நாமக்கல்:தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. சம்மேளனத்
தலைவர் செல்லராசாமணி, செயலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தனர்.தீர்மானங்கள் வருமாறு:
மணல் சேமிப்பு கிடங்கு அமைத்து, மணல் இரண்டாம் விற்பனை செய்ய, தனி நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.அரசாணைப்படி, பொதுப்பணித் துறையே நேரடியாக அரசு மணல் குவாரிகளில் சிறிய லாரிகளுக்கு, இரண்டு யூனிட் மணல், 1,000 ரூபாய்; கனரக டாரஸ் லாரிகளுக்கு, மூன்று யூனிட் மணல், 1,500 ரூபாய்க்கு வழங்க வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள, 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே, 'டிரைவிங் லைசென்ஸ்' வழங்கும் விதிமுறையை தளர்த்தி, டிரைவிங் பயிற்சி சான்று பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும்.
அரசு மணல் குவாரிகள் இயங்கும் கிராமத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், குண்டர்கள், லாரிகளை நிறுத்தி கோவில் வரி, ஊர் வரி, தடவழி வரி என, மிரட்டி, ஒரு நடைக்கு, 700 ரூபாய் வசூல் செய்கின்றனர்; அதை தடை செய்ய வேண்டும்.எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, தேர்தல் அறிக்கை வெளியிடும் கட்சியை ஆதரிப்போம்.இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.