''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கூட்டணி ஆட்சி அமைக்கப்படாது; அமைச்சரவையில், கூட்டணி கட்சிகள் இடம் பெறவும் வாய்ப்பு இல்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கனவில் இருக்கும் சில கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்க்க, பலமான கூட்டணியை உருவாக்க, தி.மு.க., முயன்றது. அதற்காக, தே.மு.தி.க., - காங்., உட்பட, சில கட்சிகளுடன் பேச்சு நடத்தியது. இந்தப் பேச்சில், பெரிய அளவில் நிபந்தனைகள் விதிக்காமல், காங்கிரஸ் அணி சேர்ந்தது. இருப்பினும், 'தேர்தல் முடிவுகள் வெளியான பின், தி.மு.க.,வை கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்த வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
நிபந்தனைகள்:
அதே போல, தி.மு.க., கூட்டணியில் இணைய, முதலில் பேச்சு நடத்தி வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 'துணை முதல்வர் பதவி, கூட்டணி அமைச்சரவை' என,
நிபந்தனைகளை விதித்தார். இதனால், தி.மு.க., தரப்பினர் அதிருப்தி அடைந்தாலும், 'முதலில் கூட்டணி அமையட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்ற ரீதியில், எதற்கும் பிடிகொடுக்காமல் இருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், இம்மாதம், 10ம் தேதி, 'தனித்து போட்டி' என, விஜயகாந்த் அறிவித்தார். இப்படி அறிவித்தால், மக்கள் நல கூட்டணி தலைவர்கள், தன்னை தேடி வருவர் என, விஜயகாந்த் நம்பினார். ஆனால், அந்த அணியில் இடம் பெற்றுள்ள தலைவர்களோ, 'உங்கள் அணிக்கு நாங்கள் வர முடியாது; தேவையானால், நீங்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்' என, தெளிவாக கூறி விட்டனர். அதேபோல, பா.ஜ., தரப்பினரும், விஜயகாந்துடன் கூட்டணி பேச்சு நடத்துவதில் தீவிரம் காட்டவில்லை. இப்படி எல்லா கட்சிகளும் ஓரம் கட்டியதால், 'யாரும்
தேடுவார் இல்லை' என்ற நிலையில், விஜயகாந்த் விரக்தி அடைந்துள்ளார்.
முடிவை மாற்றலாம்:
அத்துடன், அவரது கட்சியினர் பலரும், வலுவான கூட்டணி சேர்ந்தால் மட்டுமே, தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவில் உள்ளனர். இது தொடர்பாக, கட்சி தலைமைக்கு நெருக்கடியும் கொடுத்து வருகின்றனர். எனவே, கூட்டணி விஷயத்தில், வரும் நாட்களில், விஜயகாந்த் தன் முடிவை மாற்றினாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஒரு வேளை, முடிவை மாற்றி, அவர், தி.மு.க.,வுடன் அணி சேர தீர்மானித்தால், அவர் மீண்டும் தன் முந்தைய நிபந்தனைகளில் ஒன்றான, கூட்டணி அரசு கோரிக்கையை வலியுறுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதற்கு வாய்ப்பு தராத வகையில், ''தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கூட்டணி அரசு அமைக்கப்படாது; கூட்டணி கட்சிகளுக்கு, அமைச்சரவையிலும் இடம் தரப்படாது,'' என, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் திட்டவட்டமாக நேற்று தெரிவித்துள்ளார். இதனால், 'தி.மு.க., ஆட்சி அமைத்தால், அமைச்சரவையில் இடம் பெறலாம்; அமைச்சர் பதவியை பெறலாம்' என்ற கனவில் இருந்த கட்சிகளுக்கு, 'பெப்பே'காட்டப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியால் வெறுப்பு:
திருச்சியில், ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டி:
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், மது விலக்கு குறித்த தகவல் இடம் பெறுவதாக கூறப்படுவது பற்றி?
அப்படி இருந்தால், அது மக்களை ஏமாற்றும் செயலாகவே இருக்கும்.
தி.மு.க., ஆட்சி அமைந்தால், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு உண்டா?
வாய்ப்பு இல்லை.
'அமைச்சர் பன்னீர்செல்வம் எங்கே?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்ட பிறகு, அமைச்சர் பன்னீர்செல்வம், வெளியே வந்துள்ளது பற்றி?
அப்படியும் இருக்கலாம்.
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, விரைவில் கருணாநிதியை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறதே?
அப்படி, ஒரு தகவல் உங்களிடம் இருந்தால், நீங்கள் எங்களிடம் சொல்லுங்கள்; அப்படி உங்களுக்கு தெரியாமல், எங்களிடம் வந்தால், நாங்கள் உங்களிடம் சொல்கிறோம்.
தி.மு.க., கூட்டணிக்கு வெறும் அமைப்புகள் மட்டும் ஆதரவு தெரிவித்து வருகிறதே?
எங்கள் கூட்டணியில், காங்கிரஸ் இணைந்துள்ளது. இதன் மூலம், தி.மு.க., கூட்டணி பலம் வாய்ந்த வலுவான கூட்டணியாக திகழ்கிறது. மேலும், மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவற்றை வெறும் அமைப்புகள் என்று கொச்சைப்படுத்தாதீர்கள்; அவர்களும் வாக்காளர்களே; அவர்களுக்கும், சமுதாயத்தில் முக்கிய பங்கு உண்டு. அ.தி.மு.க., ஆட்சியால் வெறுப்படைந்து, எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (140)
Reply
Reply
Reply