என் பார்வை:வையத்தலைமை கொள்! | Dinamalar

என் பார்வை:வையத்தலைமை கொள்!

Added : மார் 28, 2016 | கருத்துகள் (1)
என் பார்வை

பெரும்பாலான நேரங்களில் நம்மைப்பற்றி நாம் நினைக்கும்போதே, தாழ்வு மனப்பான்மை மனதிலே குடியேறிவிடுகிறது. இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் யாரெனக் கேட்டால், தயங்காமல் உங்களை நீங்களே குறிப்பிட்டுச் சொல்லுங்கள். இந்த பண்புதான் உங்களை வையத்திற்கே தலைமையேற்க அழைத்துச் செல்லும்.
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணி நேரமும் நம்மைப்பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதிலே ஆர்வம் காட்டுகிறோம். அந்த ஆர்வத்தில் ஒரு சிறுபகுதியை, நம்முடைய வளர்ச்சியிலும் நம்முடைய சுயத்திலும், காட்ட ஆரம்பித்தாலே உலகம் நம்மிடம் வர ஆரம்பிக்கும்.இந்த உலகினை தன் வசப்படுத்திய வரலாற்று நாயகர்கள் அனைவருமே தன்னை நம்பியவர்களாக இருந்தனர். பிறருடைய அங்கீகாரத்திற்காக நாம் செய்யும் செயல்கள், அவர்களுடைய அங்கீகாரம் கிடைக்காத தருணத்தில் அழகு இழந்து போய்விடும். நமது மனநிறைவோடும் நம்பிக்கையோடும் செய்யும் செயல்கள், உலகம் உள்ளளவும் அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றுத் தரும். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்... நம்மீதான நம்பிக்கையையும் முயற்சியையும் அதிகப்படுத்த வேண்டும்.
'தோல்விகள் அதிகம் வருகிறதா?வாழ்த்துக்கள்...நீங்கள் வெற்றிக்குமிக அருகிலே இருக்கிறீர்கள்' (சதா பாரதி)என்ற வாசகங்களை மனதிலே பதியம் போட்டு வையுங்கள்.தோல்வியை சந்திக்காதவர்கள் தோல்விகளைச் சந்திக்காத மனிதர்கள் யாருமில்லை. ஆனால் அந்தத் தோல்விகளைக் கண்டு கலங்கி நிற்கும்போதுதான் அது தோல்வியாக உறுதிசெய்யப்படுகிறது. மாறாக அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு வெற்றிக்கான பயணத்தைத் தொடர ஆரம்பிக்கும் போது, வெற்றியும் நம்முடைய விலாசத்தை விசாரிக்க ஆரம்பிக்கும்.
உங்களைவிட மதிப்புவாய்ந்தவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அடுத்தவரை 'காப்பி' அடித்து அரைநிமிடம் கூட நம்மால் வாழ்ந்துவிட முடியாது. மாற்றங்களை உங்களிடம் இருந்து தொடங்குங்கள்.உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களைப் போல வாழ்ந்திட முடியாது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். சிறு குழந்தைகளைப் பாருங்கள்... எவ்வளவு மகிழ்ச்சியாக வளர்கிறது. அந்த குழந்தைகளுக்கும் பல்வேறு சாயங்களைப் பூசி அவர்களின் வண்ணங்களை மாற்றியது நாம்தான். நாம் செய்ய ஆசைப்பட்டு இயலாமல் போனவற்றை எல்லாம் நம் குழந்தைகள் மீது திணித்து, நம் நகலாக மாற்ற முயற்சிக்கிறோம். அவர்களின் அசல் தன்மையினை அழித்து விடுகிறோம்.
குணமே அடையாளம் :“நரேந்திரா.. நீ சொல்லும் எதையும் கேட்கவே மாட்டாயா? நீ கொண்டு போகும் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கே கொடுத்து விட்டால் உனக்காக நீ எதை வைத்துக்கொள்ளப் போகிறாய்,''என நரேந்திரனின் தாயார் சத்தமிட நரேந்திரனோ, “எனக்காக இந்த உலகமே இருக்கிறது'' என்றானாம். அடுத்தவருக்காக அதிகமாக உதவி செய்கிறான் என்பதால் அவருடைய பெற்றோர் அவரை ஒருநாள் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டார்கள். நரேந்திரன் அசராமல் ஜன்னல் வழியாக ஆடைகளை வீசி ஏழைகளுக்கு எறிந்தான். அந்த நரேந்திரன் தான் பின்னாளில் விஸ்வரூபம் எடுத்த விவேகானந்தர். சிறு வயதில் இருந்த அவரது குணமே அவரின் அடையாளமாக மாறியது. அவரது குருவான ராமகிருஷ்ணர் காட்டிய வழியில் வாழ்ந்தவர் விவேகானந்தர்.நம்மில் எத்தனை பேர் இவ்வாறு இருக்கிறோம் என மனசாட்சியோடு எண்ணிப் பார்ப்போம். குப்பையைக் கொட்டி வைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கை உடையவர்களையே உலகம் தேடுகிறது. விரும்புகிறது.
