தேவைதானா கருத்துக் கணிப்புகள்?

Updated : மார் 20, 2016 | Added : மார் 20, 2016 | |
Advertisement
சட்டசபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், கருத்துக் கணிப்பு எனும் பெயரில் மக்களை, மக்களின் மன நிலையைத் திசை திருப்பும் முயற்சியில், சிலர் ஈடுபட்டிருக்கின்றனர். ஏன் இதைச் செய்ய வேண்டும். இதனால், மக்களுக்கு ஆற்றும் அரும்பணி தான் என்ன; இவர்கள் இதைத் தன்னிச்சையாகச் செய்கின்றனரா அல்லது ஏதேனும் ஓர் அரசியல் கட்சியால் அதன் கருவியாகப்
தேவைதானா கருத்துக் கணிப்புகள்?

சட்டசபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், கருத்துக் கணிப்பு எனும் பெயரில் மக்களை, மக்களின் மன நிலையைத் திசை திருப்பும் முயற்சியில், சிலர் ஈடுபட்டிருக்கின்றனர். ஏன் இதைச் செய்ய வேண்டும். இதனால், மக்களுக்கு ஆற்றும் அரும்பணி தான் என்ன; இவர்கள் இதைத் தன்னிச்சையாகச் செய்கின்றனரா அல்லது ஏதேனும் ஓர் அரசியல் கட்சியால் அதன் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றனரா என்ற நியாயமான கேள்விகள் மக்கள் மனதில் எழுந்திருக்கின்றன.

தேர்தல் நடைபெறவிருக்கிறது. அப்போது மக்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு ஓட்டளித்து, அவர்களைத் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். அதற்குள் இத்தகைய கருத்துக் கணிப்புகள் நடத்த என்ன அவசியம்?கருத்துக் கணிப்பு நடத்துவதால் பொதுமக்களுக்கு என்ன லாபம்?இக்கேள்விகளுக்குப் பதில்களைத்
தேடும்போது தான், இந்தக் கருத்துக் கணிப்புகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சில ரகசிய உண்மைகள் அம்பலத்திற்கு வருகின்றன.

மேக்யவில்லி என்னும் மேலை நாட்டு எழுத்தாளன், 'ஓர் அரசியல்வாதியின் வெற்றிக்கு மூன்று முக்கியமான தகுதிகள் தேவை' என்பான். அந்த மூன்று தகுதிகள், பொய்ப்
பிரசாரம், ராஜ தந்திரம், படை பலம் ஆகியவை தான். இத்தகுதிகளைப் பழம் தின்று, கொட்டை போட்ட நம் அரசியல்வாதிகள் அதிகமாகவே பெற்றிருக்கின்றனர்.பொய்ப் பிரசாரத்தை திறம்படச் செய்வதில் நம் அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் இளைத்தவர்கள் அல்லர், சளைத்தவர்கள் அல்லர்.இன்றைய சூழலில் ராஜ தந்திரம் என்பது யாரை, எப்படி ஏமாற்றினால் நம் வியூகம் வெற்றி பெறும், கொள்கை, கோட்பாடுகளை எல்லாம் தேர்தல் நேரத்தில் ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டி, குப்பைத் தொட்டியில் போட்டு, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு, சந்தர்ப்பவாத அரசியல் பண்ணுவதில் எந்தக் கட்சி திறமையாகச் செயல்படுகிறதோ, அந்தக் கட்சிக்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகம். நேர்மையற்ற, சுயநலமிக்க, கீழ்த்தரமான, 'கூட்டணி தர்மத்தை' பின்பற்றுவது தான், நம் அரசியல் தலைவர்களின் ராஜதந்திரம்.

மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் வீரம் செறிந்த, மன்னர்களின் கட்டளைகளை ஏற்று, தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் வீர மறவர்கள் தேவைப்பட்டனர்.தற்போது சுதந்திர இந்தியாவில் எந்தக் கட்சிக்குத் தொண்டர் பலம் இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தொண்டர்கள், அந்தக் கட்சியின் தலைவரிடம் கண் மூடித் தனமான விசுவாசம் கொண்டு, தங்கள் தலைவருக்கு ஏதேனும் சிறு சோதனை ஏற்பட்டால் கூட, தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சுயமாகச் சிந்தித்து, அறிவியல் பூர்வமாக முடிவெடுக்கத் தெரியாத தொண்டர் பலத்தைப் பெற்றிருக்கிற கட்சிகள்.ஆனால், பொய்ப் பிரசாரத்தைத் தனித்துப் பார்ப்பதை விட, அதையும் ராஜ தந்திரத்தின் ஒரு கூறாகப் பார்ப்பது தான் சரியாக இருக்கும். பொய்ப் பிரசாரம் பல விதங்களில் செய்யப்பட்டாலும், மக்களை எளிதில் ஏமாற்ற, மக்களைத் தாங்கள் விரிக்கும் மாய வலையில் விழச் செய்ய, யாருக்கு ஓட்டளிப்பது என்று தெரியாமல்ஊசலாடும் மன நிலையில் இருக்கும் வாக்காளர்களைத் தங்கள் கட்சியின்பால் திருப்பக் கையாளும் ஒரு யுக்தி தான் கருத்துக் கணிப்பு.
கருத்துக் கணிப்புகளால், அரசியல்வாதிகள் தான் பயன் அடைவரே தவிர, பொதுமக்களுக்கு இதனால் அப்படி என்ன பெரிய பயன் கிடைத்து விடப் போகிறது?

