இன்று உலக தண்ணீர் தினம்:நீர்வளம் நம் உயிர்நலம்| Dinamalar

இன்று உலக தண்ணீர் தினம்:நீர்வளம் நம் உயிர்நலம்

Added : மார் 22, 2016 | கருத்துகள் (1)
இன்று உலக தண்ணீர் தினம்:நீர்வளம் நம் உயிர்நலம்

தமிழகத்தில் சில மாதங்களுக்குமுன் உயிர்களையும் உடமைகளையும் காவு வாங்கியதோடு, லட்சக்கணக்கானோரின் இயல்பு வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது பெருவெள்ளம். அனைத்தையும் இழந்து இன்றும் நடைபிணமாக அலைபவர்கள் ஏராளம். இந்தச் சேதத்துக்கான முக்கியகாரணம் வானம் பொத்துப் பெய்த மழைமட்டுமல்ல. நீர்மேலாண்மையில் நாம் தோற்றுப்போனதும்தான்.அசுரத்தனமாகப் பெய்த இந்த மழைக்கு, புவிவெப்பமயமாதல்தான் பிரதான காரணம் என்றாலும், இனி இப்படித்தான் இருக்கும். அதிக வெப்பத்தையும் அனுபவிக்கவேண்டியதிருக்கும். அதிக மழையையும் எதிர்நோக்க வேண்டியதிருக்கும். வருங்காலங்களில் தமிழகத்தில் பருவ மழை பெய்யும் நாட்கள் குறையலாம்.
ஆனால், மழையின் அடர்த்தி 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும். அதாவது 42 நாட்களாக நீடிக்கவேண்டிய பருவ மழைக்காலம், 30 நாட்களாகச் சுருங்குவது மட்டுமன்றி, ஐந்து, ஆறு மணி நேரம் பெய்ய வேண்டிய மழை இரண்டு, மூன்று மணி நேரத்தில் பெய்து தீர்த்துவிடும். குறைந்த நேரத்தில் கொட்டித்தீர்க்கும் மழையை, எதிர்கொள்ள நாம்தான் தயாராக இருக்கவேண்டும். நமது நீர்நிலைகளைத் தயாராக வைத்திருக்கவில்லை யெனில், வெள்ளச் சேதம் தவிர்க்க முடியாததாகிவிடும். மழை நீரைச் சேமிக்கவில்லையென்றால் கோடையில் கடும் வறட்சி தலைகாட்டும்.
மழை மறைவு பிரதேசம் :ஏன் நீர்நிலைகளில் நீரை சேமிக்கவேண்டும்? எனக் கேட்கலாம். தமிழகம் மழை மறைவு பிரதேசம். தேசத்தின் மக்கள் தொகையில் தமிழகம் 7 சதவிகிதம். ஆனால், நீர்வளத்தில் 3 சதவிகிதம்தான். இந்தியாவின் ஆண்டு சராசரி மழையளவு 1,170 மி.மீ. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை 925 மி.மீ. இது, தேசிய சராசரியை விடக்குறைவு.உலக நீர்வளத்தில் மனிதன் பயன் படுத்தக் கூடிய நீரின் அளவு 48000 கன கிலோ மீட்டர். இதில் தமிழ்நாட்டில் 4.8 கனகிலோ மீட்டர்தான் உள்ளது. இது, உலக அளவில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு. ஆனால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை உலகில் நுாறில் ஒரு பங்கு. மக்கள் தொகையில் நுாறில் ஒரு பங்கு இருந்தாலும் கிடைக்கும் நீரின் அளவோ பத்தாயிரத்தில் ஒரு பங்குதான். இதிலிருந்தே தமிழ்நாடு மிகமிக அதிக நீர் பற்றாக்குறையோடு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள இயலும். அதனால் நீர்நிலைகளில் மழைநீரை சேமித்தல் அவசியமாகிறது.
நீர் ஆதாரங்களை உருவாக்குதல் :தண்ணீரின் தேவையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்தவர்கள் பண்டைத் தமிழர்கள். பண்டை மன்னர்கள் ஒரு கிராமத்தை உருவாக்கும் போது அங்கு நீர்ஆதாரங்களையும் ஏற்படுத்தினர். "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர்". நாட்டில் குளம் வெட்டினால் தான் நலம் பெருகும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தப் பட்டினப்பாடல் வரி சான்று. நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்திய முறையை மணிமேகலையிலுள்ள "கருங்கை" என்ற வார்த்தை சான்றளிக்கிறது.
தஞ்சைப் பெரியகோவில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுமையும், சேமிக்கும் இடமாகச் சிவகங்கைக் குளத்தை மன்னன் ராஜராஜன் அமைத்தான் என்ற கல்வெட்டு செய்தி மூலம் நீர்சேமிப்பில் தமிழ் மன்னர்களின் கரிசனம் புலனாகிறது. நீர்நிலைகளைப் பழுதுபார்த்ததையும், கரைகளைச் செப்பனிடப்பட்டதையும் கல்வெட்டு செய்தி மூலம் அறிகிறோம். அன்று நாம் நீர்மேலாண்மையில் கில்லாடிகளாகத்தான் இருந்தோம். ஆனால் இன்று...? பெய்யும் மழையைக் கூட சேமித்து வைக்க முடியவில்லை.
எங்கே நீர்நிலைகள்:1970--80 காலகட்டத்தில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. அந்தப் புள்ளி விபரப்படி தமிழகத்தில் 39,202 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் இருப்பதாகக் கூறப்பட்டது. இதில் எத்தனை நீர்நிலைகள் இருக்கின்றன? என்பது ஆக்கிரமித்தவர்களுக்கே வெளிச்சம். "தமிழ்நாட்டிலுள்ள 39,202 கண்மாய்களில் 10 சதவிகிதம் அழிந்து போய்விட்டன' என்று அதிரவைக்கிறது சர்வதேச நீர் மேலாண்மை மையம். அதாவது சுமார் நான்காயிரம் கண்மாய்கள் அழிந்துவிட்டன. நீர் தேங்கி வந்த இடங்கள் அரசியல் செல்வாக்கினாலும், அதிகாரிகள் துணையாலும் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. "வளர்ச்சி" என்ற பெயரில் அரசும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யத் தவறவில்லை.
2015-ல் ஏற்பட்ட சேதத்துக்கு கொட்டிய மழைதான் காரணம் என நாம் சொல்வது தவறு. 1976, 1985, 1996 மற்றும் 2005லும் அதிகளவு மழை பெய்து உள்ளது. எனவே நீர்நிலை கொள்ளையே சேதத்துக்குக் காரணம். வரும் காலங்களிலாவது, அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கும் நீர்நிலைகளைப் பயன்படுத்திடக் கூடாது. நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.
சீனத்து வேளாண்மையின் அடிப்படையே நீர் மேலாண்மைதான். மக்கள் சீனம் மலர்ந்த போது, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு எல்லாம் நீர் மேலாண்மை பற்றி மாவோ பயிற்சி வழங்கியதாக சீன வரலாறு சொல்லுகிறது.இப்போது நெல் உற்பத்திக்கு ஒரு டன் நெல்லுக்கு ஆயிரம் டன் தண்ணீர் என்ற அளவு குறைக்கப்பட வேண்டும். நுாறு டன் நீரே போதும் என்பதே நவீன விஞ்ஞானத்தின் முடிவு. நீர் பயன்பாட்டில் 91 சதவிகிதம் விவசாயத்திற்கு செல்கிறது என்பதால் இந்த நடவடிக்கை அவசியம்.

