில் வாக்காளராக உள்ள பத்து முன் மொழிபவர்களால் முன் மொழியப்பட வேண்டும்.

எந்தத் தொகுதியேனும் ஆதிதிராவிடர்க்கானது என ஒதுக்கப்பட்டிருந்தால், அந்தத் தொகுதியில் அவர் நிற்க உள்ள உரிமையை விண்ணப்பத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.


வேட்பாளராக விண்ணப்பிக்க விரும்புபவர், அதற்கு முன் அரசு அலுவலராக இருந்திருந்து, வேலையிலிருந்து பணியறவு செய்யப்பட்டு, அப்படியான நாளில் இருந்து 5 வருடங்கள் ஆகி இருக்காவிட்டால், அந்த நபர் தான் வேலையிலிருந்து வெளியேறியதற்கான காரணம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 9 ல் சொல்லப்பட்ட காரணம் அல்ல என்பதை சான்றிதழ் இணைப்பதன் மூலம் நிருபிக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 9 ”ஊழல் அல்லது தேசப்பற்றுறுதியின்மைக்காக பணி நீக்கத்தின் பேரில் தகுதியின்மை பற்றி” சொல்கிறது.


வேட்பாளர், வேறு ஒரு தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலின் நகல் ஒன்று வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வேட்பாளர் அளிக்க வேண்டிய மேற்கண்ட தகவல்களுடன், 2 வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை அளிக்கும்படியான குற்றத்திற்காக வேட்பாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதா என்பதையும்,


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (1), 8(2) அல்லது 8(3) ல் குறிப்பிடப்பட்ட குற்றத்திற்க்காக ஒருவருடம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு தண்டிக்கப்பட்டுள்ளாரா எனும் தகவலையும் அளிக்க வேண்டும்.

வேட்பாளர் மக்களவைத் தேர்தல் எனில் ரூபாய் 25,000/-


வேட்பாளர் அட்டவணை பழங்குடி இனம் எனில் 12,500/- ம்

சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் எனில் ரூபாய் 10,000/-ம்


வேட்பாளர் அட்டவணை பழங்குடி இனம் எனில் ரூ.5,000/-ம் தொகையை,


வேட்பாளர் தேர்தல் பொறுப்பு அலுவலரிடம் ரொக்கமாக, ரிசர்வ் வங்கியில், அல்லது அரசு கருவூலத்தில் வைப்பீடு செய்து, அதற்கான பற்றுச் சீட்டை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்தல் வேண்டும்.

வேட்பு மனு, வேட்பாளர், அவரின் விண்ணப்பங்கள், போன்றவற்றை தேர்தல் பொறுப்பு அலுவலர் கூர்ந்தாய்வு செய்வார். அதைச் செய்யும் நாளும் தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்படும். (இந்த தேர்தலுக்கான கூர்ந்தாய்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 30). வேட்பாளரின் விண்ணப்பத்தில் திருப்தியுற்றதும், வேட்பு மனுவின் மீது அதன் தொடர் எண்ணினைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் வேட்பாளரிடம் வேட்புமனு என்னாளில் என்னேரத்தில் அளிக்கப்பட்டது, போன்றவற்றைக் குறிப்பிட்டு சான்றிதழில் ஒப்பமிட வேண்டும். அவரது அலுவலகத்தில் பார்வையில் படும் இடத்தில் வேட்பாளர் முன்மொழிபவர் குறித்த தகவல் அடங்கிய அறிவிப்பினை ஒட்ட வேண்டும்.

தேர்தல் ஆணையமே வெவ்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் கொள்கை பரப்புரை செய்ய கேபிள் டெலிவிஷன் அல்லது ஏதேனும் எலக்ட்ரானிக் மீடியா மூலம் நியாயமான முறையில் நேரப் பங்கீடு செய்தல் வேண்டும்.

அந்த நேரப்பங்கீடும் வெளியீடும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 38ன் கீழ் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின்னரும், தேர்தல் தேதிக்கு 48மணி நேரத்திற்கு முன்னதாகவும் அமைதல் வேண்டும்.


இதற்கான விதியினை தேர்தல் ஆணையம் அமைக்கும். அதன்படியே அந்த கேபிள் டெலிவிஷன் மற்றும் எலக்ட்ரானிக் மீடியா நடந்து கொள்ளல் வேண்டும்.


இதில் எலக்ட்ரானிக் மீடியா என்பது வானொலி மற்றும் மைய அரசினால் அரசிதழில் அறிவிக்கையிடப்படும் வேறு ஏதேனும் ஒளிபரப்பு ஊடகம் உள்ளடங்கும்.


