அவள தீயினுள் தென்றல்!| Dinamalar

அவள தீயினுள் தென்றல்!

Added : மார் 25, 2016 | கருத்துகள் (2)
Advertisement
அவள  தீயினுள்  தென்றல்!

அப்பழுக்கில்லாத அழகுக்குச் சொந்தக்காரி, குடும்பத்தில் அவள் ஒரு இடைநில்லாப் பேருந்து, தடையில்லா மின்சாரம், பழுதுபடாத இயந்திரம், வேண்டாததை எல்லாம் வாங்கிக் கொள்ளும் குப்பைத் தொட்டி, கணவனின் கைப்பாவை, வாலிபத்தைத் தொலைத்த வஞ்சிக்கொடி--இத்தகு அடையாளங்களைக் கொண்ட பெண்ணை, கடவுள் படைத்துக் கொண்டிருந்தார். ஆறு நாட்கள் தொடர்ந்து வேலை செய்தும் படைப்பு முடிந்தபாடில்லை. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தேவதை இறங்கி வந்து கடவுளைக் கேட்டது.'ஆண்டவா இவளைப் படைப்பதற்காக நீங்கள் ஏன் இவ்வளவு நேரம் செலவழித்து சிரமப்படுகிறீர்?'கடவுள் பதில் சொன்னார்.
'நீ என்ன இவளை சாமானியப் படைப்பு என்று கருதி விட்டாயா? இவள் உடம்பில் நான் மாற்றக் கூடிய இருநுாறு பாகங்களைப் பொருத்த வேண்டும்; வெறும் தண்ணீரைக் குடித்துக் கொண்டும், எல்லோரும் சாப்பிட்ட பின் இருக்கும் மிச்சம் மீதியைத் தின்றும், இவள் உயிர் வாழ்பவளாக இருக்க வேண்டும்.ஒரே சமயத்தில் நாலு பிள்ளைகளை மடியில் கிடத்திக் கொள்பவளாகவும், ஒரே ஒரு பாச முத்தத்தினால் முழங்கால் சிராய்ப்பிலிருந்து நொறுங்கிய உள்ளம் வரைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவளாகவும் இருக்க வேண்டும். ஆனால் அத்தனையும் செய்வதற்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்க வேண்டும்'
உழைப்பாளி :'என்ன! இரண்டே கைகளை வைத்துக் கொண்டு இத்தனை வேலைகளா? அப்படிப்பட்ட அபூர்வப் படைப்பை உருவாக்க இன்னும் ஒரு நாள் எடுத்துக் கொள்ளுங்களேன்; ஏன் இந்த அவசரம்' எனத் தேவதை வினவ, கடவுள் சொன்னார்.'அதெல்லாம் முடியாது. என் மனதுக்கு மிகவும் பிடித்த இந்த அற்புதமான படைப்பை இன்று எப்படியும் முடித்துத்தான் தீருவேன். அவற்றைப் பற்றி மேலும் கூறட்டுமா... கேள்! அவள் தனக்கு உடம்புக்கு சரியில்லை என்று சொல்லிப் படுக்கவே மாட்டாள். தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் தர்மவதி, ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தொடர்ந்து உழைக்கும் உழைப்பாளி''அப்படியா? அந்த அதிசயப் பெண்ணை நான் தொட்டுப் பார்க்கலாமா?' எனக் கேட்டது தேவதை.'என்ன இவள் இவ்வளவு மிருதுவாக இருக்கிறாளே'பெரும் சக்தி அவள் 'ஆமாம். இவள் மிருதுவானவள் மட்டுமல்ல. மிகுந்த வலிமையானவள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட அவளுடைய சக்தியை உன்னால நினைத்துப் பார்க்கவே முடியாது''அது சரி, அவளுக்குச் சிந்திக்கும் திறன் உண்டா?''சிந்திக்கும் திறன் மட்டுமல்ல. எல்லா விஷயங்களையும் தீர அலசிப் பார்க்கும் தன்மையும், தேவைப்படும் போது வாதிட்டு வெற்றி பெறும் திறமையும் கொண்டவள்'தேவதையின் கண்ணில் திடீரென்று ஏதோ பட்டது. பெண் உருவத்தின் கன்னத்தைத் தொட சில்லென்று ஈரம்.
