ஓட்டுப் போடுவது மட்டுமே குடிமகன் கடமையல்ல

Added : மார் 12, 2016 | |
Advertisement
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும், மரியாதையுடனும் வாழ, அரசு வசதிகளையும், சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கித் தர வேண்டும். அந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தக் குடிமக்களையும் தயார்படுத்த வேண்டும்.குடிமக்கள் எந்த அளவிற்கு நிர்வாகம், ஆட்சி பற்றி தெரிந்தவர்களாக இருக்கின்றனரோ, அந்த அளவிற்கு அந்த நாட்டின் ஆட்சி சிறப்புற்று விளங்கும். அரசு
uratha sindhanai

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும், மரியாதையுடனும் வாழ, அரசு வசதிகளையும், சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கித் தர வேண்டும். அந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தக் குடிமக்களையும் தயார்படுத்த வேண்டும்.

குடிமக்கள் எந்த அளவிற்கு நிர்வாகம், ஆட்சி பற்றி தெரிந்தவர்களாக இருக்கின்றனரோ, அந்த அளவிற்கு அந்த நாட்டின் ஆட்சி சிறப்புற்று விளங்கும். அரசு பற்றியும், மேம்பாடு பற்றியும் எந்த அளவிற்கு மக்கள் தெளிவு பெறுகின்றனரோ, அந்த அளவிற்கு மக்களின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். குடிமக்கள் ஏற்றம் பெற, ஏற்றம் பெற அரசும் ஏற்றம் பெறும். குடிமக்கள் விழிப்புணர்வு அற்று வாழும்போது, ஒரு அரசு சிறப்பானதாக இருக்க முடியாது. குடிமக்களுக்குக் குடிமைத்துவம் பற்றிய புரிதலை ஏற்படுத்த தன்னார்வ குழுக்கள், கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, அரசு செயல்பட வேண்டும். நாட்டில் ஒருவரையொருவர் சுரண்டி வாழும் சூழல் என்பது மறைந்துவிடும். அனைவரும் சமம் என்ற பார்வை உருவாகிவிடும்.அனைத்து மக்களும் குடிமக்களுக்கான பண்புகளைக் கொண்டவர்களாக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஆற்றக்கூடியவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது இருக்கவும் முடியாது. பொதுமக்கள் பெரும்பான்மையோர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மட்டுமே போராடிவரும் சூழலில், அவர்களுக்குப் பொதுவாழ்க்கைப் பற்றியச் சிந்தனையோ, அக்கறையோ, நேரமோ இருப்பதில்லை. ஆனால், அனைவரும் தங்களைக் குடிமைச் செயல்பாடுகளுக்குக் கட்டாயமாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். குடிமைத்துவம் என்பது, இன்று ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால், இதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடம் அதிகம் ஏற்படவில்லை. பெரும்பாலும் குடிமக்களைப் பயனாளிகளாகவும், மனுதாரராகவும், வாக்காளர்களாகவும் பார்த்து மனதிற்குள் உள்வாங்கிச் செயல்படுவதால், குடிமக்களை மரியாதையுடன் பார்க்க முடிவதில்லை.

குடிமைத்துவம் என்றால், நாட்டில் உள்ள குடிமக்கள் தங்கள் சமுதாயம் சார்ந்த பொதுச் செயல்பாடுகளில் தங்களை இணைத்து செயல்படுவதாகும். தனிமனித வாழ்க்கை சிறப்படையவும், செம்மையடையவும் பொதுவாழ்க்கை சிறப்படைய வேண்டும்.வீட்டைச் சுத்தமாகப் பெருக்கி வீதிகளில் கொட்டித் தன் சுத்தம் பராமரிப்பதில் நாம் பெரிய புத்திசாலிகளாக விளங்குகிறோம். வீதியில் கொட்டிய குப்பையால் உருவான கொசுக்கள் நமக்கு வியாதியை பரப்புகின்றன என்ற புரிதல் நமக்கு ஏற்படுவது இல்லை. குப்பையை எரிப்பதும், வீதியில் கொட்டுவதும், பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. குப்பை பற்றிய ஒரு புரிதல் நம்மிடத்தில் இல்லாதது தான். பொதுநலன் கருதித் தங்கள் செயல்பாடுகளை வடிவமைத்துச் செயல்படுவதில் தான் குடிமைத்துவச் செயல்பாடுகள் அடங்கியுள்ளன. எந்த நாட்டில் பொதுநலம் கருதிச் செயல்படும் மக்கள் அதிகமாக இருக்கின்றனரோ, அந்த நாட்டில் தான் பொதுமக்கள், சுரண்டலற்ற, ஊழலற்ற, கண்ணியமான, மரியாதையுடைய, மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ்வர். அப்படிப்பட்ட நாட்டில் அரசை, மக்கள் கண்காணிப்பர், அரசு செயல்பாடுகளில் மக்கள் பங்கேற்பர். அரசை மக்கள் வேலை வாங்குவர், அரசும் பொதுமக்களுக்கு அஞ்சி நடக்கும், பொதுமக்கள் அதிகாரம் பெற்றவர்களாகச் செயல்படுவர். அப்போதுதான் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மக்களைத் தங்களின் எஜமானர்களாக மதிப்பர்.
அப்படி இல்லையென்றால் அரசு, மக்களைக் கண்காணிக்கும், மக்களை வேலை வாங்கும் அரசைக் கண்டு மக்கள் பயப்படுவர், மக்களுக்காக இருக்க வேண்டிய அரசு, மக்களை அரசுக்காக செயல்படும் சூழலுக்குக் கொண்டுவந்துவிடும்.

மக்களாட்சி நடைபெறுகிற நாட்டில் பொதுவாழ்க்கை பற்றிய பொது அறிவை பெற்றிருக்கவில்லை என்றால், அடிமைத்தனமும், சுரண்டலும் அந்த நாட்டைவிட்டு அகலாது.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்கவும், அனைவரும் சமத்துவத்துடன், மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ, பொதுமக்களைப் பொதுநலம் சார்ந்து வாழத் தயார்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் சுதந்திரம் என்பது யார் கையிலாவது அகப்பட்டு, மீண்டும் சுரண்டலுக்கும், ஊழலுக்கும் பொதுமக்களை இறையாக்கிவிடும். குடி உயர்த்துதல் பணி என்பது ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டியப் பணி. இந்தியாவில் இன்னும் இந்தக் குடி உயர்த்தும் பணி என்பது குறைந்தபட்சமாக ஓட்டளிப்பதற்கு மட்டுமே நடந்தேறியுள்ளது. அதுவும் கூட சமீபகாலமாக நியாயமான முறையில் நடைபெறவில்லை. எனவே தான், நம் நாட்டில், ஊழலும், லஞ்சமும், சுரண்டலும், ஏற்றத்தாழ்வும் பெருகி வருகின்றன. வெள்ளைக்காரனை விரட்டி விட்டு நாமே நம் மக்களைச் சுரண்டக் கற்றுக் கொண்டோம்; அடிமைப்படுத்தக் கற்றுக் கொண்டோம். சுதந்திர நாட்டில் அடிமை மனோபாவத்தில் வாழ்வதில் ஒரு சுகம் காண வைத்து விட்டோம்.இதிலிருந்து விடுதலைபெற வேண்டுமானால், குடிமைத்துவத்திற்கான மாபெரும் இயக்கம் நம் நாட்டில் வந்தால் தான், மக்கள் சுதந்திரமாகவும், சுரண்டலில்லாமலும், லஞ்ச லாவண்யத்திலிருந்தும் விடுபட்டும் வாழ வழிவகை செய்ய முடியும். இந்தச் செயல்பாடு என்பது, அரசியல் தளத்திலிருந்து சமுதாயத்தில் சமூகச் செயல்பாடாக மாற வேண்டும். இல்லையேல், சுதந்திர நாட்டில், மக்கள் அடிமை வாழ்க்கையைத்தான் வாழ்வர்.ஓட்டுப் போடுவது மட்டும் மக்களின் கடமையல்ல; ஆட்சியாளர்களை கண்காணிக்க வேண்டும் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இ-மெயில்:
gpalanithurai@gmail.com

- பேராசிரியர் க.பழனித்துரை -
காந்தி கிராம பல்கலைக்கழகம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X