சமூக ஊடகங்கள் என்பது புதிதாக முளைத்துள்ள ஒரு ஊடகம். ஊணிணூட் 26ல் தகவல் தொடர்பு தகவல்களை இணைக்கையில் ஒவ்வொரு வேட்பாளரும் தனது சமூக வலைதளங்களின் முகவரியையும் அளிக்க வேண்டும்.


தேர்தல் பிரசாரம் குறித்த எந்த பிரச்சனையையும் தேர்தல் ஆணையம் கையாள்வதில், சமூக ஊடக பிரசாரங்களும் அடங்கும்.


சமூக ஊடக பிரசாரம் குறித்த விதிகளை தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும், தேர்தல் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. (No. 491/SM/2013/Communication Dated: 25th October, 2013)

தொலைக்காட்சி, கேபிள் போன்ற எந்த ஊடகத்தில் விளம்பரம் செய்வதானாலும், அதற்கு முன் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி(pre-certification) வாங்கி இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் என்பவையும் எலக்ட்ரானிக் மீடியா எனும் சட்ட பதத்தின் கீழேயே வருவதால், தேவையான மாற்றங்களுடன்(mutatis mutandis) இணைய தளங்களில் செய்யும் விளம்பரங்களூம் இந்த முன் அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் வாங்கி இருக்க வேண்டும்.

வேட்பாளர் அல்லாத மற்றவர்கள் சமூக ஊடகங்களில் செயலாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட (No. 491/SM/2013/Communication Dated: 25th October, 2013) சுற்றறிக்கையில், தேர்தல் ஆணையம் கூறிய நன்னடத்தை விதிகளுக்குப் புறம்பாக வெளியிடப்படும் தனி நபர் கருத்துக்களைக் கையாள்வதில், சர்வரானது இந்தியாவிற்கு வெளியிலும் இருக்கலாம் என்பதால் அதற்கு, மற்றும் அதுபோன்ற நேர்வுகளில் தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் ஆலோசித்து நேர்விற்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்கிறது.


சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்படும் பரப்புரைகள் சமூக நல்லிணக்கத்திற்கோ, மற்ற வேட்பாளர்கள் பற்றிய அவதூறாகவோ அமைந்தால், அதாவது தேர்தல் ஆணையம் வெளியிட்ட code of conductக்கு மாறாக அமைந்தால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நீதி காணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

சமூக வலைதளங்களில் செய்யப்படும் விளம்பரங்களும் கட்சிகளின் விளம்பரமாகவே தேர்தல் ஆணையம் பார்க்கிறது. ஆனால், பதியப்படும் அனைத்து அரசியல் கருத்துக்களுமே விளம்பரங்கள் எனச் சொல்ல இயலாது.


வெப்சைட்டுகளில் செய்யப்படும் விளம்பரங்கள், எத்தனை முறை க்ளிக் செய்யப்படுகிறதோ அதைப் பொறுத்தே அதற்கான செலவு அமையும். ஆனால், அதற்கு அந்த வேட்பாளர் CPC பயன்படுத்தினால் மட்டுமே அதைக் கணக்கிட இயலும்.

தேர்தல் விளம்பரங்களை ஆன்லைனில் செய்வதற்கான கணக்கையும் ஒப்படைக்க வேண்டும் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், அரசியல் கட்சி அல்லாத, உறுப்பினரும் அல்லாத ஆனால் அந்த கட்சி மீது பற்றுள்ள ஒரு கூட்டம் அந்தக் கட்சிக்காக விளம்பரங்களை வெளியிட்டால், வெப்சைட் நடத்தினால் அதற்காக ஆகும் செலவு தேர்தல் செலவாகவே கணக்கிடப்படுமா? எனில் அதில் நியாயம் உள்ளதா?

தேர்தல் நடக்கும் கடைசி 48 மணி நேரங்களுக்கு விளம்பரம் கூடாது என தனது விதிகளில் தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால், அந்த நேரத்திற்கு முன் சொல்லப்பட்ட வாசகங்கள் தாமாகவே மறுசுழற்சியில் சுற்றுக்கு வந்தால், ரி ட்வீட் செய்யப்பட்டால், மற்றும் ஷேர் செய்யப்பட்டால் அதன் நிலை என்ன என்பது குறித்து விதியில் தெளிவில்லை.


தேர்தல் ஆணையம் ஒரு நியாயமான தேர்தலை நடத்தி முடிக்க ஒரு விதியை அமைத்திருக்கிறது. கண்காணிக்கவும் செய்கிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தையும் விட பொது மக்களே கவனமாக நேர்மையாக இருந்து தேர்தல் ஆணையத்தை தேர்தல் நடத்தச் செய்ய வேண்டும். மக்களாகிய நம் கையில் இருக்கிறது பொறுப்பு.

.(இணைந்தே இன்னும் பயணிப்போம்)..

-ஹன்ஸா (வழக்கறிஞர்),legally.hansa68@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X