அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கூட்டணியா, தனித்து ஆட்சியா?: கருணாநிதி சிறப்பு பேட்டி

தமிழகத்தில், மே, 16ல், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், அ.தி.மு.க., - தி.மு.க., உட்பட, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில், தேர்தலில், காங்கிரஸ் உட்பட, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ள தி.மு.க., தேர்தலுக்குப் பின், தனித்து ஆட்சி அமைக்குமா அல்லது கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி அளித்த சிறப்பு பேட்டி:

 கூட்டணியா, தனித்து ஆட்சியா?: கருணாநிதி சிறப்பு பேட்டி

கூட்டணி அமைக்கும் விஷயத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை, இம்முறை நீங்கள் ஏன் தொடர்பு கொள்ளவில்லை?கூட்டணி அமைக்கும் விஷயத்தில், எப்போதும், நானாக வலியச் சென்று யாரையும் தொடர்பு கொள்வதில்லை. ஒருமித்த கருத்துடையவர்கள் ஒன்று சேருவதில், 'யார் முதலில் பேசுவது' என்ற எதிர்பார்ப்பு முக்கியமல்ல. அது மாத்திரமல்ல; பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இந்த முறை தொடக்கத்திலிருந்தே, 'தி.மு.க., மற்றும்அ.தி.மு.க., உடன் கூட்டணி வைக்க மாட்டேன்' என, உறுதியாகத் தெரிவித்து விட்டார்.

தி.மு.க.,வையோ, என்னையோ, ராமதாஸ்எப்படி விமர்சித்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் என்பதால்,அவரிடம் நான் கொண்டிருக்கும் மதிப்பும்; அன்பும் என்றும் மாறாதவை.

லோக்சபா தேர்தலின் போது, உங்களுடன் கூட்டணியில் இருந்த, விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சட்ட சபை தேர்தலில், உங்களை விட்டு விலகி செல்ல யார் காரணம்; மற்ற ஜாதியினரின் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு கிடைக்காது என்ற காரணத்திற்காக, திருமாவளவனை, தி.மு.க., ஒதுக்கி வைத்து விட்டதா?திருமாவளவன் நல்ல நண்பர்; தனிப்பட்ட முறையில் என்னிடம் ஆழ்ந்த அன்பு மிகுந்தவர்; சிறந்த பேச்சாளர். அவரை, தி.மு.க., எப்போதும் ஒதுக்கி வைத்து விடவில்லை. அரசியலில், கூட்டணியில் சேருவதும், விலகுவதும் சகஜமாகி விட்ட பிறகு, அதற்கு யார் காரணம் என்று, தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தில், கூட்டணி ஆட்சி சாத்தியமா; அதற்கு நீங்களே, பிள்ளையார்சுழி போடுவீர்களா?கூட்டணி ஆட்சி என்பது, தேர்தலுக்குப் பிறகு வெற்றியின் பரிமாணத்தைப் பொறுத்து உருவாக வேண்டியது. ஒரு கட்சி, முழுப் பெரும்பான்மை பெற்று விட்டால், அப்போது கூட்டணி ஆட்சி தேவையில்லை. எந்தக் கட்சிக்கும் முழுப் பெரும்பான்மை கிடைக்காத போது, கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாதது. கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றதும் உண்டு; தோல்வி அடைந்ததும் உண்டு.

