பொது செய்தி

தமிழ்நாடு

'கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க அரசு ஆர்வம் காட்டவில்லை'

Updated : மார் 19, 2016 | Added : மார் 18, 2016
Advertisement
 'கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க அரசு ஆர்வம் காட்டவில்லை'

சென்னை;''கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை,'' என, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை அகழாய்வு பிரிவின் கண்காணிப்பாளர், கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசினார்.
சொற்பொழிவு:சென்னை பல்கலையின் பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில், கீழடி அகழாய்வு குறித்த சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. அதில், கீழடியில் அகழாய்வு செய்த, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை அகழாய்வு பிரிவின் கண்காணிப்பாளர், கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாவது: தென்னிந்தியாவில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில், கீழடி அகழாய்வு மிக முக்கியமானது. காரணம், கீழடி பற்றி இதுவரை எந்த பதிவுகளும் இல்லை. இதுவரை தமிழகத்தில், தொல்பொருட்கள் கிடைத்த இடங்களிலேயே அகழாய்வுகள் நடைபெற்றன. அவை, துண்டு துண்டாகவே நடந்ததால், அவ்விடத்தின் கலாசாரத்தை பற்றிய முழுமையான தகவலை தர இயலவில்லை.
மதுரையில், வைகை கரையில் ஆய்வு நடத்த திட்டமிட்டோம். அதன்படி, பல இடங்களை ஆய்வு செய்து கீழடியை தேர்வு செய்தோம். கீழடி அகழாய்வுக்கு, 40 ஏக்கர் நிலம் தேவைப்படலாம் என எண்ணினோம். ஆனால், தற்போது, 80 ஏக்கர் நிலப்பரப்பில் ஆய்வு நடத்த வேண்டி உள்ளது. கீழடி, மதுரையில் இருந்து தென்கிழக்கில், 12 கி.மீ., தொலைவில் உள்ளது. கிராம வரைபடத்தில், பள்ளிச்சந்தை திடல் என உள்ளது. இந்த பகுதி, தரைமட்டத்தில் இருந்து, 2.88 மீட்டர் உயரத்தில் உள்ளது.
அகழாய்வுக்காக தேர்ந்தெடுத்துள்ள இடத்தின் பெரும்பாலான பகுதிகளில், தனியார் தென்னந்தோப்பு உள்ளது. அவர்களிடம் ஒப்பந்தம் செய்து, அகழாய்வு செய்வதற்கு காலதாமதம் ஆகிறது. மேலும் மிகக்குறைந்த ஆட்களே எங்களிடம் உள்ளனர். இந்த அகழாய்வு, தமிழ் கலாசாரத்திலும் வரலாற்றிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். அதற்கான அனைத்து தரவுகளும் அங்கு கிடைக்கின்றன.
வாய்ப்புகள்:அங்கு, 1.5 மீட்டர் ஆழத்தில் களி மண்ணும், அதற்கு கீழ், 4.5 மீட்டர் ஆழத்திற்கு மணலும் படிந்துள்ளது. அதனால், வைகை ஆறு பாய்ந்து, பின் அதன் பாதையை மாற்றியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கீழடி அகழாய்வை, கடந்தாண்டு மார்ச் மாதத்தில் துவக்கினோம். அதில், உறை கிணறுகள், முறையாக கட்டப்பட்ட சுட்ட செங்கல் கட்டடங்கள், சுடுமண் ஓடுகள் பதித்த கூறைகள் என, வளர்ச்சியடைந்த நகர நாகரிகத்திற்கு உரிய அனைத்து விஷயங்களும் கிடைத்தன.
வீடுகள், தெற்கு - வடக்காகஅமைந்துள்ளன. அங்கு, நிறைய மட்பாண்டங்களும், அணிகலன்களும் கிடைத்தன. ஆனால், அங்கு அப்பொருட்களை செய்தற்கான உதிரி பாகங்களோ, தொழிற்சாலை பொருட்களோ, அரைகுறை வேலைப்பாடுடன் கூடிய பொருட்களோ கிடைக்கவில்லை. எனவே, அப்பகுதியில் வாழ்ந்த மக்கள், மிகவும் வசதியான பொருட்களை வாங்கி பயன்படுத்திய மக்களாக இருந்துள்ளனர் என நம்பலாம்.
ஹரப்பாவில் நடத்தியதை போல, கீழடியிலும் விரிவான ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆண்டு, ஜனவரி, 18ம் தேதியே ஆய்வை துவங்கிவிட்டோம். கடந்தாண்டில் அகழாய்வு செய்த இடங்களுக்கு அருகிலேயே, அந்த கட்டடங்களின் தொடர்ச்சியை தான், இந்த ஆண்டு அகழாய்வுக்கு தொடர்ந்திருக்கிறோம்.
கீழடி, மேம்பட்ட நகர நாகரிகத்திற்கு வேண்டிய அனைத்து கட்டட அமைப்புகளையும் கொண்டிருக்கிறது. அந்த கட்டடங்கள், கி.மு., 3ல் இருந்து, கி.பி., 10ம் நுாற்றாண்டுக்குள் உள்ளவையாக கருதுகிறோம். ஆய்வில் கிடைத்த பொருட்களை பகுப்பாய்வு செய்தும், கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தியும் சரியான காலத்தை அறிய வேண்டி உள்ளது. கட்டடங்கள், சதுர, செவ்வக வடிவில் உள்ளன. 25 செங்கல் கொண்ட, 25 மீட்டர் அளவுடைய நெடுஞ்சுவர்கள் உள்ளன. பெரிய கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில், 43 இடங்களில் நடத்திய ஆய்வுகளில், 1,700 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றில் அரிய கல்மணிகள், பலவகை கண்ணாடி மணிகள், சங்ககால செப்புக் காசுகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் சதுரங்க காய்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்களுக்குதேவையான சக்கரங்கள், கொம்பால் செய்யப்பட்ட அம்பு முனைகள், தந்தத்தால் செய்யப்பட்ட காதணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. பிராமி எழுத்துக்கள்மட்பாண்டங்களில் மீன் உள்ளிட்ட அடையாளங்களும், சேந்தன் ஆவதி, திசன், உதிரன், ஆதன், இயனன், சராமா உள்ளிட்ட பெயர்கள், தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்கள் அழகிய வேலைப் பாடுடனும், வெண்ணிற கோடுகளுடனும் உள்ளன. இதுவரை, 43 குழிகள் அமைத்து ஆய்வுகளை செய்துள்ளோம். வரும் செப்டம்பர் வரை, 65 குழிகள் அமைத்து ஆய்வுகள் செய்ய வேண்டி உள்ளது.மதுரைவாசிகள், இந்த அகழாய்வை பெருமையாக நினைக்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வியாளர்கள், பகுதிவாசிகள் என இதுவரை, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், கீழடியை பார்வையிட்டுள்ளனர்.
ஆனாலும், அப்பொருட்களை அதே பகுதியில் சேமித்து, காட்சிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு, இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கினால், தமிழக கலாசார, வரலாற்றுக்கு பெருமையாகவும், ஆவணக் காப்பகமாகவும் இருக்கும். ஆனால் இதுவரை, மாநில அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X