சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

தேர்தலும் சட்டங்களும் 7: மின்னணு வாக்கு இயந்திரங்கள்

Added : மார் 15, 2016
Advertisement

:முன்பெல்லாம் வாக்கினை அச்சு மூலம் முத்திரை பதித்து அந்தத் தாளை அதற்கென உள்ள பெட்டியில் போடும் நடை முறையே வழக்கத்தில் இருந்தது. இதன் மூலம், வாக்குப் பெட்டிகளைக் கைப்பற்றுவதும் கள்ள ஓட்டுக்களும் அதிகமானபடியால் அதை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவே இந்த மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 -ன் பிரிவு 61A -ன் படி, வாக்குப் பதிவு இயந்திரம் என்பது தேர்தல் ஆணையம் அந்தந்த நேர்விற்கேற்ப தேர்தல் வாக்குப் பதிவிற்காக எந்த வகையான வாக்குப் பதிவு இயந்திரங்களையும் முறையினையும் கைக்கொள்ளலாம் என்கிறது.இதன் படி வாக்குப் பதிவு இயந்திரம் என்பது மின்னணு அல்லது வேறு வகையில் இயக்கப்படும் எந்த கருவியினையும் குறிப்பது ஆகும். எலக்ட்ரானிக் டேட்டா என Information Technology Act 2000 -ன் பிரிவு 2(t) சொல்வதன் படியே (electronic data, record or data generated, image or sound stored received or sent in an electronic form or micro film or computer generated micrp fiche:..) மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் அமைவகிறது.


1998 முதல்:

மின்னணு வாக்கு இயந்திரத்தின் முதல் வடிவம் 1980ல் ஹெச்.எம். ஹனீஃபா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் இன்றைய தொழில் முறை வடிவம் Industrial Design Centre, IIT Mumbai யால் வடிவமைக்கப்பட்டது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் முதன் முதல் 1998ம் ஆண்டு கேரளாவின் வடக்கு பரவூர் தேர்தலிலேயே குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்குப் பயன்படுத்தப் பட்டது.அதே வருடம் நவம்பர் மாதம் நடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய 16 மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டன.இந்த இயந்திரத்தில் கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் வாக்குப் பதிவுக் கருவி எனும் இரு பிரிவுகள் உள்ளன. இவை ஐந்து மீட்டர் நீளமுள்ள கேபிளால் இணைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டுக் கருவி, வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடமோ அல்லது வாக்குப் பதிவு அதிகாரியிடமோதான் இருக்கும். வாக்குப் பதிவுக் கருவி, மறைக்கப்ப்ட்ட ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இதில்தான் வாக்காளர்கள் தன் வாக்கினைப் பதிவார்கள். எந்த கட்சிக்கு ஓட்டுப்போடுகிறார் என்பதை மற்றவர் காண இயலா வண்ணம் அந்தப் பெட்டி மறைப்போடு வைக்கப்பட்டிருக்கும்.


ஓட்டு பதிவு செய்யும் முறை:

ஓட்டு போட வாக்காளரின் அடையாளம் சரி பார்க்கப்ப்ட்ட பின்னர், அதிகாரி கட்டுப்பாட்டுக் கருவியின் பொத்தானை அழுத்துவார். அப்படி அழுத்தியதும், வாக்காளர் வாக்களிக்க வேண்டிய கருவி தயார்நிலைக்கு வரும். இப்போது, வாக்காளர் அந்த மறைப்பில் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்று, தான் விரும்பும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒட்டி உள்ள நீல நிற பொத்தானை அழுத்துவார். முதன் முதலில் அவர் எந்த பொத்தானை அழுத்துகிறாரோ அந்த கட்சிக்கு ஓட்டு பதிவாகும். மறு முறை ஓட்டுப் பொத்தானை அழுத்தினாலும் அது கணக்காகாது. நாம் ஓட்டளித்த கட்சிக்குத்தான் நம் ஓட்டு பதிவாகி இருக்கிறதா என்பதை நிச்சயித்துக் கொள்ள, நாம் ஓட்டளித்த கட்சிபெயர், சின்னத்திற்கு இடப்புறம் உள்ள சிறு விளக்கு ஒளிர்ந்து ஓசை தரும். காகித ஓட்டெடுப்பில் ஒரே வாக்குச் சீட்டில், இரு வெவ்வேறு கட்சிகளுக்கு முத்திரை குத்தி அந்த ஓட்டு செல்லா ஓட்டாகும் நிலை இந்த இயந்திரத்தால் தவிர்க்கப்படுகிறது.