'அடடா, இங்கு பாருங்கள், உள்ளிருந்து ஏதோ ஈரம் கசிகிறதே''அது ஈரக் கசிவு அல்ல தேவதையே. அது தான் கண்ணீர்த்துளி''கண்ணீர் துளியா? அது எதற்காக?''அந்தக் கண்ணீர் தான் அவளுடைய மொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு. சுகம், துக்கம், ஏக்கம், ஏமாற்றம், தனிமை, துயரம், அன்பு, பெருமை, வெறுப்பு, அச்சம், உளைச்சல்இது போல் இன்னும் எத்தனை? எத்தனை? அத்தனையும் அந்தக் கண்ணீர்த்துளிதான் வெளிப்படுத்துகிறது'பெண்ணின் இயல்புகள் 'இறைவா, நீங்கள் உண்மையிலேயே மகாமேதை. ஒன்றைக் கூட விடாமல் ஒரு பெண்ணின் அத்தனை இயல்புகளையும் இப்படித் துல்லியமாக வெளிக்கொணர்ந்து விட்டீர்கள். உமது படைப்பில் பெண் ஒரு அட்சய பாத்திரம். பிரமிக்கத்தக்க அதிசயம்' என்றது தேவதை.'ஆம்! ஆம்! பெண் சக்தி மிகப் பெரியது. எத்தனை சுமைகள், எத்தனை துன்பங்கள் எத்தகைய உழைப்பு அத்தனையையும் தான் சுமந்து கொண்டு எவ்வளவு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பிறருக்கு கொடுக்கிறாள். அவளால் மட்டுமே அழ வேண்டிய நேரத்தில் கூட அருமையாகப் பாட முடியும். அவளால் மட்டுமே சந்தோஷம் பொங்கும் வேளையில் கண்ணீர் சிந்த முடியும்.மற்றவர்கள் சாப்பிடுவதற்காக, அவள் பட்டினி இருக்க முடியும். அவளால் மட்டுமே ஒரு சின்ன அணைப்பு, செல்லப் பேச்சு, ஒரு குட்டி முத்தம், கொடுத்து ரணமாகிப் போன உள்ளங்களுக்கு மருந்திட முடியும். அவளால் மட்டுமே உற்றார், உறவினர், தோழர், தோழியர், அனைவரது சக துக்கங்களிலும் பங்கு கொண்டு, சுகத்தை இரட்டிப்பாக்கி, துயரங்களைக் குறைக்க முடியும்.
தன் குழந்தைகளின் சாதனைகளுக்காக சகல சவுகரியங்களையும் விட்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்து, அவர்களை ஊக்கப்படுத்த அவளால் மட்டுந்தான் முடியும். ஐயோ! என்னால் இந்த இழப்பைத் தாங்க முடியவில்லையே! என்று உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் போதே, தன்னைத் திடப்படுத்திக் கொண்டு அவளால் மட்டுமே வாழ்க்கையை எதிர் நோக்க முடியும்'கடவுள், பெண்ணின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போக, தேவதை கடைசியாக ஒன்று கேட்டது.'ஆமாம், இவளிடம் குறை எதுவுமே இல்லையா?' என்று.
