கவுரவர்களை ஜெயிக்க வந்த பாண்டவர்கள் நாங்கள்: வைகோ வர்ணனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவுரவர்களை ஜெயிக்க வந்த பாண்டவர்கள் நாங்கள்: வைகோ வர்ணனை

Added : மார் 23, 2016 | கருத்துகள் (250)
vaiko, vijayakanth, வைகோ, விஜயகாந்த்

சென்னை : சென்னை கோயம்பேட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து, தேமுதிக- மக்கள் நல கூட்டணி தலைவர்கள் கூட்டணியை உறுதி செய்தனர். இதில் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததுடன், தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு தேமுதிக அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது :
இந்திய கம்யூ. கட்சியின் முத்தரசன் : எங்களுக்கு 2016 சட்டசபை தேர்தல் ஒரு அரசியல் போர். பஞ்சபாண்டவர்களை போல் ஓரணியாக இணைந்துள்ளோம். இதில் விஜயகாந்த் தர்மர், வைகோ அர்ஜூனன், திருமாவளவன் பீமன், முத்தரசன் சகாதேவன், ஜி.ராமகிருஷ்ணன் நகுலன். 100 கவுரவர்கள் எங்களை எதிர்த்தாலும் அவர்களை வதம் செய்து இறுதியில் பாண்டவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். கூட்டணியில் தோற்றதை போல் தேர்தலிலும் திமுக தோற்கும்.
விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : விஜயகாந்த் தான் கிங் ஆக இருக்க வேண்டும் என்றார். அதனை நிறைவேற்றி விட்டார். தமிழக தேர்தலில் இது திருப்புமுனையை ஏற்படுத்தும். நாங்கள் கிங் மேக்கராக இருந்து விஜயகாந்த்தை கிங் ஆக ஆக்கி உள்ளோம் என்றார்.
மா. கம்யூ. கட்சி ஜி.ராமகிருஷ்ணன் : இந்த கூட்டணி , எங்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் நேரடி போட்டி. கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டவர்கள் மக்கள் பிரச்னையை கண்டு கொள்ளவில்லை. இந்த கூட்டணி தமிழக அரசியலில் மாற்றாக அமையும் என்றார்.
ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ: மக்கள் நல கூட்டணியின் நம்பிக்கை நிறைவேறியுள்ளது. இந்த தேர்தலில் விஜயகாந்த் முதல்வராக பதவியேற்பது உறுதி. தேமுதிக உடன் மக்கள் நல கூட்டணி இணைந்தால் கூட்டணியை எப்படி அழைப்பீர்கள் என பலரும் என்னிடம் கேட்டனர். இனி இந்த அணி கேப்டன் விஜயகாந்த் அணி என்று அழைக்கப்படும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். எல்லா விவகாரங்களுக்கும் முதல்வர் வேட்பாளர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. அர்ஜூனனும், பீமனும் தர்மரை யாரும் நெருங்க விடமாட்டோம் என்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் : மக்களுடன் தான் கூட்டணி என அப்போதே கூறி இருந்தேன். அதன்படியே பெயரிட்டுள்ள மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளேன். மக்கள் நலக் கூட்டணிக்கு மட்டுமல்ல, தேமுதிக- மக்கள் நல கூட்டணிக்கும் வைகோ தான் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றார்.
மக்கள் நல கூட்டணி - தேமுதிக கூட்டணி குறித்து கூறிய வைகோ, இரு மக்கள் எதிர்பார்த்த கூட்டணி. மாற்றத்தை தரும் கூட்டணி. மகத்தான கூட்டணி. மாபெரும் வெற்றி கூட்டணி என்றார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X