திருவனந்தபுரம்:கேரளா மற்றும் தமிழ்நாடு பஸ் ஸ்டாண்டுகளில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவருக்கு கேரள லாட்டரியில் 65 லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது.ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கோரப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் பென்னையா 32. இவர் தனது கிராமத்தில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கல் உடைக்கும் போது கல் தவறி விழுந்து கால் முறிந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து மாவு கட்டுடன் கேரளாவுக்கு வந்த இவர் குமரி கேரள எல்லையான வெள்ளறடையில் பிச்சை எடுத்து பிழைத்து வந்தார். இரவு நேரத்தில் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் தங்குவது வழக்கம்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பனச்சமூட்டில் உள்ள ஒரு லாட்டரி கடையில் கேரள அரசின் அக்ஷயா லாட்டரி 10 டிக்கெட் வாங்கினார். அதில் ஒரு லாட்டரிக்கு முதல் பரிசாக 65 லட்சம் ரூபாய் கிடைத்தது. இதை பார்த்த லாட்டரி கடைக்காரர் அப்பகுதி மக்களிடம் தகவல் கூறினார். அவர்கள் பென்னையாவை பல இடங்களில் தேடி கடைக்கு அழைத்து வந்தனர். பேங்கில் டிக்கெட்டை டிப்பாசிட் செய்ய வங்கி கணக்கு இல்லாததால் அப்பகுதி மக்கள் அவரை டிக்கெட்டுடன் வெள்ளறடை போலீசில் ஒப்படைத்தனர்.
எஸ்.ஐ. சிபுகுமார் அவரை ஒரு பேங்குக்கு அழைத்து சென்று டிக்கெட்டை டிபாசிட் செய்ய முயற்சி செய்தார். ஆனால் கணக்கு இல்லாமல் டிக்கெட்டை வாங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் ஆந்திராவில் உள்ள பென்னையா உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இவருக்கான அடையாள அட்டை கொண்டு வருவார்கள். தற்போது பென்னையா வெள்ளறடை போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE