''விஜயகாந்த் கூட்டணி நமத்துப் போன பட்டாசு; வெடிக்காது. பாவம், இந்த தேர்தலோட அவரும், அவரோட சேர்ந்து இருக்குற நாலு பேரும் காலியாகி விடுவாங்க,'' என, திரைப்பட நடிகையும்,
அ.தி.மு.க., பேச்சாளருமான ஆர்த்தி கூறினார்.
அவர் நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:அ.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் பிரிய வேண்டும் என்பதற்காகவே, மக்கள் நலக் கூட்டணியை, மறைமுகமாக உருவாக்கியதே, அ.தி.மு.க., தான் என கூறப்படுகிறதே...?நாலு பேருக்கு எங்குமே வாய்ப்பில்லை என்றதும், தாங்களாக கூடி ஒரு அணியை அமைத்து, அதை மக்கள் நலக் கூட்டணி என அறிவித்துக் கொண்டனர். அவர்களே போணியாகப் போவதில்லை. இதில், விஜயகாந்தையும் சேர்த்துக் கொண்டு
விட்டனர். கேட்கவும் வேண்டுமா? இவர்களை, அ.தி.மு.க., உருவாக்க வேண்டுமா?
எதிர்ப்பு ஓட்டுகள் என்பதே, அ.தி.மு.க., வுக்கு இல்லாத போது, அதை சிதறடிக்க, கூட்டணி வேறா...? காமெடி பண்ணாதீங்க சார்.
வழக்கமாக தேர்தல் என்றால், வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் என, முன்னணியில் இருக்கும், அ.தி.மு.க., தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னும், காலம் கடத்துவது ஏன்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தலுக்கு, 72 நாட்கள் இருந்தன. இப்போது கூட, இன்னும் நாட்கள் உள்ளன. அதனால், விரைந்து எல்லாவற்றையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் இல்லாமல், எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதை, அம்மாவை விட யாரும் சிறப்பாக கணக்கிட்டு, செய்து விட முடியாது. அவர், எல்லாவற்றுக்கும் திட்டங்களை தீட்டி, அதன்படி செயல்பட்டு வருகிறார்.
மூத்த அமைச்சர்கள் சிலர், வீட்டு சிறையில் இருப்பதாகவும்; அது தொடர்பான விளக்கம் வேண்டும் என்றும், தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்களும் கோரிக்கை விடுத்தனரே...?அவர் சொல்வது போல எதுவுமே இல்லை. பாவம் கருணாநிதி, ஆண்டியாகி விட்டார். அவர் போல, எதிர்க்கட்சியினர் சிலரை வைத்து, மடம் கட்டப் பார்க்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில், மனித நேய மக்கள் கட்சி, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தது, கூட்டணிக்கு பெரும் பலமாக கருதப்பட்டது.
தற்போது அக்கட்சி, தி.மு.க., கூட்டணியில் உள்ளதே?
பலமா... பலவீனமா...?
அவர்களுக்கு பலவீனம் தான். பாவம், போட்டியிடும் இடங்களில், 'டிபாசிட்' போய்விடும்.
உங்கள் கணவர், பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்யும் போது, நீங்கள் அ.தி.மு.க.,வுக்காக பிரசாரம் செய்கிறீர்கள். வீட்டில் கருத்து மோதல் வருமா?
அவர், பா.ஜ., பக்கம் விருப்பமாக இருந்தார்; போனார். ஆனால், அவருக்கு அக்கட்சியின் செயல்பாடுகளில் சில வருத்தங்கள் இருப்பது தெரிகிறது. இப்போது, அம்மாவின் செயல்பாடுகள் அவருக்கு புரிகின்றன. விரைவில் அவர் அ.தி.மு.க., பக்கம் வருவார். அப்போது, அ.தி.மு.க.,வில் நான் தான் அவருக்கு சீனியர்.
மோடி மாயையை நம்பி, பா.ஜ., பக்கம் போன அவர், இம்முறை பிரசாரத்துக்கு செல்வது சிரமம் என்றே நினைக்கிறேன். மோடியால் இந்தியாவிற்கு எந்த நன்மையும் விளையவில்லை. அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் போய் வந்ததில், அவருக்கு தான் நன்மைகள் விளைந்திருக்கும். நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை.
ஐந்தாண்டு கால ஆட்சியில், இலவச திட்டங்கள் தவிர, வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை என, எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனரே?
வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லாமலா, அமெரிக்காவில் இருந்து ஹிலாரி கிளின்டன் தமிழகம் வந்து, அம்மாவை பாராட்டி சென்றார்! இங்கிருக்கும் திட்டங்களை, மற்ற மாநிலங்களும் ஏன், உலக நாடுகளும் பின்பற்ற வேண்டும் என, அவர் கூறியிருப்பது எதற்காக? அம்மா ஆட்சியில், இலவச திட்டங்களும் உண்டு; வளர்ச்சி திட்டங்களும் உண்டு.
தென்மாவட்டங்களில் ஒரு தொழிற்சாலை கூட துவங்கவில்லையே?
ஐந்தாண்டுகள் முடிந்து விட்டன. தென் மாவட்டங்களுக்காக, நிறைய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அம்மா மீண்டும் ஆட்சிக்கு வருவார். அப்போது, இந்த குறைகளும் தீர்க்கப்பட்டு விடும்.
அ.தி.மு.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கும் என்ற நிலை, இப்போது
மாறி விட்டதே?
இதெல்லாம் எதிர்க்கட்சியினர், எதையாவது சொல்லணும்னு பொய்யா சொல்றது. அழகிரிக்கு பயந்துட்டு, தி.மு.க., ஆட்சி காலத்துலயே மதுரை பக்கம் போகாம இருந்த ஸ்டாலின், இன்னிக்கு, அந்த பக்கம் தைரியமா போய் திரும்புறார்னா, அதுக்கு காரணமே எங்கம்மா தான். இது ஒண்ணே போதும்; தமிழக சட்டம் - ஒழுங்கு சரியாக தான் இருக்கு என்பதற்கு.
இதுவரை இல்லாத அளவுக்கு, அ.தி.மு.க., தரப்பில், 49 எம்.பி.,க்கள் இருந்தும், மத்திய
அரசிடம் இருந்து, தமிழகத்துக்கு ரயில்வே திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை பெற முடியவில்லையே ஏன்?
அ.தி.மு.க., தரப்பில், தமிழகத்துக்கு என்னென்ன தேவையோ, அவற்றை எல்லாம் எம்.பி.,க்கள் கேட்கத் தான் செஞ்சாங்க. பார்லிமென்டிலும்
தமிழக நலன்களுக்காக, நிறைய விஷயங்களை பேசி, வலியுறுத்தினாங்க.
ஆனால், தமிழகத்தின் நலன்களை தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு,
தமிழகத்தை பல வழிகளிலும் வஞ்சித்தது. ஆனாலும், அவர்கள் நிதியை எதிர்பார்க்காமலேயே, அம்மா, பல்வேறு திட்டங்களையும் தீட்டி, மக்களுக்கு தொடர்ந்து நன்மைகளை செய்து வருகிறார்.
எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்தை,சட்டசபையில் செயல்படவே விடவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து...?
அவரு எங்கே சபைக்கு வந்தாரு? வந்தாலும் நாகரிகமா நடந்துக்கிட்டாரா? நாக்கை துருத்தி, வேட்டியை மடிச்சிக்கிட்டு, சினிமா சண்டை சூட்டிங் போல ரணகளப்படுத்தினாரு. இதெல்லாம், சபை நடைமுறையா? சபை நாகரிகம் தெரியாதவரை, எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கினது தான் தப்பு. ஆனா, அவரு வெளில போய், சபையில என்னை பேச விடலைன்னு கூவினா, யார் ஏத்துப்பாங்க?
கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என, புதிய கூட்டணியை அமைத்துள்ளனரே...
அது, அ.தி.மு.க.,வுக்கு பெரும் சவாலாக இருக்குமா?
முதல்ல விஜயகாந்தை, நாலு வார்த்தை புரியும்படி பேசச் சொல்லுங்க; ஸ்டெடியா ரெண்டு நிமிஷம் ஒரு இடத்துல நிக்க சொல்லுங்க. இது கூட முடியாத அவரு தலைமையில கூட்டணியா...? சிரிப்பு தான் வருது. நமத்துப் போன பட்டாசு. வெடிக்காது. பாவம், இந்த தேர்தலோட அவரும், அவரோட சேர்ந்து இருக்குற நாலு பேரும் காலியாகி விடுவாங்க.
தி.மு.க., ஊழல் - அ.தி.மு.க., ஊழல் எது பெரிது?