மனதினை அவ்வப்போது உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் அடைய முடியாத இலக்கு என எதுவும் கிடையாது. 'தகுந்த பயிற்சியும் இடைவிடாத முயற்சியும் இருந்தாலே எட்ட முடியாத இலக்கையும் எளிதில் அடையலாம்' என்பதே சாதனையாளர்கள் நமக்கு விட்டுச்சென்ற பாடமாக அமைகிறது.
நம்மில் பலருக்கு விழிப்பதற்கும் எழுவதற்குமே அதிக இடைவெளி உள்ளது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டியுள்ளது. காலையில் எழும்பும்போது மனதிற்கும், உடலுக்கும் இடையிலே ஒரு பெரிய சண்டையே நிகழ்கிறது. நம்பிக்கையோடு எழுங்கள். ஒவ்வொரு விடியலும் உங்களுக்காக வெற்றியோடு காத்திருக்கும்.'உங்களால் செய்யமுடியாத எந்த ஒரு செயலையும்இறைவன் உங்களிடம் ஒப்படைப்பதில்லை'
(யாரோ)எவ்வளவு உண்மையான வரிகள் இவை. உங்கள் படைப்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் தருணங்களிலே வெற்றி உங்களைத் தேட ஆரம்பிக்கிறது. வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றி கவலைப்படாமல் அவற்றிலிருந்து ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களைச் சிறப்பாகவும் சிரத்தையோடும் செய்யுங்கள். வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாகச் செய்திட முடியாது என்று வியக்கும் அளவிற்குச் செய்யுங்கள். இவைகள்தான் வெற்றியாளர்களின் ரகசியங்கள்.
அற்புத மனித மனம் :ஆயிரம் கணினிகளை விட அற்புதமானது மனித மனம். உலகின் பல்வேறு அறிஞர்களாலும் இன்று வரை அறியப்படாத பல ரகசியங்களை தன்னுள்ளே வைத்திருக்கும் அதிசயமே நமது மனம். மிகப்பெரிய சாதனையாளர்களைப் பார்க்கையில் ஒரே ஒரு செய்தி மட்டும் நமக்குத் தெரிய வருகிறது. அனைவரின் வெற்றியும் பல்வேறு போராட்டத்திற்குப் பின்னரே கிடைத்துள்ளது. ஜெயித்தவர்களின் வரலாற்றைப்படிக்கும் போது அவர்களைப் போலவே வாழவேண்டும் என்ற ஆசை எழுகிறது. அடுத்த நிமிடமே நமது சகஜ வாழ்க்கை நம்மைச் சிதைக்க ஆரம்பிக்கிறது. அதிலிருந்து நம்பிக்கையோடு மீள வேண்டும்.'நம்பிக்கையால் மனதை நிரப்பிக் கொள்ளுங்கள்
உலகின் மிகப் பெரிய செல்வந்தர் நீங்களே'-(சதா பாரதி)உங்கள் மனதை நம்பிக்கையால் நிரப்பிக் கொள்ளுங்கள். உங்கள் மனதும், செவியும் அடிக்கடி என்னென்ன வாசகங்கள் கேட்க ஆரம்பிக்கிறதோ அவை எல்லாம் உங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பிக்கும். அதுவே உங்கள் சிந்தனைகளாக மாறி, செயல் வடிவில் வெளிப்படும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிமிடங்களிலும் வாழ்க்கை புதிதாகவே தோன்றுகிறது. மகிழ்வாகவே இருக்கிறது என்ற நம்பிக்கையை மனதிற்குள் புகுத்தி விடுங்கள்.மகிழ்ச்சியால் நிறைந்த மனமே நாம் சொல்வதையெல்லாம் கேட்கும். நீங்கள் சொல்வதை உங்கள் மனம் கேட்க ஆரம்பிக்கும் போதே உங்களின் வெற்றி ஆரம்பமாகிறது.சராசரி வாழ்க்கை
திறமைகளின் மொத்த வடிவம்தான் மனிதன். மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை புரிந்து கொள்ளாதவரை அங்குசத்திற்கு அஞ்சும் யானையாகவே இருந்து விடுகிறார்கள்; இறந்தும் விடுகிறார்கள். மிகப் பெரிய பலம் கொண்ட யானை ஆலமரத்தையே அசைத்து பார்க்கும். இல்லை வேரோடு பிடுங்கி எறியும். அப்பேர்பட்ட யானையை அதன் பலத்தை அறிய விடாமல் சிறு குச்சிக்கு பயப்படும் சாதுவான பிராணியாகவே வளர்த்து விடுகிறோம். நாமும் நம் திறமைகளை அறியாதவர்களாக இருந்து வருகிறோம். திறமைகளை உணர்ந்து கொள்ளுங்கள். உயிரோடு இருப்பது வேறு. வாழ்வது என்பது வேறு... இந்த வாழ்க்கை ஓட்டத்திலேயே குறைந்தபட்சமாக தனக்கும் தன் குடும்பத்தாருக்கும், அதிகபட்சமாகத் தன் சமுதாயத்திற்கும் அல்லது இந்த அகில உலகத்திற்கும் ஒரு நன்மையைச் செய்து போனவர்களை, லட்சியம் கொண்டு வாழ்ந்தவர்களைத்தான் சாதனையாளர்கள், வாழ்ந்தவர்கள் என்று சொல்ல வேண்டும்.அடுத்த அடியில் கூட வெற்றி இருக்கலாம்.சலிப்போடு திரும்பி விடாதீர்கள்; வெற்றி ஏமாந்து விடும்... முயற்சி செய்யுங்கள்!- முனைவர். நா.சங்கரராமன்தமிழ்ப் பேராசிரியர்எஸ்.எஸ்.எம்.,கலை, அறிவியல் கல்லுாரிகுமாரபாளையம்- 99941 71074

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X