கருத்துக் கணிப்பு எடுப்பவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்களை எல்லாம், எப்படி கட்சி சார்பற்றவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியும்.நீங்கள் எந்தக் கட்சியைச்
சேர்ந்தவர் என்ற கேள்வி ஒருபோதும் எழுப்பப்படுவதில்லை; அதற்கான பதிலையும் கருத்துக் கணிப்பில் தருவது இல்லை.கருத்துக் கணிப்பு எடுப்பவர்கள், பொதுமக்களிடம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களைத் தருவரா?
*வாக்காளரே! நீங்கள் இப்போதுள்ள நம் அரசியல் தலைவர்களில் யாரை நேர்மையானவர் என்று கருதுகிறீர்கள்.
*நம் அரசியல்வாதிகளில் யார் லஞ்ச, ஊழல் புரியாத அப்பழுக்கற்ற, துாய்மையான அரசியல்வாதி?
*நம் அரசியல்வாதிகளில் யார் தன் சொந்த, பந்தங்களின் நலன்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படுபவர்கள்?
*நம் அரசியல் தலைவர்களில் யார் ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிக அளவில் சொத்துச் சேர்த்தவர்?
*எந்த அரசியல் தலைவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில், வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்க தொழிற்சாலைகளை நிறுவினார்?
*தண்ணீர் தட்டுப்பாடு, மின் பற்றாக்குறையை அறவே நீக்க, எந்த அரசியல் தலைவர் உருப்படியான நடவடிக்கைகள் எடுத்தார்?
*சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும், ௬௦ சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குள் கீழ் வாழ வேண்டிய அவலநிலையை உருவாக்கிய அரசியல் கட்சிகள் எவை?
*மக்கள் செல்வாக்கு தங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்று, தம்பட்டம் அடித்துக் கொண்டே, தனித்துப் போட்டியிடப் பயந்து, கொள்கையற்ற கூட்டணி அமைப்பதில், எந்தக் கட்சி ஆர்வம் காட்டுகிறது?
*தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அள்ளி வீசி, தேர்தல் முடிந்து, ஆட்சியில் அமர்ந்ததும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்வீர்கள்?
இப்படிப்பட்ட உருப்படியான கேள்விகளை, மக்களிடம் கேட்பதை விட்டு விட்டு, நீங்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பீர்கள்; அடுத்த எந்தக் கட்சியின் தலைமையில் உள்ள கூட்டணி வெற்றி பெறும் எனக் கேட்டு, மக்கள் தரும் ஜோதிட பதில்களை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். ஜனநாயகத்தின் பெயரால், இப்படிப்பட்ட கூத்துகள் நடைபெற, அரங்கேற நம் அரசுகளும், நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் அனுமதிப்பது கேலிக்கூத்து.
அரசியல் சாணக்கியர்கள் கணக்கில்லாமல் பெருகிவிட்ட நம் நாட்டில், இனி பொதுமக்கள் ஊமைகளாய், செவிடர்களாய், செயலற்றவர்களாய், அரசியல்வாதிகளின் எடுப்பார் கைப்பிள்ளைகளாய் இருக்க வேண்டும் என்பது தான், அவர்களின் தலை எழுத்து.

எனவே, வெளியில் உத்தமர் போல் பேசுவதும், உள்ளத்தில் கள்ளம், கபடமுடையவர்களாக, சுயநலமே கொள்கையாகக் கொண்டவர்களாக, தேச நலனுக்கும், மக்கள் நலனுக்கும் எதிராகச் செயல்படுபவர்களாக நம் அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.அரசியல்வாதிகளால் இத்தனை காலம் மக்கள் ஏமாற்றப்பட்டது போதும். இனி மேலாவது மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க, கருத்துக்கணிப்பு போன்ற தேவையற்ற, மக்களுக்கு எவ்விதத்திலும் பயன்படாத காரியத்தில் சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்யாமல் இருப்பதே, மக்களுக்குச் செய்யும் பெரும் தொண்டு.
தொடர்புக்கு:
இ-மெயில்: krishna_samy2010@yahoo.com

- ஜி.கிருஷ்ணசாமி -
கட்டுரையாளர், சிந்தனையாளர், எழுத்தாளர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், பணிநிறைவு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X