பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜப்பானில் ஒரு வேளாண்மை புரட்சி

புவியியல் பார்வையில், பசிபிக் கடலின் மிக ஆபத்தான பகுதியில் ஒரு சிறு நிலக்கீற்று தான் ஜப்பான். அங்கு எந்நேரமும் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் நிகழும் அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால், பல்வேறு சோகங்களையும் ஜப்பான் சந்தித்துவிட்டது. ஆனால், மின்னணு பொருட்கள், சிறிய ரக கார்கள் என, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு தொழில்நுட்பத்தில் ஜப்பான் முன்னோடியாக இருந்து உள்ளது.
அதே போல், தற்போது தாவர தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் உலகத்திற்கே வழிகாட்டி வருகிறது ஜப்பான். ஜப்பானில் கடும் இட நெருக்கடி, பாரம்பரிய சிறு வயல்களை ஒருங்கிணைப்பதில் பிரச்னைகள், மாறி விட்ட உணவு பழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால், தனக்கு தேவையான உணவில் பெரும் பகுதியை ஜப்பான் இறக்குமதி செய்கிறது. இதற்கு ஒரு தீர்வாகத்தான், தாவர தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது.
தாவர தொழிற்சாலை என்றால் என்ன?
வேளாண்மையில் இழப்புகளுக்கு முக்கிய காரணங்கள் வானிலையும், நோய்/பூச்சி தாக்குதல்களும் தான். இவற்றை தவிர்க்க, சூழல் கட்டுப்படுத்தப்பட்ட வேளாண்மை குறித்து, உலகில் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதன் பலன் தான், தற்போது கொய்மலர் சாகுபடிக்கு, தமிழகத்தில் பயன்படுத்தப்படும் பசுமைக்குடில்கள்.

சூழல் கட்டுப்படுத்தப்பட்ட வேளாண்மையில், மண், நீர், காற்று, பூச்சிகள் என, கட்டுப்படுத்தக் கூடிய அனைத்து விஷயங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. தாவர தொழிற்சாலைகள் - ஆங்கிலத்தில் 'பிளான்ட் பேக்டரி' - என்பவை, அந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு உச்சகட்ட பரிமாணம்.இவற்றில் பிரதானமாக, பசுமைக்குடில் மற்றும், 'ஹைட்ரோபோனிக்ஸ்' எனப்படும், மண்ணில்லா பயிர் வளர்ப்பு முறை பல்வேறு வகைகளில் கலந்து வழங்கப்படுகின்றன.
சிபா பல்கலைக்கழகம்:ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து, ஒரு மணிநேர பயண துாரத்தில் உள்ளது சிபா என்ற நகரம். அங்குள்ள சிபா பல்கலைக்கழகம் தான், ஆசியாவிலேயே, தாவர தொழிற்சாலை ஆராய்ச்சியில் முன்னிலையில் உள்ளது.

அங்கு, தாவர தொழிற்சாலை ஆராய்ச்சியில் ஜாம்பவான் என, உலகெங்கும் அறியப்படும் டாக்டர் கோசாய் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, தாவர தொழிற்சாலை தொழிலின் மையமாக, சிபா நகரே மாறி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங் களை மேம்படுத்தும் முயற்சியில், அங்கு, 60 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றில், பிரபல மாகி வரும் இரண்டு நிறுவனங்கள், கிரான்பா மற்றும் மிராய். அவை இரண்டுமே, பசுமைக் குடில் தோட்டக்கலையில் உள்ள பல்வேறு கடினமான அம்சங்களை, புதிய தொழில்நுட்பங்கள் மூலம் எளிமையாக்கி, தங்கள் வாடிக்கையாளர்கள், வாங்கியவுடன் இயக்கும் அளவில், தங்கள் பசுமை குடில்களை உருவாக்கி உள்ளன.
கிரான்பா:''வேளாண்மையில் இருந்து நம்பத்தகுந்த வருமானம் கிடைத் தால் தான் இளைஞர் கள் வேளாண்மைக்கு வருவர் என, எனக்கு தோன்றியது. அதனால் தான், இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினேன்,'' என்று, ஜப்பான் டைம்ஸ் பத்திரிகைக்கு, கிரான்பா நிறுவனத்தின், நிறுவனர் டகாகி அபே பேட்டி அளித்து உள்ளார்.காற்றழுத்தத்தால் துாக்கி நிறுத்தப்பட்ட குவி மாடங்களில் (டோம்), கிட்டத்தட்ட முற்றிலும் தானியங்கி முறையில் பயிர் வளர்ப்பது தான், கிரான்பாவின் சிறப்பம்சம்.
ஒவ்வொரு குவிமாடமும், 10 ஆயிரம் சதுரடியில் உள்ளது. அதனுள், நீரை தேக்கி வைக்க, ஓட்டை வடை போன்ற ஒரு அமைப்பு. அதன் மேல் சூரியனின் கரங்கள் போல இரும்பு பட்டைகள். பட்டைகளுக்கு இடையே, வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில், 'லெட்யூஸ்' செடிகள். வடை அமைப்பின் மையப்பகுதியை ஒட்டி, 'லெட்யூஸ்' செடிகளின் நாற்றுகள், இரும்பு பட்டை களுக்குள் தினமும் வைக்கப்படுகின்றன. தினமும், ஒரு மணிநேரம், பட்டைகள் நகர்கின்றன. அவை நகர நகர, 'லெட்யூஸ்' செடிகள், வடை அமைப்பின் விளிம்பு பகுதியை நோக்கி தள்ளப் படுகின்றன.