யாருக்கும் பிடி கொடுக்காமல் இருக்கும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன?அவசரப்படுவது ஆக்கப்பூர்வமான விளைவுகளைத் தராது என்ற எண்ணம் இருக்குமே தவிர, எதிர்பார்ப்பு எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை.
தமிழக அரசியலில், 'இலவசங்கள்' தவிர்க்க முடியாததாகி விட்டது. இலவசங்கள் இல்லாமல் தேர்தலை சந்திக்க, எந்தக்கட்சிக்கும் தைரியம் இல்லையே ஏன்?மக்களிடம் இல்லாமையும், போதாமையும் இருக்கின்ற வரை, இலவசங்கள் தவிர்க்க முடியாதவை தான். இலவசங்களை காலப் போக்கில் குறைக்கின்ற அதே நேரத்தில், மக்களின் ஏழ்மை நிலையை போக்கிட முயற்சிக்க வேண்டும்.
இந்த முறை, உங்கள் கட்சி சார்பில், 'இலவசம்' உண்டு எனில், 'ப்ரிஜ்' தருவீர்களா?தேர்தல் அறிக்கை வெளியானவுடன் தெரிந்து கொள்க.

'பார்லிமென்டில், என்னை பேசஅனுமதிப்பதில்லை' என்று கூறிய காங்., துணை தலைவர் ராகுல், 'பேச வாய்ப்பு கிடைத்தும், பேசாமல் ஓடி விட்டார்' என, கூறப்படுவது பற்றி?காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஓடி ஒளிபவரல்ல; பார்லிமென்டில் பேசுவதற்குப் பயப்படுபவரும் அல்ல. அரசியல் தலைவர்கள் யாரும் செல்வதற்கு யோசிக்கும் இடங்களுக்கும், ராகுல் அச்சமின்றி சென்று வருகிறார். அவர் எழுப்பியிருக்கும், நான்கு கேள்விகளுக்கு பா.ஜ., ஆட்சியினர் பதிலளிக்கவில்லையே.
தி.மு.க., தலைமையில், பலமான கூட்டணி அமைந்து விட்டதா? ஒவ்வொரு முறையும் கூட்டணி அமைப்பதில், வித்தகர் என்று பெயர் பெற்ற நீங்கள், இந்த முறை அந்த விஷயத்தில், தடுமாற்றம் அடைந்து இருப்பதாககூறப்படுகிறதே; காரணம் என்ன?கூட்டணி அமைத்திடும் காரியமே, இன்னும் முழுமை அடையாத போது, அது பலமானதா, இல்லையா என்பதை, இப்போதே எப்படி கூற முடியும்; எனக்கு எவ்வித தடுமாற்றமும் இல்லை. வலுவான கூட்டணி அமைந்திட வேண்டும் என்பதில், முனைப்பாகவே இருக்கிறேன். நிலைமைகள் கனியும் போது எல்லாம் சரியாகி விடும்; நல்ல அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
நாங்களும் அகராதியில்தேடி விட்டோம்...'தப்பிலித்தனம்' என்றால் என்ன?பேச்சு வழக்கில் உள்ளசொல் அது; 'தப்பிலித்தனம்' என்றால், தப்பு அல்லது தவறை தாராளமாகச் செய்யும்தீய குணம்.
மீண்டும் முதல்வரானால், முதல்கையெழுத்து மது விலக்கே என, முன்னர் கூறினீர்கள்; இப்போது, அதுபற்றி ஏன்பேசுவதில்லை?மது விலக்கில் எவ்வித தள்ளாட்டமும் இல்லை; முதல் கையெழுத்து மதுவிலக்கு என்பதில், எள்ளளவும் மாற்றமும் இல்லை. சொன்ன உறுதி மொழியை, தினமும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. தி.மு.க., எப்போதும், சொன்னதை செய்யும்; செய்வதையே சொல்லும் என்பதை தமிழக மக்கள் அறிவர்.
கோடநாட்டில் ஓய்வெடுக்கும் ஜெ.,யால் முதலீடு எப்படி வரும்?
இத்தனை முறை சந்தித்த தேர்தல்களுக்கும், தற்போது நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கும் என்ன வேறுபாட்டை உணருகிறீர்கள்?நான், இதுவரை சந்தித்த தேர்தல் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமான அரசியல் சூழ்நிலையில் நடைபெற்றவை. எல்லா தேர்தல்களும், ஒரே மாதிரியானவை அல்ல; ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு இருக்கவே செய்யும். ஜனநாயகத்தை தாங்கிப் பிடித்துள்ள, துாண்கள் பலவீனப்பட்டிருக்கும் கட்டத்தில், நடைபெறும் தேர்தல் இது என்பது தான் வேறுபாடு.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், 'மோடி என் நண்பர்' என்றீர்கள்; இன்னமும் அந்த நட்பு தொடர்கிறதா?
சமீபத்திய மத்திய பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்ட நீங்கள், 'மோடி பாஸ் செய்து விட்டார்' என, தெரிவித்துள்ளீர்கள். காங்கிரசுடன் கூட்டணி இருக்கும் போது, இதுபோல், முரண்பாடான கருத்து கூறுவது, நெருடலாக இருக்காதா?