NOTA பொத்தான்:

அந்த இயந்திரத்தில் வேட்பாளராக நிற்கும் கட்சிகளின் பெயரும் சின்னமும் இடம் பெற்றிருக்கும். ஆனால், மேற்சொன்ன எந்த கட்சிக்கும் ஓட்டளிக்க விரும்பாத நபர் தனக்கு ஓட்டளிக்க விருப்பமில்லை எனச் சொல்ல விரும்பினால், The Conduct of Elections Rules, 1961-ன் விதி எண் 49 ஓ ந் கீழ் தன் விருப்பமின்மையைச் சொல்லலாம். அதாவது மேலே குறிப்பிட்ட எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதையே NOTA (None Of The Above) என்று குறிப்பிடுகிறார்கள்.அப்படிச் சொல்வதற்கு அதிகாரியிடம் இருந்து ஒரு படிவத்தை வாங்கி தன் விருப்பமின்மையைப் பதிய வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம், ஓட்டளிக்க விரும்பாததால் சாவடிக்கே வராமல் வாக்காளர்கள் இருந்துவிடுவதையும், அப்படியான வாக்காளர்களின் ஓட்டானது சில திருட்டு ஓட்டுக்கும் பயனாகிவிடும் என்பதாலும் தன் இருப்பை, வெறுப்பை அறிவிக்க ஒரு வாய்ப்பாக இந்த 49ஓ விதி பயனாகிறது.ஆனால், இப்படி அதிகாரியிடம் எந்த நபர் படிவம் கேட்டாலும் அவர் 49ஓ எனும் ஓட்டளிக்க விரும்பாத முடிவைத்தான் எடுத்திருக்கிறார் என்பது மற்றவர்களுக்குத் தெரிவது என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 128 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(a) ற்கு எதிரானது என்பதால், இந்த முறை மின்னணு வாக்கு இயந்திரத்திலேயே 49ஓ விற்கு என்றே ஒரு தனி பொத்தான் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் கட்சிகளுக்கான சின்னங்களைப் போலவே NATO விற்கும் ஒரு சின்னம் அளிக்கப்பட்டிருக்கிறது.49 O எனப்படும் NATOற்கான குறியீடு.


எத்தனை பேர் ஓட்டளிக்க முடியும்:

பொதுவாக ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சமாக தோராயமாக 1500 வாக்காளர்களே இருபபர்கள். இந்த மின்னணு இயந்திரத்தில் ஒரு தேர்தலில் அதிகபட்சமாக 3940 ஓட்டுக்கள் வரை போட முடியும் என்பதால், ஒரு கருவியின் கொள்ளளவு என்பது பிரச்சனைக்குறியது அல்ல.அதே போல ஒரு மின்னணு சாதனத்தில் வேட்பாளர்களின் பெயரும் சின்னங்களூம் குறிப்பிடப்படும் அல்லவா? அப்படி ஒரு சாதனத்தில் 64 வேட்பாளர்களின் பெயர் சின்னங்களை வரிசைப்படுத்த முடியும். இந்த எண்ணிக்கை இந்த கருவியின் திறனை நாம் அறிய சொல்லப்படுவதே. பொதுவாக ஒரு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் சின்னங்கள் இடம்பெறும். மேலும் தேவை ஏற்படின் அடுத்த 16 வேட்பாளர்களின் பெயர் சின்னங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு இயந்திரத்தின் கொள்ளளவான 64 வேட்பாளர்களுக்கும் மேல் வேட்பாளர்கள் இருப்பார்கள் ஆயின் இந்த இயந்திரத்தை பயன்படுத்த இயலாது.வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கையிலேயே இயந்திரம் பழுதுபடுமானால் கூட, அந்த வினாடி வரை பதிந்த வாக்குகள் அப்படியே அதிகாரியின் பொறுப்பில் உள்ள கட்டுப்பாட்டுக் கருவியில் பாதுகாக்கப்பட்டு விடும். எனவே மறுபடி வாக்குப் பதிவு நடத்தத் தேவை இல்லை. அது போன்ற பழுதான நேர்வுகளில், அதற்கென ஒரு அதிகாரி இருப்பார். ஒவ்வொரு பத்து வாக்குச் சாவடிக்கும் ஒரு அதிகாரி என பொறுப்பில் இருப்பார்கள். அவர்களிடம் மாற்றுக் கருவிகள் இருக்கும். அவை புகாரளிக்கப்பட்ட உடனேயே மாற்று இயந்திரத்தை அமைத்துத் தருவார்கள்.


கள்ள ஓட்டு முடியாது:

அன்றைய வாக்குப் பெட்டிகளை அப்படியே கைப்பற்றி கள்ள ஓட்டு போட முடிந்தது. அதே போல இந்த மின்னணு இயந்திரத்தைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடு இயலாது. ஏனெனில் இதில் ஒரு நிமிடத்திற்கு ஐந்து வாக்குகள் மட்டுமே பதிவாகும். மேலும், அப்படி கைப்பற்றப்பட்டாலும் கூட, வாக்குச் சாவடியின் அதிகாரி தன்னிடம் உள்ள கட்டுப்பாட்டுக் கருவியினை முடக்குவதன் மூலம் வாக்குப் பதிவுக் கருவியினை இயங்காமல் செய்துவிட முடியும்.பொதுவாக ஒரு வாக்குச் சாவடியில் தோராயமாக 1500 வாக்காளர்களே இருப்பதால், இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களிலேயே மொத்த ஓட்டுப் பதிவும் முடிய வாய்ப்புள்ளது. ஒரு மின்னணு இயந்திரம் தோராயமாக ஐயாயிரத்தி ஐநூறு ரூபாய் விலை ஆகிறது. ஆனாலும் காகித ஓட்டுப் பதிவிற்கு ஆகும் செலவையும், நேரத்தையும், பாதுகாப்பையும் கணக்கில் கொண்டால், மறுபடி மறுபடி பயன்படுத்தக் கூடிய இந்த மின்னணு ஓட்டு இயந்திரம் மிகக் குறைந்த செலவே ஆகிறது.இந்த சாதனம் 6 வோல்ட் அல்கலைன் பாட்டரியாலும் இயங்கக்கூடியது என்பதால், மின்சார வசதி இல்லாத இடத்தில் கூட இதைப் பயன்படுத்த முடியும்.


எண்ணுவது எளிது:

எல்லா வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு முடிந்தபின், வாக்குகளை எண்ணுமாறு ஆணையம் பணிக்கும் தொகுதிகளில் வாக்குச் சாவடிவாரியாக மின்னணு இயந்திரம் மூலம் பெறப்படும் வாக்கு எண்ணிக்கை தலைமை இயந்திரத்தில் புகுத்தப்பட்டு ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கை முடிவு விவரங்கள் மட்டும் வெளியாகும்.ஒரு மின்னனு இயந்திரத்தின் கட்டுப்பாட்டுக் கருவியின் (அதிகாரியின் வசம் உள்ள) Storage space அதிகம். அதில் பதியப்பட்ட தகவல்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கக்கூடியவை. அதே போல ஒரு மின்னணு இயந்திரத்தில் விழும் பல/அத்தனை ஓட்டுக்களை ஒரே வேட்பாளருக்கே விழும்படி அமைக்க இயலாது. இந்த மின்னணு இயந்திரத்தில் உள்ள கூட்டல் பொத்தானின் மூலம் அதுவரை எத்தனை ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன என்பதையும் அறியலாம். ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு அந்த மின்னணு இயந்திரத்தின் செயல்முறையினை செய்து காட்டப்படும். அதனைத் தலைமை அதிகாரி இயக்கிக் காண்பித்த பிறகு அதில் அவர்கள் திருப்தியுற்ற பிறகே அதாவது மின்னணு இயந்திரத்தில் ஏமாற்று வேலை நடைபெற இயலாது, என்பதில் அவர்கள் திருப்தியுற்ற பின்னரே இயந்திரம் பயன்படுத்தப்படும். அது போக ஒவ்வொரு மின்னணு இயந்திரத்திற்கும் என ஒரு குறியீட்டு எண் உண்டு அதனை. அதிகாரியும், வேட்பாளரின் முகவர்களூம் குறித்து வைத்துக் கொள்வார்கள். ஒரு மின்னணு இயந்திரத்தில் உள்ள கட்டுப்பாட்டுப் பிரிவில் உள்ள நிறுத்தும் பொத்தானை அதிகாரி அழுத்தியபின் மேற்கொண்டு வாக்குகளை இயந்திரம் ஏற்காது.வாக்குப் பதிவு நேரம் என தேர்தல் ஆணையம் குறிப்ப்ட்டுள்ள நேரம் வரையிலும் வாக்குச் சாவடி திறந்தே இருக்கும். அந்த நேரம் முடிவடைந்ததும், வாக்குப் பதிவுக் கருவியை கட்டுப்பாட்டுக் கருவியில் இருந்து அகற்றி விடுவார்கள். மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அது குறித்த விவரங்களை பிரதிநிதிகளிடம் தலைமை அதிகாரி வழங்குவார். வாக்கு எண்ணிக்கையின் போது இந்த விவரங்கள் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளப்படும்.மேலதிகத் தகவலுக்கு தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கத்தைப் பார்வையிடலாம். அதில் வாக்காளர்கள் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள் உள்ளன.- ஹன்ஸா ( வழக்கறிஞர்) legally.hansa68@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X