பெண்களும் சர்க்கரை நோயும்!| Dinamalar

பெண்களும் சர்க்கரை நோயும்!

Added : மார் 11, 2016 | கருத்துகள் (2)
பெண்களும் சர்க்கரை நோயும்!

ஆணும் பெண்ணும் சமம் என்ற காலம் மாறி ஆணை விட எல்லாத் துறைகளிலும் பெண்கள் உயர்ந்தவர்கள் என்ற நிலை உருவாகி வருகிறது.பெண்களின் உடற்கூறு அமைப்பு மற்றும் அகச்சுரப்பியியல் மாற்றங்கள், உடலியல் மாற்றங்கள் ஆண்களை விட மாறுபட்டிருக்கிறது என்பது உண்மை. தமிழ் பண்பாட்டின்படி ஒரு குடும்பத்தில் ஆண்களின் பங்களிப்பை விட பெண்களின் பங்களிப்பே அதிகம். தந்தையின் இழப்பை விட தாயின் இழப்பில் குடும்பத்திற்கு அதிகம் பாதிப்பு வருகிறது.
சர்க்கரை நோய் பெண்களை பலநிலைகளில் பாதிக்கிறது. குழந்தை பருவத்தில் மற்றும் பதின்ம வயதுகளில் 'டைப் 1' சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அன்றாடம் இன்சுலின் ஊசி போடுவது பெண்களுக்கு சற்று சிரமம்தான். அதுமட்டுமல்லாமல் பெண்களின் வளர்பருவத்தில் மாதவிடாய் கோளாறுகள், ரத்தசர்க்கரையின் அளவில் மாறுதலை ஏற்படுத்துகிறது. இதனால் இன்சுலின் தேவையிலும் கூடுதல் மற்றும் குறைவு ஏற்படலாம். 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனவலிமையோடு நோயை வெற்றிகொள்ள வேண்டும். இன்சுலின் தினமும் எடுத்துக் கொண்டால், அவர்களும் சராசரி பெண்களைப் போல திருமணம் செய்து கொண்டு குழந்தைப்பேறும் அடையலாம்.
கர்ப்பகால சர்க்கரை நோய்:கர்ப்பகால சர்க்கரை நோயின் பாதிப்பு கடந்த ௧௦ ஆண்டுகளில் மிக அதிகமாகி உள்ளது. பெண்களிடையே உடல் உழைப்பும், உணவுக் கட்டுப்பாடும் இல்லாததே இதற்கு காரணம். மது பழக்கமும், புகைபிடிப்பதும் பெண்களிடம் சற்றே அதிகரித்து வருகிறது. கலாசார சீரழிவு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் இப்பழக்கம் சீரழித்துவிடும்.கர்ப்பகால சர்க்கரை நோய் யார் யாரை பாதிக்கும் என தெரிந்து கொள்வோம். உடல் பருமன் நோய், தாய், தந்தைக்கு சர்க்கரை நோய் இருப்பது, முதல் குழந்தை 4 கிலோவுக்கு மேல் பிறப்பது, முதல் பிரசவத்தில் ஏதாவது பிரச்னைகள் இருப்பது, சினைப்பை நீர்க்கட்டி நோய் பாதிப்பு இருந்தால் கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படலாம்.
அதிகாலையில் உணவு உண்ணாமல் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். பின் 100 கிராம் குளுகோசை தண்ணீர் கலந்து குடித்துவிட்டு ஒன்று, இரண்டு, மூன்று மணி நேரங்களுக்கு ஒருமுறை சர்க்கரை அளவை பார்க்க வேண்டும். அதிகாலை சர்க்கரை அளவு 95 மில்லி கிராம், ஒரு மணி நேரத்தில் 180 மி.கி., 2மணி நேரத்தில் 150 மி.கி., 3 மணி நேரம் கழித்து 140 மி.கி., இருந்தால் சர்க்கரை நோய் என்று அர்த்தம்.எனவே கர்ப்பகால சர்க்கரை நோயை தகுந்த கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் அழகான, ஆரோக்கியமான குழந்தையை சுகபிரசவத்தின் மூலம் பெறலாம். 'டைப் 2' சர்க்கரை நோய் 40 வயதுக்கு மேல் ஏற்படும் 'டைப் 2' சர்க்கரை நோயால் பெண்களுக்கு பாதிப்பு அதிகம். இவர்களுக்கு சிறுநீரக தொற்று நோய், சிறுநீரகக்குழாய் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலநேரங்களில் உயிருக்கு ஆபத்தாக கூட முடியலாம். இந்நோய் வராமல் இருக்க வாழ்க்கை முறை மாற்றங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி நல்லது. அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதில் பெண்களை விட ஆண்களே அதிகம். மைதானத்திலோ தெருவிலோ நடக்கும் போது பாதுகாப்பின்மை; காலைநேர சமையல் செய்து கணவர், குழந்தைகளை அனுப்புவது; உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு தகுந்த ஆடை, காலணி வாங்காதது; மாதவிடாய் பிரச்னை; வேலைக்கு செல்ல வேண்டியது போன்ற காரணங்களால் பெண்கள் பயிற்சி செய்வதில்லை. கணவரின் பங்களிப்போடு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வேலையை பகிர்ந்து கொண்டால் காலை நேரத்தில் கண்டிப்பாக உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யலாம். குடும்ப விஷயங்களை விவாதிப்பது போல உடற்பயிற்சி எவ்வளவு செய்கிறோம் என இருவருமே ஆலோசனை செய்வது நல்லது.
சில பெண்கள் 'ஷூ, டிராக்ஸ்' அணிவது பண்பாட்டு குறைவு என நினைக்கின்றனர். எந்த உடையில் உங்களுக்கு சிரமமில்லாமல் நடக்க முடிகிறதோ அந்த உடையை நீங்கள் தேர்வு செய்யலாம்.சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு உடல்ரீதியாக, மனரீதியாக பிரச்னைகள் அதிகமாக காணப்படும். மாத விடாய் நின்ற பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு, ஆண்களை விட இருமடங்கு அதிகம். அதேபோல திடீர் மரணமும், இருதய நுண் ரத்தநாள அடைப்பு நோய் வருவதும் பெண்களுக்கு அதிகம்.
உணவு கட்டுப்பாடு:உணவு கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் முறையான மருத்துவ ஆலோசனையின் மூலம் பெண்கள் சர்க்கரை நோய் விளைவுகளை தடுக்கலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மாதவிடாய் நின்ற பெண்களுக்கு 'வைட்டமின் டி' சத்துக்குறைபாடு மற்றும் எலும்பு அடர்த்தி குறையும் நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே எலும்பு முறிவு, முதுகுவலி, குறுக்கு வலி அதிகமாக காணப்படும். நம் நாட்டு பெண்களுக்கு ஆண்களைப்போல உடல்நிலை பற்றிய விழிப்புணர்வு இல்லை. நீச்சல் மற்றும் உடற்பயிற்சிகளை கூட பெரும்பாலும் பெண்கள் செய்வதில்லை. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தோள்பட்டை வலி அதிகமாவதற்கு காரணம், கையை துாக்கி செய்யும் பயிற்சி மற்றும் கழுத்துப் பயிற்சி செய்யாததே. மனமிருந்தால் சிலவகை பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம்.40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், ஆறு மாதத்திற்கு ஒருமுறை சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை கொழுப்புச்சத்து, உப்புச்சத்து, இ.சி.ஜி., எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். மாதவிடாய் கடந்த பெண்கள் எலும்பு அடர்த்தி பரிசோதனை, 'ைவட்டமின் டி' அளவை ஆண்டுக்கு ஒருமுறை கண்டறிய வேண்டும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை, கால் ரத்தநாள அடைப்பு பரிசோதனை, காலில் தொடு உணர்ச்சி பரிசோதனை, சிறுநீர், சிறுபுரத பரிசோதனை செய்ய வேண்டும்.பெண்களின் உடல்நலமே குடும்பத்தின் உடல்நலம்; நாட்டின் உடல்நலம்.-டாக்டர் ஜெ.சங்குமணிசர்க்கரை நோய் நிபுணர்மதுரைsangudr@yahoo.co.in

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X