சென்னை:''முஸ்லிம் ஓட்டுகளில், 95 சதவீதம் எங்களிடம் உள்ளது. எங்களை யாரும் பொருட்டாக கருதவில்லை. மதித்து அழைக்கும் கட்சிக்கு ஆதரவு தருவோம்,'' என, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேலை நாசர் கூறினார்.
சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை, தமிழ்நாடு தர்கா பாதுகாப்பு பேரவை உட்பட, பல அமைப்புகளை ஒருங்கிணைத்த, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மேலை நாசர் கூறியதாவது:
தமிழகத்தில், 85 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 95 சதவீதம் சுன்னத் ஜமாத்தை சார்ந்தவர்கள். சுன்னத் ஜமாத் கொள்கைக்கு உட்பட்ட, 40 ஆயிரம் மசூதிகளை சார்ந்தவர்கள். ஆனால், எந்த அரசியல் கட்சிகளும், எங்களை பெரிதாக கண்டு கொள்வதில்லை; மதிப்பதில்லை. முஸ்லிம் ஓட்டுகளில் ஒன்று, இரண்டு சதவீதம் ஓட்டு வங்கி உள்ள அமைப்புகளை தேடி அலைகின்றன.
எங்களை மதித்து அழைக்கும் அரசியல் கட்சிக்குத்தான் ஆதரவு தருவோம். பா.ஜ., இல்லாத, எங்கள் கருத்தை ஏற்கிற கட்சிக்கு ஆதரவு தருவோம்.இவ்வாறு அவர் கூறினார்.