சிவகங்கை:சிவகங்கை அருகே, சித்த மருத்துவ முறையில், பூச்சி தாக்காத கரும்பு நாற்றை, இளம் விவசாயி கண்டுபிடித்துள்ளார். பொதுவாக, கரணை மற்றும் நாற்று நடவு மூலம் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கரும்பை, கரையான் மற்றும் குருத்து பூச்சி போன்றவை தாக்குகின்றன. இதைத் தடுக்க, விவசாயிகள், குருணை மருந்தை பயன்படுத்தி கரணையை நடவு செய்கின்றனர். மருந்தால், மண்ணில் உள்ள மண்புழு, நுண்ணுயிர்கள் அழிந்துபோகின்றன.
மண்ணும் சில ஆண்டுகளில் மலடாக மாறுகிறது; மேலும், மருந்து பயன்படுத்திய நிலத்தில் தொடர்ந்து நடந்து செல்லும் விவசாயிக்கும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், சித்த மருத்துவ முறையில், பூச்சி தாக்காத கரும்பு நாற்றை, சிவகங்கை அருகே, திருமலை விவசாயி அழகுசுந்தரம், 30, கண்டுபிடித்துள்ளார். அவர் கரும்பில் இருந்து விதைப்பருவை எடுத்து, அதில் துளையிட்டு வேப்பம் புண்ணாக்கு, பசு நெய் போன்றவற்றை செலுத்து கிறார். பின், அவற்றை நாற்றாக வளர்த்து நடவு செய்கிறார். இதன் மூலம் கரையான் பாதிப்பு மட்டுமின்றி, குருத்து பூச்சி தாக்குதலும் இருக்காது. மேலும் கரும்பின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.
மீண்டும் சாதனை:தன் கண்டுபிடிப்பு குறித்து, அழகுசுந்தரம் கூறியதாவது: மண்புழுவை விட, கரையான் மூலம் மண்ணிற்கும், தாவரத்திற்கும், இரண்டு மடங்கு நன்மை கிடைக்கும். அவற்றை நாம், மருந்து மூலம் அழித்துவிடக் கூடாது. அவற்றை காக்கவும், கரும்புகளில் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்தவும், மூன்று ஆண்டு முயன்று புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளேன். என் ஆராய்ச்சிக்கு, திருச்சி மாவட்டம் காட்டுப்புதுார் பாலு உதவி செய்தார். ஏற்கனவே நான் கரும்பு விதை பெட்டி தயாரித்துள்ளேன். கோவை வேளாண் பல்கலையில் இளநிலை பண்ணை தொழில்நுட்பம் படித்துள்ளேன். தொடர்ந்து மற்ற பயிர்களுக்கும் இந்த ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE