சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு; ஸ்டாலின் உறுதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு; ஸ்டாலின் உறுதி

Updated : மார் 11, 2016 | Added : மார் 11, 2016 | கருத்துகள் (120)
Share
சிறுபான்மையினர், இட ஒதுக்கீடு, ஸ்டாலின், உறுதி

விழுப்புரம் : 'சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

விழுப்புரத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் நடந்த, மாநில ஒருங்கிணைப்பு மாநாட்டில் ஸ்டாலின் பேசியதாவது:

ஜெ., ஆட்சியில் உள்ள அவலங்கள்; இந்த ஆட்சியால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் கிடைத்துள்ளது உள்ளிட்டவற்றை, நமக்கு நாமே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டதுதான் 'நமக்கு நாமே' பயணம். இதன் மூலமாக, மக்கள் மனதில் உள்ள மாற்றங்களை கண்டேன்.

1971ம் ஆண்டில், இரண்டாவது முறையாக கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழ் பேசும் முஸ்லிம்களை தவிர்த்து, உருது மொழி பேசுபவர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆணையை பிறப்பித்தார். சிறுபான்மை நல வாரியம், உருது அகாடமி, சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றை தனது ஆட்சியில் தோற்றுவித்தவர் கருணாநிதி. கடந்த 2006ம் ஆண்டு, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு 3.5 சதவீதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டைகூட அமல்படுத்த முடியாமல் கிடப்பில் போட்டுள்ளவர்தான் ஜெ.,

நபிகள் நாயகத்தின் வழி நடப்பவரே கருணாநிதி. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 5 ஆயிரத்து 449 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதோடு, இதற்காக 331 கோடி ரூபாய் நிதியை கருணாநிதி ஒதுக்கீடு செய்தார். இஸ்லாமியர்களுக்கு திட்டங்கள் மட்டுமின்றி, பலவித சலுகைகள் வந்து சேருவது தி.மு.க., ஆட்சியில் மட்டும்தான். ஆட்சி மொழி மாற்றம் கோரி, தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தபோது, ஆட்சி மொழியாக தமிழ் அமைய வேண்டும் என, குரல் கொடுத்தவர் காயிதேமில்லத். அவர் வழியில் தமிழ் மொழிக்காக போராடி வருபவர் கருணாநிதி.

கருணாநிதி தலைமையில் ஆறாவது முறையாக ஆட்சி அமைய உள்ளது. அவர், இஸ்லாமியர்களுக்கு சொல்வதை மட்டுமின்றி, சொல்லாததையும் செய்வார். நான், கருணாநிதி மகன். பேசிவிட்டு மட்டும் போகமாட்டேன்; ஆட்சிக்கு வந்தவுடன் கூறியது அனைத்தையும் செய்வேன். சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றுவோம். அ.தி.மு.க., ஆட்சிக்காலம் முடியும் தருணத்திலும், 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பல நிறைவேற்றப்படவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில், 10 ஆயிரம் கொள்ளை, கொலைகள் நடந்துள்ளன. டில்லியில் நடந்த பொருளாதார ஆய்வு கூட்டத்தில், தமிழகம் பொருளாதாரத்தில் கடைசியிலும், ஊழலில் முதலாவது இடத்திலும் இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலை மாற, தமிழகத்தில் நடக்க உள்ள தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சி மாற்றத்தை தி.மு.க., மூலம் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் கருணாநிதி மூலமாக நல்ல மாற்றம் விரைவில் வரும்.

இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X