பொன்னான வாக்கு:டிராபிக் ராமசாமியுடன் ம.ந.கூட்டணி

Updated : மார் 22, 2016 | Added : மார் 21, 2016 | கருத்துகள் (2) | |
Advertisement
தமிழக அறிவுஜீவிகள் சமூகம், மக்கள் நலக் கூட்டணிக்காக, இலவசப் பிரசாரம் செய்யத் துவங்கியிருப்பதைக் கடந்த சில தினங்களாக இணையத்தில் பார்க்கிறேன். 'ஊழல் இல்லை; அப்பழுக்கில்லை; குறுகிய நோக்கில்லை; பதவி ஆசையில்லை; சமூக நலனைத் தவிர வேறு சிந்தனையே இல்லை' என்று, சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக,அப்படியொரு உணர்ச்சிப் பிரவாகம்.ஊழல் என்பதே, அதிகாரம் கைக்கு வந்த பிறகு
பொன்னான வாக்கு:டிராபிக் ராமசாமியுடன் ம.ந.கூட்டணி

தமிழக அறிவுஜீவிகள் சமூகம், மக்கள் நலக் கூட்டணிக்காக, இலவசப் பிரசாரம் செய்யத் துவங்கியிருப்பதைக் கடந்த சில தினங்களாக இணையத்தில் பார்க்கிறேன். 'ஊழல் இல்லை; அப்பழுக்கில்லை; குறுகிய நோக்கில்லை; பதவி ஆசையில்லை; சமூக நலனைத் தவிர வேறு சிந்தனையே இல்லை' என்று, சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக,அப்படியொரு உணர்ச்சிப் பிரவாகம்.
ஊழல் என்பதே, அதிகாரம் கைக்கு வந்த பிறகு நடைபெறும் சங்கதி தான். கரி அள்ளிப் போடாமலேயே, கறை படியாத கரங்கள், என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும், நான்கு கட்சிகளும், போன வருஷமே மது ஒழிப்பு போராட்டம் என்ற பெயரில், தமது கூட்டணிசாத்தியங்களைத் தெரியப்படுத்தியவை. இன்றுவரை கூட்டு தொடர்வது சந்தோஷமே. ஆனால், ஓட்டுகளை பிரிப்பது என்பதை தவிர, இவர்களால் வேறு என்ன சமூக சேவை செய்ய இயலும் என்று தெரியவில்லை; எந்தக் கணத்திலும், இவர்களே பிரிந்துவிடலாம் என்பது தவிர்த்து.
இருக்கிற இரண்டு கம்யூனிஸ்ட்களும் காலங்காலமாக, தி.மு.க., -மற்றும்- அ.தி.மு.க., கூட்டணி யில் குட்டிக்கரணமடித்து, 'சீட்' பெற்றவர்கள். வைகோ, திருமாவும் மாநில திராவிட நீரோட்டத்தில், முங்கிக் குளித்து மூச்சுத் திணறியவர்களே. ஒற்றை இலக்கத் தொகுதிகள் போரடித்த காரணத்தால் தான், இவர்கள் தனிக்கூட்டணி கண்டனர் என்றால் சரி. மற்றபடி, மாற்று அரசியலை முன்வைக்கிற முகங்களாக, இவர்களைப் பார்க்கச் சொல்வதெல்லாம், கொஞ்சம் அதிகப்படி.ஏனெனில், மாற்று அரசியல் என்பதை வகுக்கும் மிக முக்கிய காரணி, வலுவான கொள்கைகள். ம.ந. கூட்டணியின் கொள்கை என்ன? ம.தி.மு.க.,வின் கொள்கைகள், அந்தக் கூட்டணியில் இருக்கும்கம்யூனிஸ்ட்களுக்கே ஒத்துக் கொள்ளாது.
இரண்டு கம்யூனிஸ்ட்களுமே, தருணம் கிட்டி னால் கரணமடித்து, பழைய குருடியின் கதவைத் தட்டிவிடக் கூடியவர்கள். விடுதலைச் சிறுத்தைகளின் தலித் ஓட்டு வங்கி, தமக்கு சாதகம் என்னுமளவில், இந்த மூன்று கட்சிகளும் திருப்தியுறுமானால், அப்படி நினைத்து, ஒன்றுக்கு இரண்டு முறை 'பல்பு' வாங்கிய கருணாநிதியை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். திருமாவுக்கு விழாத தலித் ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்குத்தான் விழுமே தவிர, பிறருக்கல்ல.அந்த வகையில், அ.தி.மு.க.,வுக்கு விழக்கூடிய தலித் ஓட்டுகளில், கொஞ்சத்தைப் பிரித்து எடுத்து வந்திருப்பது தவிர, இந்தக் கூட்டணி சாதித்ததும், சாதிக்கப் போவதும் பெரிதாக ஒன்றுமில்லை. ம.தி.மு.க.,வுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் ஓட்டு வங்கி என்று ஏதாவது இருக்கிறதா என்ன; அப்படி இருந்தால், அதெல்லாம் மல்லய்யாவுக்கு கடன் கொடுத்தது போன்ற வங்கியாகத்தான் இருக்கும்.