மோடி என்றைக்கும் என் நண்பர் தான். நான் ஆட்சியில் இருந்த போது, டில்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது, குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, நான் அமர்ந்திருந்த இடத்திற்கு வெகு துாரத்தில் அமர்ந்திருந்தார்.இருப்பினும், என்னைக் காண்பதற்காக அங்கிருந்து வந்து என்னிடம் அன்போடு பேசினார். பொதுவான அரசியல் வேறு; தனிப்பட்ட நட்பு வேறு. நட்பு அரசியலை தாண்டியது. நட்புக்கு, காலம்,- இடம் என்ற எல்லைகள் கிடையாது.மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை பற்றி,

அவருடைய கட்சி, தி.மு.க.,வுடன் கூட்டணியில் இல்லை என்ற காரணத்தால், அதை முழுவதும் எதிர்த்துக் கருத்துக் கூறுவது தவறு. நிதி நிலை அறிக்கை என்ற தேர்வில், பிரதமர் மோடி நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்று, மிகச் சிறந்த வெற்றியைப் பெற முடியவில்லை என்றாலும்; தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார் என்று சொல்வது, எப்படி முரண்பாடாகும்.

முதல்வர் ஜெயலலிதா மீது, சொத்துகுவிப்பு வழக்கு, சமீபத்திய வெள்ள பாதிப்பு என, பல விஷயங்களில், மக்களிடம்அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறும் நீங்கள், அதை சரியாக பயன்படுத்தாதது ஏன்?எதிராளி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என்கிற போது, அது பற்றி மக்களே நேரடியாக அனுபவித்து, நன்றாக உணர்ந்து, முடிவெடுத்து வருகின்ற நேரத்தில், மேலும் மேலும் அதையே திரும்பத் திரும்பச் சொல்வது தேவையில்லாதது.எனினும், பல்வேறு முனைகளிலும், அ.தி.மு.க., அரசு படுதோல்வி அடைந்திருப்பதையும், மக்கள் நலனுக்கும்; ஜனநாயக மாண்புகளுக்கும் எதிராக நடந்து வருவதையும், ஆதாரங்களோடு எடுத்துக் காட்டிப் பிரசாரம் செய்வதில், தி.மு.க., பின்வாங்கியதில்லை, முன்னணியிலே இருந்து வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கறிவர்.