குறைந்த நீர் தேவைப்படும் சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காசோளம், தினை, வரகு போன்ற பயிர் வகைகளை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கவேண்டும். இதனால் பாசனத்திற்கு என செலவாகும் தண்ணீரை பெரும் அளவில் சேமிக்க முடியும். சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகளை கையாளலாம்.
தண்ணீர் சேமிப்பு:நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீரும் நமக்குக் கிடைக்கும் கூடுதல் நீர் என்பதை முதலில் மனதில் நிறுத்திக் கொள்ளுதல் அவசியம். குழாயைத் திறந்து வைத்து ஹாயாகக் குளிக்காமல் வாளியில் நீரை பிடித்துக் குளியுங்கள். 22 லிட்டர் வரை சேமிக்கலாம். மேற்கத்திய கழிவறைகளுக்குப் பதிலாக, நமது நாட்டு கழிவறை கோப்பைகளை பொருத்துவதால், ஒரு முறைக்கு 12 லி., நீரை சேமிக்க முடியும். ஒவ்வொரு நீர்நிலைகளையும் பொதுச்சொத்தாக அறிவித்து, அதனால் பயன்பெறும் பயனாளிகளைக் கொண்ட உள்ளூர்க் குழுக்களை அமைக்கவேண்டும். மக்கள் கையில் நீர் நிர்வாகம் வரவேண்டும்.,
ஆறுகளிலும், நீர் நிலைகளிலும், நீரைத் தக்கவைப்பது மணல்தான். எனவே மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்க வேண்டும். நீர் வளத்தை பாதுகாத்திடவும், பராமரித்திடவும், சேமித்திடவும் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் அவசியம்.
தண்ணீர் தினம்:தண்ணீரே வாழ்க்கையின் அடிப்படைக் கட்டுமானப் பொருள். உண்மையான வளர்ச்சிக்கு தண்ணீர் மிகவும் அவசியமானது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதார, சமூக மற்றும் மனித மேம்பாட்டுக்கும் அத்தியாவசியமானது. நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து மக்களிடம் உணர்த்த 'உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்று ஐ.நா., 1992-ல் தீர்மானித்தது. இதையடுத்து ஆண்டு தோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம்
சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. "சிறந்த தண்ணீர்... சிறந்த வேலை" என்பதே இந்தாண்டு (2016) உலக தண்ணீர் தினத்தின் கோஷம்.தமிழகம் வறட்சியையும் வெள்ளத்தையும் மாறிமாறி சந்தித்துக்கொண்டிருக்கிறது. இப்போது கூட வெள்ள நிவாரணம் அல்லது வறட்சி நிவாரணம் இரண்டில் ஒன்றைத்தானே மாறிமாறி பெற்று வருகிறோம். இந்தநிலை மாறவேண்டும். நீர்நிலைகளைக் காப்பதன் மூலம் நீர்வளம் காப்போம். நீர்வளம், நிலவளத்தை உருவாக்கும். நிலவளம் என்பது நம் உயிர்நலம்.
-ப.திருமலைபத்திரிகையாளர்84281 15522

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X