சென்னை:''தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த, ஓரிரு நாளில் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர், சென்னைக்கு வருகின்றனர்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:சோனியா அறிவுரைப்படி, டில்லியில் இருந்து குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர், இன்னும் ஓரிரு நாளில் சென்னை வருகின்றனர். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வசதிக்கு ஏற்ப, அவரை சந்தித்து, தொகுதிப் பங்கீடு குறித்து பேச முடிவு செய்வர். இன்னும், 10 நாட்களில், காங்கிரஸ் பிரசாரம் துவக்கவுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, தலித்துகளின் ஆதரவை பெற, அம்பேத்கரின் ரத யாத்திரையை துவக்கியுள்ளோம். இந்த ரத யாத்திரை, தமிழ்நாடு முழுவதும் செல்லும்.
தே.மு.தி.க., வராவிட்டாலும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது; இந்த கூட்டணி வெல்லும். தி.மு.க., கூட்டணி பற்றி, வைகோ விமர்சித்து வருகிறார். அந்த கூட்டணியில், நான்கு தலைவர்கள் உள்ளனர் என்பதை காட்டுவதற்காகவே, ஏதாவது பேசுகின்றனர்.
முதல்வர் வேட்பாளரை அறிவித்ததும், அந்த கூட்டணி, 'டமால்' என உடையும். 'தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, இலங்கை தமிழர்களின் ரத்தத்தில் உருவானது' என, வரலாறு தெரியாமல் தமிழிசை சவுந்தரராஜன் பேசி இருக்கிறார். இலங்கை தமிழர்களுக்கு, காங்கிரஸ் என்னவெல்லாம் செய்தது என்பதை, அவரது தந்தை குமரி அனந்தனிடம் கேட்டு தெரிந்து கொண்டு, பின்
பேசுவது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.