'கடந்த, தி.மு.க., ஆட்சியில் நடந்ததவறுகளுக்காக, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என, 'நமக்கு நாமே' பிரசாரத்தின் போது, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பல முறை கூறினார்; இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?ஏற்கனவே, இதற்கு நான் பதில் கூறி விட்டேன். பொருளாளர் கூறியது பெருந்தன்மையின் பாற்பட்டது. தி.மு.க., அரசு தவறு செய்து விட்டதாக, எதிர்க்கட்சியினர் சொன்னதை நம்பியதால் தானே, கடந்த முறை மக்கள் எங்களுக்கு ஓட்டளிக்கவில்லை. அவர்கள் அப்படி கருதியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் யதார்த்தமாகக் கூறியிருக்கிறார். 'மக்கள் குரலே மகேசன் குரல்' என்பதை ஏற்ற பிறகு, மக்களிடம் மன்னிப்பு கோருவது ஒன்றும், மாபாதகம் அல்ல. எனவே, அதை வைத்துக் கொண்டு கழகத்திற்குள் புரிதல் பிழை உண்டாக்க முடியாதா என்று சிலர் நினைத்தனர், ஓய்ந்து போய் விட்டனர்; அவ்வளவு தான்!
தி.மு.க., ஆட்சியில், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே, தமிழக அரசின் கடன் தொகை இருந்தது. தற்போது, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டது. நீங்கள் முதல்வராக பொறுப்பு ஏற்றால், இந்த பிரச்னையை எப்படிச் சமாளிக்க போகிறீர்கள்?அரசின் கடன் குறித்து, நீங்கள் சொல்வது, தவறான புள்ளி விவரங்கள். தி.மு.க., ஆட்சியில், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் என்பது தவறு. நீங்கள் சுட்டிக்காட்டும், இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் என்பது, தமிழக அரசு மட்டும் பட்டிருக்கும் கடன் தொகை. பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன் தொகை இதில் சேராது.

அ.தி.மு.க., அரசின் கடன், நான்கு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. நிர்வாக ரகசியங்களை முன்கூட்டியே வெளிப்படையாக விவாதிப்பது நல்லதல்ல. மனதில் உறுதியும், துணிவும் இருக்கும் போது, மாற்று வழி காண்பது என்பது கடினமானதல்ல.

கடந்த தி.மு.க., ஆட்சியில், ஏராளமான அதிகார மையங்கள் இருந்தன என்பது தான் முக்கிய குறையாக இருந்தது என்ற புகார் உண்டு. இந்த முறை நீங்கள் ஆட்சி அமைத்தால், அந்த குறை நீக்கப்படுமா?உண்மையில் அப்படி அதிகார மையம் எதுவும் இருந்ததில்லை. எனினும், அந்தக் கற்பனை புகாருக்கும் இந்த முறை வாய்ப்பு தராமல் மிகுந்த எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளப்படும். இமைப் பொழுதும் சோர்ந்து விடாமல், எப்போதும் விழிப்போடு கண்காணிப்பது தான், ஜனநாயகத்திற்கு நாம் தர வேண்டிய விலை -என்பதை, நாங்கள் அறிவோம்.

மக்கள் நல கூட்டணி பற்றி உங்கள் கருத்து; இந்த கூட்டணியால், தி.மு.க., வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுமா; இந்த கூட்டணி உருவானதற்கு, உண்மையான காரணம் என்ன?ஆளுங்கட்சிக்குத் தோழமை கட்சியாக இருப்பதை விட, தாங்களும் ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் தான், அந்தக் கட்சிகளிடம் இருக்கிறது என, நினைக்கிறேன். அதுவே, அந்தக் கூட்டணி உருவாவதற்குக் காரணமாக இருக்கலாம்.

தி.மு.க., வெற்றிக்கு, எந்தெந்த விஷயங்கள் சாதகமாக உள்ளன?ஐந்தாண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியின் தொடர்ச்சியான தவறுகள்; அடுக்கடுக்கான ஊழல்கள்; முறைகேடுகள்; வெற்று விளம்பரங்கள்; சர்வாதிகாரத்தை நினைவுபடுத்தும் தான் தோன்றித்தனம், யாரையும் மதிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் நடந்து கொண்டது.'நானிலமும் நானே' என்ற தன்முனைப்பு;எதிர்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்கி நடத்த வேண்டு மென்ற ஆணவம்; வாக்குறுதிகளை நிறைவேற்றாத வாய்மையின்மை; மக்கள் நலன் பேணாமை; ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு பிரச்னை பெரிய அளவில் இருந்தது. தற்போது உண்மையில், தமிழகம், மின் மிகைமாநிலமாக மாறி விட்டதாக, மின் துறை அமைச்சர் சொல்கிறாரே... துறையின் அமைச்சரும், முதல்வரும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்ற உண்மைக்கு மாறான, இந்த வாதத்திற்கு விரிவாகவும், தெளிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும், பிப்., 3ல், 'முரசொலி'யில், 'உடன்பிறப்பு மடல்' தீட்டியிருக்கிறேனே?