முதிர்ச்சி அடைந்த, 'லெட்யூஸ்' செடிகள், விளிம்பு பகுதியில் இருந்து, எளிமையாக, அறுவடை செய்யப்படுகின்றன. தினமும், ஒவ்வொரு குவிமாடத்தில் இருந்தும், இப்படி, 400 'லெட்யூஸ்' செடிகள் அறுவடையாகி, சந்தைக்கு அனுப்பப்படுகின்றன.
கிரான்பா நிறுவனத்தின், வேளாண்மை பிரிவு பொது மேலாளர், முராயாமா டாகுமி, வர்த்தக பிரிவு மேலாளர் யமாடா அட்சுஷி, ஹடானோ

வில் உள்ள தாவர தொழிற் சாலையை நிர்வகித்து வரும் மேலாளர் கமிடா சடோரு ஆகியோரிடம், ஹடானோ தாவர தொழிற்சாலையில் கண்ட பேட்டியில் இருந்து...

உங்கள் தொழில்நுட்பத்தில் என்ன சிறப்பு; எந்த பிரச்னையை தீர்க்கிறது? 'லெட்யூஸ்' போன்ற பயிர்கள் வழக்கமாக, 'டீப் வாட்டர் கல்ச்சர்' எனப்படும் முறையில் வளர்க்கப் படுகின்றன. இதன்படி, மிதவைகளில், 'லெட்யூஸ்' நாற்றுகளை வைத்து, ஊட்டமிடப்பட்ட நீரில் மிதக்க விடுவர். வளர்ச்சியின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப,மிதவைகளை மாற்ற வேண்டும். இதற்கு நிறைய ஆட்கள் தேவை.எங்கள் தொழில்நுட்பத்தில், ஒருமுறை நாற்றை வைத்தால் போதும். தொட்டியின் அமைப்பும், இயந்திரங்களும் மற்றவற்றை பார்த்துக் கொள்ளும்.

அதேபோல், சாதாரண பசுமை குடில்களில், துாண்கள் தேவை. துாண்கள் இருப்பதால், பல இடங்களில் நிழல் விழும். அந்த இடங்களில் வளர்ச்சி சீராக இருக்காது. எங்களுடைய குவிமாட அமைப்பில் துாண்கள் கிடையாது. முற்றிலும் காற்றழுத்தத்தால் நிற்கிறது. அதனால், வெளிச்சம் ஒரு சீராக அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.

நீரிலேயே வளர்கின்ற பயிர்என்பதால், நீர் செலவு அதிகமாக இருக்குமா? ஒவ்வொருதொட்டியிலும், 20 ஆயிரம் லிட்டர் நீர் இருக்கும். எந்தநேரத்திலும் குடிலுக்குள், 14 ஆயிரம் 'லெட்யூஸ்'கள் இருக்கும். தினமும், 500 லிட்டர் நீர் வரை, செடிகள் எடுத்துக் கொள்ளும். மாதம் ஒருமுறை நீரை மாற்றுவோம்.மாதம், 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை, 'லெட்யூஸ்' களை ஒவ்வொரு குடிலில் இருந்தும் அறுவடை செய்கிறோம். அதன்படி பார்த்தால், அறுவடை யாகும் ஒவ்வொரு, 'லெட்யூஸ்' செடிக்கும், 1.30 - 1.60 லிட்டர் நீர் தான் தேவை.
'லெட்யூஸ்' மட்டும் தான் இதில் வளர்க்க முடியுமா? 'லெட்யூசிற்கு' ஜப்பான் சந்தை களில் நல்ல தேவை உள்ளது. அதனால் தான், 'லெட்யூஸ்' வளர்க்கிறோம். மேலும், 'சாலட்'டுக்கு தேவையான மற்ற வகை இலை பயிர்களையும் வளர்க்கலாம்.

'லெட்யூஸ்' உள்ளிட்ட நீங்கள்குறிப்பிடுபவை, குளிர் பிரதேச பயிர்கள். ஜப்பானில் தட்பவெப்பம் எப்படி? இந்த தொழில்நுட்பம், இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு பொருந்துமா? ஜப்பானில், குளிர் காலத்தில், வெப்பம், 0 டிகிரி செல்சியஸ் வரை குறையும். கோடைக்காலத் தில், 35 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். 'லெட்யூசுக்கு' தேவையான தட்பவெப்பம், 15 - 25 டிகிரி செல்சியஸ். அதாவது, 15 டிகிரி வரை வெப்பமேற்ற வேண்டி இருக்கும், அல்லது, 10 டிகிரி வரை வெப்பத்தை குறைக்க வேண்டி இருக்கும்.

இதற்காக எட்டு, 'ஏசி'க்களை பொருத்தி உள்ளோம். இவை இரண்டு வேலைகளையுமே செய்யும். இது தவிர, வெப்ப காலங்களில், 'ஏசி'யின் வேலைப் பளுவை குறைக்க, தினமும் 200 - 300 லிட்டர் குளிரூட்டப்பட்ட நீரை, தெளிப்பான் கருவிகள் மூலம் மென்மையாக பீய்ச்சி அடிக்கிறோம்.தற்போது, பாலைவன நாடான யு.ஏ.இ.,யிலும் இதை நிறுவி வருகிறோம். அதற்காக, வெப்பத்தை தாங்கக்கூடிய சிறப்பான பிளாஸ்டிக்கை, குவிமாடம் அமைப்பதற்கு தேர்ந்தெடுத்து உள்ளோம்.

எட்டு, 'ஏசி'க்கள், குளிரூட்டப்பட்ட நீர், சுற்றும் இரும்பு பட்டைகள்,குவிமாடத்திற்கான காற்றழுத்தம், இதற்கெல்லாம் ஏகப்பட்ட மின்சாரம்செலவாகுமே?
ஒரு ஆண்டுக்கு எங்களுடைய மொத்த மின் நுகர்வு, ஒரு லட்சம் யூனிட்.இந்தியாவில் பசுமைக் குடில்களை பார்த்திருக்கிறோம். அங்கும் குளிரூட்டப்பட்ட நீரை பயன்படுத்தி வெப்பத்தை குறைக்கின்றனர்.

ஆனால், பல இடங்களில், இதனால் ஈரப்பதம் அதிகரித்து, பயிர்களுக்கு பூஞ்சை தொடர்பான நோய்கள் வருகின்றன. அதை எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள்? ஈரப்பதம் அதிகமானால் குவிமாடத்தின் மேல் பகுதியை மட்டும் திறந்துவிட ஒரு சிறப்பு கருவியை உருவாக்கி இருக்கிறோம். அதுவும் தவிர, 'ஏசி'க்களும் ஈரப்பதத்தை குறைக்கின்றன.

மேல் பகுதியை திறந்தால், மழைக் காலங்களில் ஈரப்பதம் இயற்கையாகவே அதிகமாக இருக்கும் போது, மழைநீர் உள்ளே வந்துவிடாதா? குவிமாடமே காற்றழுத்தத்தால் தான் நிற்கிறது. அதனால், உள்ளே உள்ள காற்றழுத்தம், வெளியில் உள்ளதை விட அதிகமாக இருக்கும். அதுவே, மழை உள்ளே வராமல் தடுக்கிறது. வானிலை மோசமா கும் போது, உள்ளே உள்ள காற்றழுத்தத்தை, இயல்பை விடஅதிகமாக்குகிறோம்.
இத்தனையும் செலவழித்த பின், தொழில் லாபகரமாக இருக்குமா?
இந்த, 'லெட்யூசுக்கு' சந்தையில் பெரும் வரவேற்பு உள்ளது. ஏனெனில், இதன் வளர்ப்பு முறை மூலம், 'லெட்யூசில்' இயற்கையாக ஏற்படும் லேசான கசப்பு, வெகுவாக குறைகிறது. மேலும், அனைத்து, 'லெட்யூஸ்'களும், தொழிற் சாலை பொருள் போல, ஒரே தரத்தில், ஒரே அளவில்இருக்கும்.

ஆண்டுக்கு, 365 நாட்களும், தலா, 100 கிராம் எடையுள்ள, பூச்சி பாதிப்பில்லாத, 'லெட்யூசை' எங்களால் விற்க முடியும். முக்கியமாக இதில் நாங்கள் பூச்சி மருந்து பயன்படுத்துவதில்லை.தற்போது, 'டோக்யூ டிபார்ட்மென்ட் ஸ்டோர்' என்ற

Advertisement

நிறுவனம் எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்த 'லெட்யூஸ்'களை தன் கடைகளில் வியாபாரம் செய்து வருகிறது.

ஜப்பானில் இத்தகைய கடைகளில் விற்பது சாதாரண விஷயம் அல்ல. பல்வேறு தரக் கட்டுப்பாடு சோதனைகள் இருக்கும். அதே நேரம், இல்லத்தரசிகளை அழைத்து, அவர்களிடம் இருந்து தரத்தை பற்றி கருத்துகளை வாங்குவர். அதில் தேறவில்லை என்றால், நம் பொருளை வியாபாரம் செய்ய மாட்டார்கள்.
மிராய்:மண் இல்லா விவசாயம் ஒருபுறம் இருக்க, மிராய் நிறுவனம், சூரியனும் தேவையில்லை என்று முடிவு செய்து, முற்றிலும் எல்.இ.டி., விளக்குகளின் வெளிச்சத்தில் பயிர்களை வளர்க்கிறது. சிபா நகரம் அருகில் ஒரு தொழிற்பேட்டையில், 20 ஆயிரம் சதுரடியில், கிடங்கு போன்ற கட்டடம். அதில், பல அடுக்குகளில், கூரை உயரம் வரை, 'நியூட்ரியன்ட் பிலிம் டெக்னிக்' என்ற முறையில், எல்.இ.டி., விளக்கு வெளிச்சத்தில் வளர்க்கப்படும் 'லெட்யூஸ்'கள். 'நியூட்ரியன்ட் பிலிம் டெக்னிக்' முறையில், நீர் தேக்கி வைக்கப்படாமல், குறைந்த அளவு சுழற்சியிலேயே வைக்கப்படுகிறது.
இந்த தாவர தொழிற்சாலையில் இருந்து தினமும், 10 ஆயிரம் 'லெட்யூஸ்' செடிகளை, மிராய் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அதாவது, ஆண்டுக்கு, 36.50 லட்சம், 'லெட்யூஸ்' செடிகள். ஒரு சதுரடிக்கு, ஆண்டுக்கு, 182 'லெட்யூஸ்' செடிகள்!இந்த நிறுவனத்தின் தலைவர் யோஷியோ ஷீனா, வர்த்தக பிரிவு இயக்குனர் தோரு கோசாகி, விற்பனை பிரிவு மேலாளர் ஷோஹேய் யோஷிமோட்டோ ஆகியோரிடம் கண்ட பேட்டியில் இருந்து...

சூரியனை புறக்கணிப்பதால் என்ன லாபம்?
முதலில், சாதாரண முறையில் இப்படி அடுக்கடுக் காக பயிர்களை வளர்க்க முடியாது. அடுக்கடுக்காக வளர்ப்பதற்கு குறைந்த பரப்பளவு போதும். இதனால், பெரிய நகரங்களுக்கு அருகிலேயே அல்லது நகரங்களுக்குள்ளேயே, தாவர தொழிற்சாலைகளை அமைக்க முடியும். இரண்டாவது, எல்.இ.டி., வெளிச்சத்தில் வளரும் பயிர்கள், இயல்பை விட, குறைந்த நேரத்தி லேயே அறுவடைக்கு தயாராகிவிடும்.
அது எப்படி? 'லெட்யூஸ்' அறுவடைக்கு வருவதற்கு, வழக்கமாக, 40 - 45 நாட்களாகும். எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தினால், 35 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். இந்த, எல்.இ.டி.,யின் ஒளி அலைக்கற்றை, 'லெட்யூஸ்' போன்ற இலை பயிர்களுக்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதே போல், சூரிய வெளிச்சத்தை விட கூடுதல் நேரம், எல்.இ.டி., வெளிச்சத்தை கிடைக்கச் செய்யலாம். அதனால், பயிர் வளர்வதற்கு, ஒவ்வொரு நாளும், கூடுதல் நேரம் கிடைக்கிறது.
இந்தியாவிற்கு இந்த தொழில்நுட்பம் பொருந்துமா? மிக கடுமையான சூழலிலும், இந்த தொழில்நுட்பம் மூலம், பயிர்களை விளைவிக்கலாம். உலகத்தின் தென் முனையின் கடும் குளிரிலும் இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும். அங்குள்ள, ஜப்பானின் ஆராய்ச்சி நிலையத்தில், இதுபோன்ற ஒரு சிறிய தாவர தொழிற் சாலையை நிறுவி இருக்கிறோம். 10 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவில் இருந்து, அங்குள்ளோருக்கு தினமும், 10ல் இருந்து, 20 'லெட்யூஸ்' வரை கிடைக்கிறது.அதே போல், இதில் பல வகையான பயிர்களை வளர்க்கலாம். ஆனால், இதுவரை இந்திய பயிர்களை இதில் வளர்த்து, ஆராய்ச்சி செய்யவில்லை.
வேறு எங்கெல்லாம் உங்கள் தாவர தொழிற்சாலையை ஏற்றுமதி செய்துள்ளீர்கள்? இதுவரை, ஹாங்காங், ரஷ்யா மற்றும் மங்கோலியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம். வெப்ப பிரதேச மக்கள் தான், இதில் அதிக ஆர்வம் காட்டுவர் என, நினைத்தோம். ஆனால், குளிர் பிரதேச நாடுகளில் இருந்து தான் நிறைய நிறுவனங்கள் விசாரிக்கின்றன.
அவர்கள் நாடுகளில், இந்த பயிர்கள் இயற்கையாக வளரக்கூடும் என்றாலும், இதில் கிடைக்கும் தரத்திற்காக, அவர்கள் இந்த தொழில்நுட்பத்தை வாங்க விரும்புகின்றனர். எங்கள் தாவர தொழிற்சாலையில் சூழல் மிக நுட்பமாக கட்டுப்படுத்தப்படுவதால், இதில், பூச்சி, பிற நோய் தாக்குதலுக்கான வாய்ப்பு மிக குறைவு.சந்தையில் கிடைக்கும் மற்ற 'லெட்யூஸ்'களை விட, இவற்றில், பாதிக்குப் பாதி தான் பாக்டீரியா இருக்கும். பூச்சி மருந்தும் தேவைப்படாததால், தரமான, விஷமில்லாத காய் கிடைக்கிறது.

இதன் நீர் தேவை, மின்சார தேவை எவ்வளவு?
நீர் தேவை, சாதாரணமான திறந்த வயல் முறைகளைவிட, 100 மடங்கு குறைவு.பிரதானமாக எல்.இ.டி., விளக்குகளை இயக்குவதற்கு தான் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு தாவர தொழிற்சாலைக்கும் 3,00,000 யூனிட் செலவாகிறது. இதை உற்பத்தியோடு ஒப்பிட்டு பார்த்தால், ஒரு 'லெட்யூசுக்கு' ஒரு யூனிட் என்ற கணக்கு வரும்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
28-மார்-201600:41:31 IST Report Abuse

மஸ்தான் கனிமண்ணே இல்லாமல் வளரட்டும் அல்லது நீரே இல்லாமல் வளரட்டும் ஆனால் இயற்கை முறையில் வளரும் செடியில் கிடைக்கும் புரோட்டீன், நார்சத்து மற்றவையில் கிடைக்காது. ஜப்பானியர்கள் கடின உழைப்பாளிகள் ..நாடு முன்னேற்றம் .. நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-மார்-201609:31:57 IST Report Abuse

Kasimani Baskaranஜப்பானியர்களின் வெற்றியின் பின்னால் கடும் உழைப்பு மறைந்திருப்பது எத்தனை பேருக்கு புரியும்?

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-மார்-201608:57:06 IST Report Abuse

Natarajan Ramanathanஜப்பானில் கடும் இட நெருக்கடி இருந்தாலும் அந்த நாட்டின் நிலப்பரப்பில் 60 சதவீதம் காடுகளே. அதை ஒருபோதும் அவர்கள் அழிப்பதில்லை.

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X