உணர்ச்சிவசப்பட்டதால் தவறு; மாணவிகள் எரிப்பு வழக்கில் தண்டனை குறைப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உணர்ச்சிவசப்பட்டதால் தவறு; மாணவிகள் எரிப்பு வழக்கில் தண்டனை குறைப்பு

Updated : மார் 11, 2016 | Added : மார் 11, 2016 | கருத்துகள் (115)
Share
மாணவிகள், எரிப்பு, வழக்கில், தண்டனை, குறைப்பு ,

புதுடில்லி: தர்மபுரியில் வேளாண்மை பல்கலை மாணவிகள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. இதில் உணர்ச்சிவசப்பட்டதால் இந்த தவறு நடந்திருக்கிறது என்றும், இது திட்டமிட்ட கொலை அல்ல என்றும் கோர்ட் கூறியுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, கொடைக்கானல் "பிளசன்ட் ஸ்டே' ஓட்டல் வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தனி கோர்ட் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதைக் கண்டித்து அ.தி.மு.க., வினர் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டத்திலும் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டியில், கோவை விவசாய பல்கலைக்கழக மாணவியர் சுற்றுலா வந்த பஸ்சுக்கு, போராட்டக்காரர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். பஸ்சில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மூன்று மாணவியர் மட்டும் சிக்கிக் கொண்டனர். அவர்கள் தீயில் எரிந்து சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

போலீசார் இந்த வழக்கை விசாரித்து, தர்மபுரியைச் சேர்ந்த மாது என்ற ரவீந்திரன், நெடு என்ற நெடுஞ்செழியன், கொட்டப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் முனியப்பன், முன்னாள் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், டெய்லர் மணி உட்பட 31 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.

சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி சேலம் முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்தது. தர்மபுரி கலெக்டர்,உள்பட 123 பேர் சாட்சியம் அளித்தனர். வழக்கு விசாரணை முடிந்து 2007 பிப்ரவரி 16ம் தேதி நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு மரண தண்டனையும், 25 பேருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்த போதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான டெய்லர் மணி, உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், மூவருக்கு வழங்கிய மரண தண்டனையை 2007 டிசம்பர் 6ம் தேதி உறுதி செய்தது. இதனை எதிர்த்து மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். மூன்று பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை 2010-ம் ஆண்டு நீதிபதிகள் உறுதி செய்தனர்.


இதையடுத்து அவர்கள் தாக்கல் செய்த மறு அப்பீல் மனு இன்று (11ம் தேதி ) விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் கூறியது, குற்றவாளிகள் உணர்ச்சி வசப்பட்டு செய்த தவறு. அவர்கள் கொலை செய்ய வேண்டும் என் நோக்கில் பஸ்சை எரிக்கவில்லை. எனவே தூக்கு தண்டனை, ஆயுளாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X