அம்மா மீது போடப்பட்டது பொய் வழக்கு. அதனால் தான், அவர் பெங்களூரு உயர் நீதிமன்ற
உத்தரவு மூலம் குற்றமற்றவர் என, வெளிவந்து விட்டார். ஆனால், '2 ஜி' ஊழல் அப்படி அல்ல. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, மக்கள் வரிப்பணத்தை சுரண்டி விட்டனர்.
கூட்டணிக்கு வரவழைத்து, என்னை
கருவேப்பிலையாக பயன்படுத்தி விட்டனர். கூட்டணி தர்மத்தை ஜெயலலிதா மீறிவிட்டார் என்றெல்லாம் விமர்சனம் செய்த சரத்குமாரை, மீண்டும் சேர்த்தது ஏன்?
அவசரப்பட்டிருக்கக் கூடாது. வெளியேறினார். பின், தவறை உணர்ந்து திரும்பி வந்துவிட்டார். அம்மாவுக்கு மன்னிக்கும் குணம் அதிகம் என்பதால், மன்னித்து விட்டார். அவர், பா.ஜ., பக்கம்
போனதெல்லாம் தவறு தான்.
அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதே...?
பதவி ஆசை தான் இதற்கெல்லாம் காரணம். எப்படியாவது, அம்மாவை மக்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர்; அது முடியாது.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், உங்களோடு கூட்டணியில் இருந்த கட்சிகள் எதுவும் தற்போது, உங்கள் கூட்டணியில் இல்லையே...?
அவர்கள் போனதால், எந்த நஷ்டமும் இல்லை. தமிழக மக்கள் தேவை அறிந்து, அம்மா எல்லாவற்றையும் செய்து கொடுத்துள்ளார். அதனால் தன்னந்தனியாகவே, அ.தி.மு.க., தேர்தலை எதிர்கொள்ளும். அம்மாவை நம்பி இருப்பவர்களை அவர், ஒருநாளும் கைவிட்டதில்லை.
பிரசாரத்துக்கு எப்படி தயாராவீர்கள்?
மற்றவர்களை போல சொல்வதற்கு எங்களிடம் விவரங்கள் இல்லாவிட்டால் தான் நாங்கள், அதற்கெல்லாம் தயாராக வேண்டும். ஐந்தாண்டு கால ஆட்சியில், கருவறை முதல் கல்லறை வரை, எல்லாருக்கும் எல்லா திட்டங்களையும் தீட்டி, அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தியாச்சு. அதை சொன்னாலே போதும். மக்கள் எங்களுக்குத்தான் ஓட்டளிப்பர்.
யாரை தாக்கிப் பேச, அதிகம் பிடிக்கும்?
நாகரிகமான அரசியலை தான் அம்மா எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அதனால், மேடை நாகரிகத்துடன், எங்கள் சாதனைகள், செயல்பாடுகளைத் தான் சொல்ல ஆசைப்படுகிறோம். அதைத் தான் செய்கிறோம். தாக்கிப் பேசி, கீழ்த்தரமாக நடந்து கொள்வதற்கென்று, எதிர்க்கட்சிகளில் ஆட்கள் இருக்கின்றனர்.
தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதா?
நான் ரொம்பவும் கத்துக்குட்டி. அரசியலில் செய்ய வேண்டியதும்; அடைய வேண்டிய துாரமும் அதிகமாக உள்ளது. நிறைய செய்து முடித்ததும், போட்டியிட்டு, மக்கள் பிரதிநிதியாவேன். அதற்கு அம்மா ஆசிர்வாதம் வேண்டும். மற்றபடி, அம்மா அழைத்து போட்டியிடு என்று உத்தரவிட்டால், தயங்க மாட்டேன்.
அ.தி.மு.க.,வில் இணைந்தது ஏன்?நான் துணிச்சலான பெண். நன்கு படிக்க வைத்து, ஒழுக்கமான பெண்ணாக, என்னை வளர்த்தனர். என் அப்பா - அம்மா இருவரும், எம்.ஜி.ஆர்., மற்றும் அம்மா மீது பற்றுதலும், பாசமும் கொண்டவர்கள். என் குடும்பமே, அ.தி.மு.க., தான். அதனால், நான் அரசியலில் ஈடுபட விரும்பியதும், அம்மாவை சந்திக்க நேரம் கேட்டேன்; கிடைத்தது. சந்தித்தேன். கட்சியில் இணைத்துக் கொண்டார்.
முதன் முதலில், ஜெயலலிதாவை சந்தித்தபோது, உங்களிடம் அவர் கூறியது என்ன?
