புதுடில்லி : 'பா.ஜ., அதிகாரப்பசி கொண்ட கட்சி' என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
உத்திரகண்டில் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும் பா.ஜ.,வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் தனது கருத்தினை பதிவிட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அருணாச்சலப் பிரதேசத்தில் நடத்தியதை போலவே, உத்திரகண்டிலும் பா.ஜ., தற்போது குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிகாரப் பசி கொண்ட, அதிக ஊழல் நிறைந்த, தேச விரோத கட்சி என்பதை பா.ஜ., நிரூபித்துள்ளது என கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், பி.எப்., மீது விதிக்கப்பட்ட வரி, தங்க நகைகள் மீதான கலால் வரி விதிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை குறித்து கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், 'மோடியை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்க வேண்டும் என அருண் ஜெட்லி முடிவு செய்திருப்பது போல் தெரிகிறது' என்று கூறியுள்ளார்.