காரைக்குடி:ரோட்டில் அடிபட்டு கிடக்கும் கால்நடைகளை, காப்பாற்றி பராமரித்து வருகிறார் காரைக்குடி அருகே உள்ள புதுவயலை சேர்ந்த டெய்லர் மணி.
உயிர்களை சமமாக மதிக்க வேண்டும், அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும், என பல மணி நேரம் போதிப்பவர் கூட, ரோட்டில் கால்நடை ஒன்று அடிபட்டு கிடந்தால், அய்யோ, என பரிதாபப்படுவார்களே ஒழிய, அதை மீட்டு அதற்கு மருத்துவ உதவி அளிக்க முன்வர மாட்டார்கள். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக ரோட்டில் அடிபட்டு கிடக்கும் கால்நடைகளை, மீட்டு அவற்றுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறார் புதுவயலை சேர்ந்த டெய்லர் மணி.
"தாய்மடி அனைத்து உயிர் காப்பகம்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். அனாதையாக விடப்பட்ட 26 நாய்கள், அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட 7-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. அவர் கூறும்போது:
பசுமாடு என்பது விவசாயத்துக்கு முக்கியமானது. இது இன்றி இயற்கை விவசாயம் செய்ய முடியாது. ஆனால்,பலர் நாட்டு மாடுகளை ரோட்டில் திரிய விடுகின்றனர். அவை வாகனங்களில் அடிபட்டு உயிரை இழக்கிறது. அவற்றை காப்பாற்ற கோசாலை இல்லை. எனவே, அவற்றின் உயிர் காக்கும் வகையில், அவற்றை மீட்டு மருத்துவர் மூலம் உரிய சிகிச்சை அளித்து வருகிறேன். அதே போல், அடிபடும் நாய்களையும் காப்பாற்றி காப்பக வசதி செய்து கொடுத்துள்ளேன்.
நாய்களை பராமரிக்க நாள் ஒன்றுக்கு ரூ.500 வரை செலவாகிறது. காலையில் 3 லிட்டர் பால், முட்டை, மதியம் பிஸ்கட், இரவு கோழி ஈரல் ஆகியவை வாங்கி கொடுக்கிறேன். நான் விவசாயம் செய்வதால் மாடுகளுக்கு தேவையான புல், தழை என் தோட்டத்திலேயே கிடைக்கிறது. நாய்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உள்ளது. முதல் முதலில் திருப்புவனத்தில் வாகனத்தில் அடிபட்ட நாய் என்னிடம் உள்ளது. அதற்கு தற்போது 16 வயதாகிறது.
தனி அறை, கட்டில் வசதி செய்து கொடுத்துள்ளேன். சமீபத்தில் ஆடு ஒன்று நாய்களால் கடிபட்டு, கொம்பு முறிந்து, உயிருக்கு போராடிய நிலையில், அதன் உரிமையாளர்கள் ரூ.500-க்கு கசாப்பு கடையில் விற்று விட்டனர். நான் அதை மீட்டு, தற்போது என்னால் முடிந்த சிகிச்சை அளித்து வருகிறேன். என்னிடம் 26 நாய்கள் இருந்தாலும், அவைகளுக்குள் சண்டை போடாது. ஒற்றுமையாக இருக்கும், என்றார்.
மனித நேயம் இன்னும் ஒரு சில இடங்களில் மலர்ந்து கொண்டு தான் உள்ளது.