முதலில் அவரை சந்தித்தபோது, 'என் மகளை உங்களை நம்பி ஒப்படைக்கிறேன்' என, என் அம்மா சொன்னார். அப்போது, 'நான் இருக்கிறேன்; பார்த்துக் கொள்கிறேன்' என, என்னை அருகில் அழைத்து, ஆசி வழங்கினார். அது யாருக்கும் கிடைக்காதது.
சினிமாவிலும் பிசியாக இருக்கும்போது, அரசியலில் நுழைந்தது ஏன்?
எனக்கு முழு நேரத் தொழில் அரசியல் அல்ல. சினிமாதான் முழு நேர தொழில். நடிப்பு தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சினிமாவில், நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. தேர்தல் நேரத்தில் தான், எனக்கு நிறைய அரசியல் பேச வாய்ப்பு.
பிரசாரத்தில் மறக்க முடியாத அனுபவம்?
ஒரு முறை, தேனி மாவட்டத்திற்கு சூட்டிங்கிற்காக சென்றோம். வனப்பகுதி அது. 'கேரவன்' செல்லாத பகுதி. அங்கு இருந்த வீட்டின் ஓரத்தில் நிழலுக்காக ஒதுங்கினோம். வீட்டில் இருந்த முதியவர், எங்களை துரத்தினார். ஆனால், அவரது மனைவி என்னை ஆர்த்தி என அறிந்து, வீட்டுக்குள் அழைத்து சென்றார். உள்ளே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் மாட்டப்பட்டிருந்தன. நானும், அ.தி.மு.க.,தான் என அறிந்ததும், என்னை அவர்கள் வீட்டில் உபசரித்தனர். இப்படி, பல சம்பவங்கள் நடந்தன.
எந்த அளவுக்கு கடவுளை நம்புவீர்கள்?ஓரளவுக்குத்தான் நம்புவேன். பெற்றோர், அம்மா ஆகியோர் தான் எனக்கு கடவுள். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என, மற்ற கடவுள்களை வணங்குவேன்.டிவி - ஆர்த்தி, சினிமா - ஆர்த்தி, அரசியல் - ஆர்த்தி, எந்த ஆர்த்தியை ஆராதிப்பீர்கள்?சினிமா ஆர்த்தி தான் எனக்கு பிடிக்கும். அதில் தான், என் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த முடிகிறது. என் திறமையை முழுமையாக, தமிழ் சினிமா இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு. இரண்டாவதாக, அரசியல் - ஆர்த்தியை பிடிக்கும்.
இதன்மூலம் நிறைய அளவில் மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டுவதால்.
ஜெயலலிதா - கருணாநிதி பிடித்தது என்ன?அம்மாவின் எல்லா குணங்களும் எனக்கு பிடிக்கும். கலைஞர் ஐயாவிடம், அம்மாவிடம் பிடித்தது என்ன என்று கேட்டபோது, 'ஜெயலலிதாவின் துணிச்சல் எனக்கு பிடிக்கும்' என, கூறியிருந்தார். எதிர் நிலையில் இருந்தாலும், மறைக்காமல் தான் நினைப்பதை கூறிய அவரது பேச்சு பிடிக்கும்.
குஷ்பு - நக்மாவை மேடைப் பேச்சில் எப்படி சமாளிப்பீர்கள்?
அவர்களோடு நான் ஏற்கனவே நடித்திருக்கிறேன். அந்த அக்காக்களுக்கு மேடை பேச்சில் சிரமம் இருக்கும். காரணம், அவர்களால் பொய் சொல்லித் தான் மேடையில் பேச முடியும். ஆனால், எனக்கு அப்படி அல்ல. அம்மாவின் சாதனைகளை மிக எளிதாக பேசி, மக்களிடம் கொண்டு செல்வேன். தமிழகத்தை சேர்ந்த நான், மிக அழகாக தமிழில் பேசி, மக்களை ஈர்ப்பேன். ஆனால், அவர்களுக்கு தமிழும் தகராறு என்பதால், சிரமப்படுவர். அதனால், என்னிடம் அவர்கள் தான் சிரமப்படுவர்.
பயோ - டேட்டா
பெயர் : ஆர்த்தி
வயது : 28
கட்சி : அ.தி.மு.க.,
பதவி : நட்சத்திர பேச்சாளர்
படிப்பு : எம்.பி.ஏ., - பி.எச்டி.,
சொந்த ஊர் :கோவை
- நமது சிறப்பு நிருபர் -