தே.மு.தி.க., தலைமையில், தனி அணி அமைக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக அறிவித்த, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், கூட்டணி சேர யாருமே முன் வராததால், கடும் விரக்தி அடைந்து உள்ளார். அவரின் தலைமையை ஏற்க மறுத்து, அனைத்து கட்சிகளும் ஓரங்கட்டுவதால், தவிப்புக்கும் ஆளாகி உள்ளார்.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., விலகியது. உள்ளாட்சி தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு, தோல்வியையும் தழுவியது.இதன்பின், 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அவரின், தே.மு.தி.க., கட்சி, 14 இடங்களில் போட்டியிட்டு, ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை; அத்துடன், கட்சி பெற்ற ஓட்டும், 10லிருந்து, 5 சதவீதமாகக் குறைந்தது. இருப்பினும், சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்தால், தங்கள் அணிக்கு வெற்றி நிச்சயம் என, தி.மு.க., நம்பியது. அதனால், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில்,
விஜயகாந்தை சேர்க்க, அந்தக்கட்சியின் தலைவர்கள் மல்லு கட்டினர்; அழைப்புமேல் அழைப்பு விடுத்தனர்.
பிடி கொடுக்கவில்லை:
அதேநேரத்தில், வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட, மக்கள் நல கூட்டணியினரும், பா.ஜ.,வினரும், விஜயகாந்தை எப்படியாவது, தங்கள் கூட்டணிக்கு அழைத்து சென்று விட வேண்டும் என, பகீரத பிரயத்தனம் செய்தனர். இதற்காக, விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவை பலமுறை சந்தித்து பேசினர். ஆனால், யாருக்கும் பிடி கொடுக்காத விஜயகாந்த், யாருமே எதிர்பார்க்காத வகையில், மார்ச், 10ல், சென்னை, ராயப்பேட்டையில் நடந்த கட்சியின் மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், 'தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடும்' என, அறிவித்தார்.
பின், 'தன் தலைமையில் கூட்டணி அமையும் என்றும், விரும்பும் கட்சிகள், அணிக்கு
வரலாம்' என்றும் கூறினார்.இருப்பினும், விஜயகாந்த் தலைமையை ஏற்று, அவரது அணிக்கு வர, எந்தக் கட்சியும் முன்வரவில்லை. அவரை, வேண்டி, விரும்பி அழைத்துக் கொண்டிருந்த மக்கள் நல கூட்டணி தலைவர்களும், 'உங்கள் தலைமையை ஏற்க முடியாது; வேண்டுமானால், எங்கள் கூட்டணிக்கு வாருங்கள்' என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
'லெட்டர் பேடு' கட்சிகள்:
அதேபோல, பா.ஜ., தரப்பும், விஜயகாந்த் தலைமையை ஏற்க விரும்பாததால், 'தனித்துப் போட்டியிடுவோம்' என, உரக்க சொல்ல துவங்கி விட்டது. கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாமல், அங்கும் இங்கும், அலைபாய்ந்து கொண்டிருக்கும் லெட்டர் பேடு கட்சிகளும்; சின்ன சின்ன கட்சிகளும் கூட, விஜயகாந்த் தலைமையை ஏற்க தயாரில்லை.இதனால், 'தனித்துப் போட்டி; தன் தலைமையில் தான் கூட்டணி' என, அவசரப்பட்டு அறிவித்து, சிக்கலில் மாட்டிக் கொண்டோமோ என, விஜயகாந்த் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், எல்லா கட்சியினரும் தன்னை ஓரங்கட்டுவதால், அவர் விரக்தியில் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (183)
Reply
Reply
Reply