மார்ச் 21-உலக வன நாள்:மரங்களே... இயற்கை நமக்கு தந்த வரங்களே!

Updated : மார் 21, 2016 | Added : மார் 20, 2016 | கருத்துகள் (3)
Advertisement
மார்ச் 21-உலக வன நாள்

நேற்றைய மரங்களை பாதுகாப்போம் இன்றைய மரங்களை பராமரிப்போம்நாளைய மரங்களை பதியமிடுவோம் - மரமொழி
நம்மை நம் சந்ததியினரை பாதுகாக்க இயற்கை நமக்கு தந்திருக்கும் வரமே மரங்கள். மரங்கள் துாய்மை கேட்டை குறைக்கும் தன்மை உடையன.நமது வாயு மண்டலத்தில் சுமார் 95 சதவீத காற்று, பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் உயரம் வரை வியாபித்துள்ளது. இந்த காற்று, சூரிய கதிர்களின் தாக்கத்தால் எடை குறைந்து மேலும் உயரச் செல்லும். நமது சுற்றுப்புற சீர்கேட்டால் காற்றில் கலந்துள்ள பலவகையான அசுத்த வாயுக்களின் அடர்த்தியாலும், மாசுபடிவதாலும் காற்றினால் உயர எழும்பி செல்லும் நிலை குறைந்து வருகிறது. இதனால் பூமியின் மேற்பரப்பு எளிதில் சூடாக வாய்ப்பு உள்ளது. பல்வேறு வகையான பசுந்தாவரங்கள், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிய வாய்ப்பு உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளாக உருவான ஒரு அங்குல வளமான மேல்மண், சில ஆண்டுகளிலேயே வளம் குன்றிவிடுகிறது.
'நமது மொத்தப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதி வனங்கள் இருக்க வேண்டும்' என இந்திய வனக் கொள்கைகள் (1952- 1988) பறைசாற்றுகின்றன. அதற்கு மாறாக இந்திய வனப்பரப்பு மொத்த பரப்பில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே, கடந்த 50 ஆண்டுகளாக இருக்கின்றன. பரந்து விரிந்துள்ள தரிசு நிலங்களுக்கு ஏற்ற உத்தியை கையாளவேண்டிய நிலையிலும், அழிந்து வரும் காடுகளின் நிலையிலிருந்து மீளவும் மர வளர்ப்பு அவசியம். கடல் சார்ந்த உயிரினங்கள் உற்பத்திக்காக 'நீலப்புரட்சியும்', பால் உற்பத்தியில் 'வெண்மை புரட்சியும்' கண்டோம். நாளைய தேவைகளையும் மனித இனத்தையும் நாம் வாழும் சுற்றுப்புற சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, புதிய உயிர்சார்ந்த புரட்சி தேவைப்படுகிறது. அதன்மூலம் 'பசுமைப்புரட்சி' மற்றும் 'நீலப்புரட்சி' சாதனைகள் நீடித்து நிலைத்திருக்கும்படி செய்யவேண்டும். அத்தகைய புரட்சியை மரங்களை மூலதனமாக கொண்டே உருவாக்க முடியும்.
மரமும் மாசும் :வானளாவிய மரங்கள் அண்டவெளியில் உள்ள மாசு மற்றும் துாசிகளை அகற்றவல்லன. காற்றில் கலந்துள்ள அசுத்த வாயுக்களான கரியமில வாயு, கார்பன் மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு போன்றவற்றை மரங்கள் கிரகித்து பயனுள்ள வாயுக்களாக மாற்றுகின்றன. கரியமில வாயுவின் அளவை குறைத்து, பிராண வாயுவின் (ஆக்சிஜன்) அளவை அதிகரிக்கச் செய்கின்றன. ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள், ஒன்றரை டன் கரியமில வாயுவை கிரகித்து ஒரு டன் பிராண வாயுவை வெளிப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி 20 டன் துாசியை அப்புறப்படுத்தவல்லன. மரங்களின் மாசு நீக்கும் திறனானது காற்றின் வேகம், மரங்களின் உயரம், அடர்த்தி, சூரியஒளியின் தன்மை மற்றும் மாசுக்கள் நீரில் கரையும் தன்மையை பொறுத்தது.
தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து, மக்கள் கூட்டம் மற்றும் ஒலிபெருக்கியினால் வரும் சப்தங்களை குறைக்கவல்லன மரங்கள். பத்து மீட்டர் அகலமுடைய மரத்தொகுப்பு 1.6- - 1.8 'டெசிபல்' வரையான சப்தங்களின் அளவை குறைக்கவல்லவை. நகரங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றி 200 மீட்டர் மரத்தொகுப்புகள் அமைப்பதால், குடியிருப்போர் நிசப்தமான வாழ்க்கை வாழமுடியும்.
மரங்கள் காற்றின் வேகத்தை குறைக்கவல்லது. நன்கு உயர்ந்து வளர்ந்துள்ள மரம் காற்றின் வேகத்தை 10 சதவீதம் குறைக்க வல்லது. இதன் தாக்கம் காற்று செல்லும் திசையில் அம்மரத்தின் உயரத்தை போல 20 மடங்கு துாரத்திற்கும், காற்று வரும் திசையில் மூன்று மடங்கு துாரத்திற்கும் இருக்கும். மனிதகுலம் மற்றும் கால்நடைகளின் பெருக்கம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி மற்றும் நாகரிகத்தின் பெயரால் காடுகள் அழிவதாலும் உலக தட்பவெப்ப நிலையில் அதிக மாற்றங்கள் நடைபெறுவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இப்பேரழிவிலிருந்து உலகை, உலகமக்களை மீட்க உதவ வல்லன மரங்கள். மரங்கள் கரியமிலவாயு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றின் அளவை குறைப்பதால் வெப்பநிலை பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது.
மரத்தின் மதிப்பு :50 வயதுடைய ஆரோக்கியமான மரத்தின் மதிப்பு ரூ. 23 லட்சம். நன்கு வளர்ந்த மரம் இயற்கையை குளிர்விப்பதால், ஐந்து குளிர்விப்பானில் இருந்து பெறும் குளிர்ச்சியைத் தருகிறது. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.2 லட்சம். பல்வேறு சிறு பிராணிகளுக்கும், வண்ணத்து பூச்சிகளுக்கும் உறைவிடமாக விளங்குகிறது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம். பிராண வாயுவை உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் மதிப்பு ரூ.6 லட்சம். மண்ணின் சத்தை அதிகரித்து, மண்வளத்தை கூட்டுவதால் கிடைக்கும் மதிப்பு ரூ.2.5 லட்சம். இதுதவிர நிழலாக, கால்நடைகளுக்கு தீவனமாக, மரப்பொருட்களாக, எரிபொருளாக, காற்றின் துாசு, மாசு, ஒலியை குறைப்பதன் மூலம் கிடைக்கும் லாபம் ரூ.4.5 லட்சம்.
சராசரி உயரம், வயதுடைய மரம் இரண்டு குடும்பங்கள் வெளியிடும் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு, பிராண வாயுவை அளிக்க வல்லது. இந்தியாவில் உள்ள 33 கோடி குடும்பங்கள் சுவாசிக்க மட்டும் 17 கோடி மரங்கள் தேவை. மதுரை- வேளாண்மை கல்லுாரிக்கு எதிரே 5 ஏக்கரில் 2012ல் 'ஆக்சிஜன் பூங்கா' அமைக்கப்பட்டது.
ஆரோக்கியமான காற்று, சுற்றுப்புறச் சூழல், மாசுக்கட்டுப்பாடு மற்றும் துாசு நீக்கத்திற்கு உதவுகின்றன மரங்கள். பயணத்தின் போது கண்களுக்கு குளிர்ச்சி தரவும், வாகனங்கள் வெளிவிடும் நச்சுப்புகையை கிரகிக்கவும் மரங்கள் தேவை.
காடுகளில் இருந்து சுமார் 200 லட்சம் கனமீட்டர் விறகு, ஆண்டுதோறும் எரிபொருளுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. நமது தேவையில் 25 சதவீத எரிபொருள், வனம்சாராத பகுதிகளில் இருந்து பெறப்படுகிறது. ஆண்டுதோறும், 20 கோடி டன் விறகு தேவைப்படுகிறது. நமது எரிபொருள் உற்பத்தி 35 முதல் 40 சதவீத தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது.
வனங்களின் உற்பத்தி :இந்திய வனங்களின் ஆண்டு வளர்ச்சி சுமார் 0.5 கனமீட்டர் எக்டேர். உலகளவில் இது சுமார் 2.0 கன மீட்டர் எக்டேராக உள்ளது. நமது வனங்களின் ஆண்டு உற்பத்தி 26 கனமீட்டர் எக்டேர். உலகளவில் இது சுமார் 110 கனமீட்டர் எக்டேர். வனப்பரப்பை பெருக்குவது மட்டுமல்லாமல் இருக்கின்ற வனங்களின் வளர்ச்சி, உற்பத்தியையும் உலக சராசரிக்கு உயர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நமது நாட்டில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி நிலம், தரிசாக உள்ளது. தமிழகத்தில் நான்கில் ஒரு பங்கு தரிசு. இவற்றை மரங்கள் வளர்ப்பதற்கு பயன்படுத்த வேண்டும். பள்ளிக் குழந்தைகளும், கல்லுாரி மாணவர்களும் அதிக அளவில் மரங்களை நட்டு பராமரிக்க முன்வரவேண்டும்.- சி.சுவாமிநாதன், உழவியல் துறைத் தலைவர், வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை. 94439 25074

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
21-மார்-201621:56:35 IST Report Abuse
மதுரை விருமாண்டி " நகரங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றி 200 மீட்டர் மரத்தொகுப்புகள் அமைப்பதால், குடியிருப்போர் நிசப்தமான வாழ்க்கை வாழமுடியும்." குடியிருப்பை சுற்றி மூன்று நான்கு வரிசையில் மரங்களை வைத்து, மனிதர்கள் அங்கே போகாமல் இருந்தால் ஒரு வனம் போன்ற சூழல் எற்படும் விந்தையை நாம் கண்கூடாகப் பார்க்கமுடியும்.. பல பறவைகள், உயிரினங்கள் அங்கே வந்து சேரும்.. நம்ம ஜனங்களால் இது முடியுமா என்பது சந்தேகமே.. ஒரு நாள் லீவு என்றால் 10,000 கார்களில் ஊட்டிக்கு சென்று வழி எல்லாம் கரும் புகையைக் கக்கி விட்டு, போன இடத்தில் புள் பூண்டை மிதித்து அழித்து விட்டு, 1 டன் பிளஸ்டிக் கழிவுகளை எல்லா இடத்திலும் தூக்கிப் போட்டு விட்டு அதை குப்பை காடாக்கி, வளர்ந்து வரும் மரங்களின் கொப்புகளை உடைத்து விளையாடி அவைகளை முடமாக்கி விட்டு திரும்புகிறார்கள்.. குரங்கு அருவி (Monkey Falls) போயிருகிறீர்களா? அங்கே அருவிக்கு நுழையும் போது மூத்திர நாத்தம் குடலைப் புரட்டும்.. எல்லாம் மனுஷ மங்கிகளின் சமூக "சேவை" தான்.. நம்மை சுற்றி நல்ல மாற்றங்கள் வர முதலில் நாம் நல்லவர்களாக மாற வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Vincent Jayaraj - salem,இந்தியா
21-மார்-201620:56:13 IST Report Abuse
Vincent Jayaraj மரம் சார்ந்த சமூகம் மட்டுமே அறம் சார்ந்த சமூகமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
best - krishnagiri,இந்தியா
21-மார்-201611:56:49 IST Report Abuse
best அக்கால அரசர்க்கள் சாலை ஓரம் மரத்தை நட்டார்கள் இன்றைய அரசர்கள் சாலை ஓரம் உள்ள மரத்தை வெட்டினார்கள் . அக்கால அரசர்க்கள் ஏரி குளம் வெட்டினார்கள் இன்று அவற்றிய அளித்துவிட்டு பிளாட் போட்டு விற்கிறார்கள் . இவர்கள் ஆட்சி செய்ய வில்லை நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X