மின் துறையில் நடைபெறும், பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல்கள் பற்றி, ஒவ்வொரு நாளும், ஏடுகளில் பக்கம் பக்கமாக வருகின்ற செய்திகளை, நீங்கள் படித்துப் பார்த்தாலே, உண்மையைப் புரிந்து கொள்ளலாம். ஏன், அந்த ஊழல்கள் பற்றி உங்கள், 'தினமலர்' நாளேடு வெளியிடும் செய்திகளிலிருந்தே தெரிந்து கொள்ளலாமே?கடைசியாக, மின் உற்பத்தி நிலையத்திற்கு, 'கன்வேயர் பெல்ட்' வாங்குவதில், 200 கோடி ரூபாய் ஊழல் என்று, 'தினமலர்' தானே செய்தி வெளியிட்டிருந்தது.

பிரதமர் மோடி, ஊர் ஊராக சுற்றி,முதலீடுகளை திரட்டுகிறார். ஆனால்,தமிழக முதல்வர் ஜெயலலிதா, இரண்டு நாள் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தி, 2.42 லட்சம் கோடி ரூபாய்முதலீடு திரட்டியுள்ளாரே? முதல்வர் ஜெயலலிதா, 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு திரட்டியிருக்கிறார் என்பதை உண்மை என்று, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா; நம்புகிறீர்களா? ஒவ்வொரு மாநில முதல்வரும் வெளி மாநிலங்களுக்குச் சென்று, 'எங்கள் மாநிலத்திற்கு தொழில் தொடங்க வாருங்கள்' என்று அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால், நம் மாநில முதல்வர் கோடநாட்டிற்கும், சிறுதாவூருக்கும் சென்று ஓய்வெடுப்பதில் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தார். இந்த லட்சணத்தில் முதலீடு எப்படி வரும்?

தற்போது, 'ஸ்டிக்கர்' ஆட்சியே நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நீங்கள் முதல்வராக இருந்தபோது, மக்களுக்கு அளிக்கப்பட்ட இலவச பொருட்களில், உங்கள் படம் போட்டு தானே கொடுக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியை மட்டும், எப்படி குறை கூற முடியும்?தி.மு.க., ஆட்சியில் என்ன, எந்த ஆட்சியிலும், முதல்வர் படத்தை முன்னிறுத்தியே சில காரியங்களைச் செய்வார்கள். ஆனால், இந்த ஆட்சியில் நடந்த ஆரவார விளம்பரக் கொடுமை வேறு எந்த ஆட்சியிலாவது உண்டா?அமைச்சர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களிலும், மணமக்கள் நெற்றியை மறைத்து ஜெயலலிதாவின், 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது உண்டா இல்லையா? இதுபோல, தி.மு.க., ஆட்சியில் என் புகைப்படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டதா? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், பார்ப்போம்! எதற்கெடுத்தாலும், ஜெயலலிதா ஆட்சியின் மீது நேரடியாகக் குற்றம் சாட்ட அஞ்சி நடுங்குபவர்கள், தி.மு.க., ஆட்சியையும் வம்புக்கு இழுத்து, வாய் ஜாலம் காட்டுவதைப்பழக்கமாக்கிக் கொண்டு விட்டனர்.
கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா, ஒரு நல்லதையும்செய்யவில்லையா?அப்படி யாரும் சொல்லவில்லையே; தப்பித் தவறி அவரையும் அறியாமல், ஒரு சில நல்ல விஷயங்கள் நடந்திருக்கலாம்.