ஆட்சி மாற்றம் என்பது, தாரக மந்திரமாக இருந்துவிட்டு போவதில், ஆட்சேபனையே இல்லை. ஆனால், இவர்கள் விஜயகாந்தைத் தம் பக்கம் இழுப்பதற்கு படும் பாடுகளைப் பார்க்கும்போது, கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது.அவருக்கு ஒரு, நாலைந்து சதவீத ஓட்டுகள் இருக்கின்றன என்பதைத் தாண்டி, மாற்று அரசியலுக்கான முகமாக விஜயகாந்தைப் பார்த்துவிட இயலுமா? எம்பெருமானே!
விஜயகாந்த், தங்கள் கூட்டணிக்கு வந்தால், முதல்வர் வேட்பாளராகவே அறிவிக்க வும் தயாராக இருந்தது, ம.ந.கூட்டணி. அது சாத்தியமில்லை என்று இன்று தெளிவாகிவிட்ட நிலையில், எப்படி வேண்டுமானாலும் மாற்றிச் சொல்லி, மழுப்பப் பார்க்கலாம்.ஆனால், கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களும், கம்யூனிஸ்ட் அல்லாத புரட்சியாளர்களும் அடங்கிய ஒரு கூட்டணி, 'புரட்சிக் கலைஞர்' என்ற ஒரே காரணத்துக்காக, விஜயகாந்துக்குக் கொடி பிடிக்க முன்வருவ தெல்லாம், எம்மாதிரியான மாற்று அரசியல் என்று தெரியவில்லை.எல்லாம் இந்தப் புரட்சி படுத்துகிற பாடு.
என்னைக் கேட்டால் ம.ந.கூட்டணி விஜயகாந்துக்கோ, ஜி.கே. வாசனுக்கோ ஏங்காமல், பேசாமல், 'டிராபிக்' ராமசாமியுடன் கூட்டணி வைப்பதைக் குறித்து யோசிக்கலாம்.தேர்தலில் நிற்கப் போகும் ஒவ்வொரு ஊழல்வாதிக்கு எதிராகவும் குறைந்தது, 200, 300 பேரை நிறுத்தி, ஓட்டுகளை சிதற அடிக்கும் சக்கர வியூகம் அல்லது அக்ரம வியூகமொன்றை அவர் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன்.
டிராபிக் ராமசாமி நிறுத்தும் அத்தனை பேருக்கும் எத்தனை ஓட்டு விழும் என்பது ஒருபுறமிருக்க, நிறுத்துவதற்கு அவரிடம் அத்தனை ஆட்கள் இருக்கின்றனர் என்பதே குலைநடுங்கச் செய்கிறது.ஒன்றுமே இல்லாவிட்டாலும் ஓட்டுகளை பிரிக்கும் கொள்கை அடிப்படையிலேனும், டிராபிக் ராமசாமி ம.ந.கூட்டணியுடன் ஒத்துப் போய்விடுவார் அல்லவா!
தொடர்புக்கு:பா. ராகவன் --
writerpara@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nellai muthuvel - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-மார்-201610:23:34 IST Report Abuse
nellai muthuvel அதே பழைய கொள்ளை கூட்டத்துக்கே வாக்களிங்க மக்களே, அனைத்திந்திய திருடர்கள் முன்னேற்ற கழகமும், திருடர்கள் முன்னேற்ற கழகமும் திருடியது போக மிச்சம் மீதி ஏதும் மக்களுக்காக இருக்குமா, தமிழ் மண்ணில் உள்ள அனைத்து நீர், நிலம் ஆதாரங்கள் அனைத்தும் கொள்ளை அடித்த அவர்களே மீண்டும் வர வாக்களிங்கனு சொல்ல வராரா. பா. ராகவன் , நீங்கள் பா.ரா விஷயங்கள் நிறைய இருக்கின்றன நண்பரே. கூட்டணி என்பதே தங்களுக்குள் சில விஷயங்களை விட்டு கொடுத்துதான் ஏற்படுத்தி கொள்வது தான் அது தெரியாதா உங்களுக்கு. மீண்டும் அந்த ஊழல் குட்டையில் ஊறிய உளுத்த மட்டைகளை ஆதரிக்க உங்களின் வியாக்கியானம் தேவை இல்லை.
Rate this:
Cancel
Ramesh - Chennai,இந்தியா
22-மார்-201610:01:05 IST Report Abuse
Ramesh இந்த கட்டுரை எழுதிய உங்களை நினைத்தால் கோபம் வரவில்லை மாறாக பரிதாவமே மிஞ்சுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X