'இறைவன் சொன்னார் உலகையே சுழலச் செய்யும் ஆற்றல் படைத்த, வாழ்க்கையின் ஆதார சுருதியாக விளங்கும் இப்பெண்ணிடத்திலும் ஒரு குறையுண்டு' அது தான் என்ன?' ஆவலுடன் தேவதை வினவ, ஆண்டவன் சிரித்துக் கொண்டே சொன்னார். 'தன்னிடமிருக்கும் அற்புத ஆற்றலை அவள் அடிக்கடி மறந்து விடுகிறாள்'தேவதை திகைத்துச் சொன்னது. 'இவ்வளவு நாளும் இது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே'என்றோ, எப்பொழுதோ, எதிலோ நான் ரசித்துப் படித்த அற்புதமான படைப்பு இது.பெண்மையை போற்றுவோம் 'நாளும் கோளும் நல்லோருக்கு இல்லை. ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை என்பது போல் உழைப்பின் மகத்துவத்தை அறியாதவள். ஹாலுக்கும் சமையற்கட்டுக்கும் ரன் எடுத்து, ரன் எடுத்து, அவுட் ஆகாத ஆயுள் கைதி இவள். ஒரு காலத்தில் உயர்வாகக் கருதப்பட்டவள். இன்று உயர்விழந்து, உணர்விழந்து, சமத்துவம் இழந்து கருவை இழந்து, தன் மதிப்பை இழந்து, சில நேரங்களில், சில இடங்களில் தன்மானத்தையும் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றாள்.''பெண்ணுக்குள் ஞானத்தை (அறிவு) வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்! - மண்ணுக்குள்ளே சில மூடர் நல் மாதர் அறிவைக் கெடுத்தனரே” என்றார் பாரதியார்.அறிவும் ஆற்றலும் அனைவருக்கும் சமம். எந்த நாடு பெண்மையைப் போற்றுகின்றதோ அதுவே, நாடு முன்னேறுவதற்கு முதற்படி. ஒற்றைக் குடும்பந்தனில் பொருள் ஓங்க (சம்பாதித்தல்) வைப்பவன் தந்தை மற்றைய கருமங்கள் (வேலை) செய்து மனை (வீடு) வளர்த்திடச் செய்பவள் அன்னை.
ஓர் ஊர்த் தகப்பன், ஒரு தாய்க்குச் சமம் என்பார்கள். ஒரு குடும்பம், ஒழுக்க நெறியில் உயர்வடையக் காரணம் பெண் தான். உலக இயக்கமே பெண் இல்லை என்றால் இயங்காது. பயமாகத் தோன்றுவதையும் நயமாக மாற்றுகின்ற திறமை பெற்றவள். உழைப்பின் உச்சத்தே நின்று நஷ்டமென்று கீழே விழுந்தாலும், ஊன்று கோலாக நின்று உயர்த்திப் பிடிப்பவள்.பெண் தீயினுள் தென்றலாக, பூவினுள் மணமாக, சொல்லினுள் மென்மையாக இருப்பவள். அடுநோய்கள் பலகூடி உடல் மீது தொடுத்தாலும் உளையாத நெஞ்சம் (மனம்) உடையவள். பசியோடு இருந்தாலும் பாசப் பிணைப்போடு இருப்பவள், பெண்ணே! அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளாக இருப்பவளும் நீயே. உன்னைப் பற்றி, உன் திறமையைப் (அறிவு) பற்றிப் புரிந்து கொள். எதற்கும் அச்சம் கொள்ளாதே. உலகம் வியக்கும்படி உன்னால் நிறைய சாதிக்க முடியும். இது நிதர்சனமான உண்மை.- முனைவர் கெ.செல்லத்தாய்இணைப்பேராசிரியர், எஸ்.பி.கே. கல்லுாரி,அருப்புக்கோட்டை. 94420 61060

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyagarajan Srimbhs - Coimbatore,இந்தியா
05-ஜூன்-201605:30:48 IST Report Abuse
Thiyagarajan Srimbhs ஆணின் வெற்றிக்குபின் பெண்.வரி வடிவத்தில் சின்ன தாய் எங்கள் குடும்பத்தில் ஒருவர்
Rate this:
Share this comment
Cancel
H Mahadevan - Chennai,இந்தியா
25-மார்-201616:23:00 IST Report Abuse
H Mahadevan Dear Dr.Sellathai What a fantastic article on Feminine Really great You have explained in so well about women's talent & in born attitudes / qualities etc. Looking forward to have more such article from you. God Bless you.
Rate this:
Share this comment
Cancel
Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா
25-மார்-201607:36:31 IST Report Abuse
Jagath Venkatesan சத்திய வாக்கு ...பெண்.... பிரம்மன் வடித்தெடுத்த உடலில்... இதயம் என்ற மென்மை கசிவினை தெரியாமல் மறைத்து வைத்துள்ளான். ஆனாலும் சில நேரங்களில் அது கண்ணீராக பிரவாகம் பெருக்கெடுத்து விடுகிறது ...பல போராட்டங்களுக்கும் தடைகளுக்கும் இடையேயும் பெண் ஜெயிக்க பிறந்தவள் ... என்பது தெரிய வரும் ..பெண் இல்லாமல் எதுவும் அசையாது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X