டின்சுகியா:''அசாம் மாநில தேர்தலில் ஊழல், வறுமையை எதிர்த்து போட்டியிடுகிறோம்; வளர்ச்சி, துரித வளர்ச்சி, எல்லா மட்டத்திலும் வளர்ச்சி ஆகிய மூன்று திட்டங்ளை செயல்படுத்துவதே எங்கள் நோக்கம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அசாம் மாநிலத்தில், காங்., கட்சியை சேர்ந்த தருண் கோகோய் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், தற்போதைய சட்டசபை பதவிக்காலம், ஜூன், 5ல் முடிகிறது. இதையடுத்து, ஏப்ரல் 5, 11 என, இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அசாம் மாநிலத்தின் டின்சுகியா மாவட்டத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், பா.ஜ.,வின் பிரசாரத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
இந்த பிரம்மாண்ட கூட்டத்தில் அவர் பேசியதாவது:வளர்ச்சி, துரித வளர்ச்சி, எல்லா மட்டத்திலும் வளர்ச்சி ஆகிய மூன்று அம்ச கொள்கைகளுடன், அசாம் தேர்தலில் களமிறங்கி உள்ளோம்.
முந்தைய அரசுகளை ஒப்பிடுகையில், தற்போதைய மத்திய அரசு, அசாம் மாநிலத்தின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக, பல மடங்கு அதிகஅளவில் நிதி ஒதுக்கி
உள்ளது.என்னை விட மூத்த தலைவர்களுக்கு மரியாதை
செலுத்துவதை வழக்கமாக
வைத்துள்ளேன். எனக்கு மூத்தவர் என்ற வகையில், அசாம் முதல்வருடன் நான்
போட்டியிடவில்லை;மாறாக, ஊழல், வறுமையை எதிர்த்து போட்டியிடுகிறேன். அசாமில்
முதல்வர் வேட்பாளராக, பா.ஜ., களமிறக்கியுள்ள சர்பானந்தா சோனோவால், மத்திய
அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்; மிகச்சிறந்த
நிர்வாகி.
அசாம் மாநில தேர்தலில், சர்பானந்தாவென்று முதல்வரானால் அது, மத்திய அரசுக்கு மிகப்பெரும் இழப்பாக இருக்கும்; தனிப்பட்ட முறையில் எனக்கும் இழப்பே. சர்பானந்தா, மிக எளிமையான, திறமையான அமைச்சர்களில் ஒருவர். நாடு சுதந்திரம் அடைந்த போது, செழிப்பான ஐந்து மாநிலங்களில் ஒன்றாக அசாம் திகழ்ந்தது. தற்போது, வளர்ச்சி குன்றிய, கடைசி ஐந்து மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இதற்கு, அடுத்தடுத்து அமைந்த காங்., அரசுகளே காரணம்.
சர்பானந்தாவுக்கு, ஐந்து ஆண்டு கால ஆட்சியை மக்கள் அளிக்க வேண்டும். பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து, பல்வேறு கஷ்டங்களில் இருந்து அசாமை மீட்டெடுக்கும். என் ஆரம்ப காலத்தில், மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க, அசாம் மாநிலத்தில் விளையும் தேயிலையில் தயாராகும் தேநீரைத் தான் விற்று வந்தேன். இதனால் எனக்கும், அசாம் மாநில மக்களுக்கும் சிறப்பான பிணைப்பு எப்போதும் நீடித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., கூட்டணியில் 4 கட்சிகள்:அசாம் மாநில சட்டசபையில், 126
உறுப்பினர்கள் உள்ளனர். காங்., தலைவராக, 1976 முதல் பதவி வகித்து வரும்
தருண் கோகோய், 79, முதல்வராக உள்ளார்கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில்
காங்., 78; பா.ஜ., 5; ஏ.ஐ.யு.டி.எப்., 18 இடங்களில் வென்றன தற்போதைய தேர்தலில், நான்கு கட்சிகளுடன் பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது
பா.ஜ., 84 தொகுதிகளில் போட்டியிடுகிறது; கூட்டணி கட்சிகளான, அசாம் கனபரிஷத்துக்கு, 24; பி.பி.எப்.,புக்கு, 16; ரபா ஜதியா ஐக்கிய மஞ்சுக்கு, 1; திவா ஜதியா ஐக்கிய மஞ்சுக்கு, 1 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது ஆளுங்கட்சியான காங்., 122 தொகுதி களில் போட்டியிடுகிறது. காங்., கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய மக்கள் கட்சி, நான்கு இடங்களில் களமிறங்குகிறது.
ஹிந்துக்கள் 61 சதவீதம்:கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அசாம் மக்கள் தொகை, மூன்று கோடி. இதில், ஹிந்துக்கள், 61.5 சதவீதம். முஸ்லிம்கள், 34 சதவீதமும், கிறிஸ்தவர்கள், 3.7 சதவீதமும் உள்ளனர். அசாம் மாநிலத்தில், மலைவாழ் மக்கள், 13 சதவீதம் பேர். இவர்களில், 40 சதவீதம் பேர், போடோ இனத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தமுள்ள, 32 மாவட்டங்களில் ஒன்பதில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (17)
Reply
Reply
Reply