'எதற்கு இந்த அரசியல்; எல்லாவற்றையும் விட்டு விட்டு சென்று விடுவோம்' என்று எப்போதாவது உங்களுக்கு எண்ணம்வந்தது உண்டா?பாதிக் கிணறு தாண்டும் பழக்கம், எனக்கு எப்போதும் கிடையாது. சிறுவனாக இருந்த போது, நானும், என் நண்பன் தென்னனும், திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தில் நீந்தி மைய மண்டபத்திற்குச் செல்ல முயன்றோம். முக்கால் துாரம் சென்றதும், என் நண்பனால் நீந்த முடியவில்லை. 'திரும்பி விடலாம்' என்றார். 'திரும்புவதென்றால், முக்கால் பகுதி நீந்த வேண்டும்; மைய மண்டபம் என்றால், கால் பகுதி துாரம் தான் நீந்த வேண்டும்; அதற்கே செல்லலாம்' என்று நான் கூறி, நீந்தி மைய மண்டபத்தை அடைந்தோம். எனவே, எதற்கு இந்த அரசியல்; எல்லாவற்றையும் விட்டு விட்டுச்

Advertisement

சென்று விடுவோம் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை. அரசியல், நான் விரும்பித் தேர்ந்தெடுத்த பாதை. வாழ்க்கையின் எல்லாப் பாதைகளிலும், குளிர்ச் சோலையும் இருக்கும், சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டவுடன் பதுங்கி ஓடுபவன் நானல்ல!
தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு, ஸ்டாலின் ஆசைப்பட்டதாகவும், ஆனால், க.அன்பழகனுடன் போட்டி போட, 'தம்'இல்லாததால், அந்த தேர்தலே நடக்கவில்லை என, தி.மு.க.,விலேயே ஒருபேச்சு அடிபடுகிறதே...கழகப் பொதுச் செயலர், பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலினை, தான் பெற்ற பிள்ளையை விட அதிகமாக நேசிப்பவர். அவனது உடல் நலத்தைப் பற்றி, நான் கேட்பதை விட அதிகமாக அவ்வப்போது அக்கறையோடும்; அன்போடும் விசாரித்து வருபவர். இப்படியெல்லாம் நீங்கள் உங்களுக்கே, உரிய வழக்கமான பாணியில் கேள்விகளைக் கேட்டு, குழப்பத்தை ஏற்படுத்த, இனியும் முயற்சிக்க வேண்டாம். அத்தகைய முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெறவும் இயலாது.

எதுவாக இருந்தாலும், ஒரு கை பார்க்கும் தன்னம்பிக்கை குணமுடைய உங்களுக்கு, தற்போதைய அரசியல் போக்கு என்ன மனநிலையை ஏற்படுத்துகிறது?அரசியல் போக்கு எதுவாக இருந்தாலும், ஒரு கை பார்க்கும் தன்னம்பிக்கை குணம் என்னிடம் இப்போதும் நிறைந்திருந்து, நீடிக்கிறது. எனவே, தற்போதைய அரசியல் போக்கு, என்னிடம் உள்ள அந்தக் குணத்தை மேலும் திடப்படுத்தி வருகிறது.'முடிந்தால் ஓடுங்கள்; இல்லையெனில், நடந்து செல்லுங்கள்; அதுவும் இயலவில்லை எனில், ஊர்ந்தேனும் செல்லுங்கள்; முன் நோக்கிய நகர்வு தான் முக்கியம்' என்பதை, நான் எந்த நிலையிலும் மறப்பதில்லை.

நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,'பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா' போன்ற ஆடம்பர விழாக்கள் நடத்தப்படுவது குறையுமா? உங்களுடைய இந்தக் கேள்வியே, அதற்கு துணை செய்யும் என்று நம்புகிறேன்.
சிலர் இன்னமும் கூட, தி.மு.க., - - காங்., கூட்டணி உறுதியாகவில்லை என்றும் சொல்கின்றனரே?காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களுள் ஒருவரான குலாம் நபி ஆசாத்தும், தமிழகத் தலைவர் இளங்கோவனும், என் வீட்டிற்கே வந்து, என்னைச் சந்தித்து உரையாடி விட்டு, செய்தியாளர்களிடமும் அங்கே பேசப்பட்ட விவரங்களைக் கூறிய பிறகு, இத்தனை நாட்கள் கழித்து, இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்களே?

பா.ஜ., - - அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்டால் எப்படி இருக்கும்?ஏற்பட்டால் கருத்து சொல்கிறேன்; ஏற்படுமா என்று அவர்களைக் கேட்டுச் சொல்லுங்கள்!

ராமதாசின் பேரன் திருமணத்தின் போது, 'பா.ம.க.,வுடன் கூட்டணி அமையுமா' என, கேட்ட போது, 'பொதுக்குழு கூடி முடிவெடுப்போம்' என, சொன்ன நீங்கள், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மட்டும், தொடர்ந்து தாங்களாகவே அழைக்கிறீர்களே...
பா.ஜ., உள்ளிட்ட வேறு சில கட்சிகள் எல்லாம், அவரைத் தேடி, நேரில் சென்று அழைக்கும் போது, நாம் அழைக்காமல் இருந்து விட்டால், அவர்கள் எல்லாம் அழைத்தனர், தி.மு.க., தலைவர் அழைக்கவில்லையே என்ற எண்ணம், ஏற்பட்டு விடக் கூடாது அல்லவா; அழைப்பு விடுப்பதில் எந்தத் தவறும் இல்லையே?
'தி.மு.க.,வில் இந்துக்கள் தான், 90 சதவீதம் பேர் உள்ளனர்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியிருப்பதை, நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்?அவர் பேசியதில் முன் பகுதியையும், பின் பகுதியையும் விட்டு விட்டு, இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். தி.மு.க., சிறுபான்மையோருக்கு மட்டுமே ஆதரவு காட்டும் கட்சியாக உள்ளது என்று, ஒரு சிலர் கூறிய போது, அதை மறுப்பதற்காக, தம்பி ஸ்டாலின் இவ்வாறு கூறியிருப்பார். பெரும்பான்மை, சிறுபான்மையை அரவணைப்பதும்; சிறுபான்மை பெரும்பான்மையை நாடுவதும்; மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தில் இயல்பாக நடைபெற வேண்டிய காரியங்கள்.

கன மழையால் பாதிக்கப்பட்ட, சில மாவட்டங் களை தவிர, மற்ற பகுதிகளில், ஜெ., ஆட்சி மீது, மக்களுக்கு பெரிய அதிருப்தி இல்லை என்று பேசிக் கொள்கின்றனரே...
ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் தானே? அவர்கள் வேறு எப்படி பேசிக் கொள்வர்; அதிருப்தியில், பெரிய அதிருப்தி,- சிறிய அதிருப்தி என்ற பாகுபாடு இருக்கிறதா என்ன? அதிருப்தி, அதிருப்தி தான். தமிழகமெங்கும் அ.தி.மு.க.,அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வீசிக் கொண்டிருக்கிறதே.

'ஸ்டாலின் முதல்வராக வேண்டும்' என, அவரது மருமகன் சபரீசன் இணையதளம் துவக்கினார். சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரமும் மேற்கொண்டார். சபரீசனுக்கு நீங்கள் கூறிய அறிவுரை என்ன?சபரீசன், ஸ்டாலினுக்கு மருமகன்; எனக்குப் பேரன். அவருக்கு நான் அறிவுரை கூற வேண்டிய அவசியம் என்ன? அப்படியே, அறிவுரைகூறினாலும் அதில் தவறென்ன?

கடிகார பட்டையை, சிவப்பு நிறத்திற்குதிடீரென மாற்றியது ஏன்? மஞ்சள் துண்டுக்கு, மஞ்சள் நிற கடிகார பட்டை அணிந்தால், நன்றாக இருக்கும் என்றுஒரு பேச்சு உள்ளது பற்றி?இதைப் பற்றி நான் ஏற்கனவே விளக்கமளித்திருக்கிறேன். மீண்டும், அதைப் பற்றிப் பேசி நேரத்தை விரயம் செய்ய நான் விரும்பவில்லை. இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான உங்களுடைய உள்நோக்கம் எனக்குப் புரியாமல் இல்லை. (உள்ளே விஷயம் இருக்கிறது என்ற உள்நோக்கத்தில் தான் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது) இவ்வாறு கருணாநிதி கூறினார்.
நீங்கள் பல முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளீர்கள். எதிர்க்கட்சித் தலைவராக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் செயல்பாட்டுக்கு, 'பாஸ் மார்க்' போடுவீர்களா?அவரை எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட விட்டால் தானே; ஆளுங்கட்சி என்று வந்து விட்டால், எதிர்த்துக் குறை சொல்பவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்தின் சாரம் என்பதை உணர வேண்டும்; எதிர்க் கருத்துகளையோ, கருத்து வேறுபாடுகளையோ பேச விட மாட்டேன், காது கொடுத்துக் கேட்க மாட்டேன் என்றால், என்ன நடக்கும்? கடந்த, நான்கரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் மக்களாட்சி மாண்புகளைப் போற்றும் சட்டசபையா நடந்தது? அம்மையாருக்குச் சரணாகதி சபை அல்லவா நடந்தது! போற்றிப் புராணத்திற்கு மட்டுமே இடம்;

புகாருக்கு - விமர்சனத்திற்குக் கூண்டோடு வெளியேற்றம் என்றால், அது தான் சபைக்கான இலக்கணமா? தே.மு.தி.க.,வுக்கு அடுத்த கட்சி தி.மு.க., அந்தக் கட்சியின் தலைவனான நான், அண்ணாவின் தம்பி; ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவன்.தற்போது முதுகில், அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் நடக்க முடியவில்லை. அப்படிப்பட்ட எனக்கு, சபை விவாதங்களில் கலந்து கொள்ளத்தக்க அளவுக்கு இடம் ஏற்பாடு செய்து தர வேண்டியது ஆளுங்கட்சியின் கடமைஅல்லவா?

அதைக் கூடச் செய்யாத குரூர எண்ணம் கொண்டதே, அ.தி.மு.க., ஆட்சி. தம்பி விஜயகாந்தையும் எதிர்க்கட்சித் தலைவராக இயங்க, அ.தி.மு.க., ஆட்சியினர் அனுமதித்திருந்தால், பாராட்டத்தக்க வகையில்பணியாற்றி இருப்பார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
02-மே-201608:17:31 IST Report Abuse

a natanasabapathyமுதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பிறகு சித்தப்பா என்று கூப்பிடலாம்

Rate this:
skmoorthi - sivakasi  ( Posted via: Dinamalar Android App )
12-மார்-201605:33:43 IST Report Abuse

skmoorthiமுரண்பாடின் மொத்த உருவம் மு.க அவர்கள். ஆனால் மக்கள் முன்னைப்போல் முட்டாள்கள் அல்ல!!!

Rate this:
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
12-மார்-201602:20:04 IST Report Abuse

Murukesan Kannankulamகருணாநிதி பொடி போட்டு பேசுவதில் வல்லவர் என்பதை இந்த பேட்டியின் மூலம் தெரியப் படுத்தி விட்டார்.இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ், திமுக இறுதி நேரத்தில் நாடகம் ஆடியதால் இந்த இரண்டு கட்சிகளை உண்மையான தமிழர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

Rate this:
மேலும் 104 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X