அரசியல் செய்தி

தமிழ்நாடு

எப்போது பதிவு செய்யப்போகிறோம்?

Added : ஏப் 03, 2016
Share
Advertisement
காமராஜர் ஆட்சி அமைப்போம் என்னும் முழக்கத்தை, அவர் இறந்து 50 ஆண்டுகள் கழித்த பிறகும், கேட்டுக் கொண்டிருக்கிறோம்.உண்மையில், காமராஜரின் ஆட்சி பற்றி நமக்கு திட்டவட்டமாக என்ன தெரியும்? அவர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் சமூக, அரசியல், பொருளாதார நிலை எப்படி இருந்தது?காமராஜரின் நிர்வாக திறன் பற்றியும் அவர் அறிமுகப்படுத்திய திட்டங்கள் குறித்தும், அதை அப்போதைய தமிழகம்
எப்போது பதிவு செய்யப்போகிறோம்?

காமராஜர் ஆட்சி அமைப்போம் என்னும் முழக்கத்தை, அவர் இறந்து 50 ஆண்டுகள் கழித்த பிறகும், கேட்டுக் கொண்டிருக்கிறோம்.உண்மையில், காமராஜரின் ஆட்சி பற்றி நமக்கு திட்டவட்டமாக என்ன தெரியும்? அவர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் சமூக, அரசியல், பொருளாதார நிலை எப்படி இருந்தது?காமராஜரின் நிர்வாக திறன் பற்றியும் அவர் அறிமுகப்படுத்திய திட்டங்கள் குறித்தும், அதை அப்போதைய தமிழகம் எப்படி எதிர்கொண்டது என்பதை பற்றியும், எத்தகைய பதிவுகள் நம்மிடம் இருக்கின்றன?தமிழகம் கடந்து தேசிய அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தும் திறன் பெற்றிருந்த காமராஜரைப் பற்றியேனும், தனிப்பட்ட முறையில் நமக்கு ஏதேனும் தெரியுமா? ஒரு கறாரான விமர்சன பார்வையுடன் காமராஜரை நாம் என்றேனும் மதிப்பிட்டு பார்த்திருக்கிறோமா? குறைந்தபட்சம் அவரைப் பற்றிய நிறைவான ஒரேயொரு வாழ்க்கை வரலாறாவது நம்மிடம் இருக்கிறதா?அகில இந்திய அளவில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸை முறியடித்து, முதல் முறையாக ஆட்சியை பிடித்த அண்ணாதுரை பற்றியும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலை நிர்ணயித்து வரும் முக்கிய சக்தியான தி.மு.க., குறித்தும், போதுமான அளவுக்கு இன்னமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டும், இன்றுவரை முறையாக ஆய்வு செய்யப்படவில்லை.தமிழக அரசியலில் திரைப்பட துறையின் ஆதிக்கம் பிரம்மாண்டமானது என்று நமக்கு தெரியும். ஆனால், இந்த உறவு, முறைப்படி ஆய்வு செய்யப்படவில்லை. ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக திகழும் ஜாதி அரசியல், மொழி உணர்வு, இன உணர்வு போன்றவை குறித்து விரிவான பதிவுகள் மேற்கொள்ளப் படவில்லை.அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ஆதரவு திரட்டும் ஹிலாரி கிளிண்டன், இதுவரை ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நியூயார்க் செனட்டராக இருந்தபோது, 'லிவிங் ஹிஸ்டரி' என்னும் தலைப்பில், தன் வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதினார்.பின், 2016 தேர்தலில், 'டெமாக்ரடிக்' கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதை முன்னிட்டு, இன்னொரு வாழ்க்கை வரலாற்று நுாலை எழுதி வெளியிட்டார். 700 பக்கங்கள் நீளும் அந்தப் புத்தகத்தின் பெயர், 'ஹார்ட் சாய்சஸ்'. இந்த புத்தகத்தின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே அவரது அரசியல் பாதை தீர்மானிக்கப்படும் என, அப்போது சில அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.ஹிலாரி கிளிண்டனை தேர்ந்தெடுக்கலாமா, அவர் எப்படிப்பட்டவர், அவருடைய பொருளாதார கொள்கை என்ன, அரசியல் பார்வை என்ன, அவர் ஓரினச் சேர்க்கையை எதிர்க்கிறாரா ஆதரிக்கிறாரா, குடியேறிகளை எதிர்க்கிறாரா ஆதரிக்கிறாரா, போர்களை விரும்புகிறாரா விரும்பவில்லையா என்று அனைத்தையும் பற்றி, அமெரிக்க ஊடகங்கள் விவாதித்துக் கொண்டு இருக்கின்றன.ஹிலாரிக்கு ஆதரவாகவும், எதிராகவும், நடுநிலையாகவும் இதுவரை வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை, நுாறை தொட்டுவிடும். இவை போக, காத்திரமான விவாதங்களையும் கூர்மையான விமர்சனங்களையும் உள்ளடக்கிய ஏராளமான பெரிய, சிறிய கட்டுரைகள், ஹிலாரியை முன்வைத்து எழுதப்பட்டு உள்ளன.ஆம், அங்கும் டொனால்ட் டிரம்ப் போன்றவர்கள் இருக்கின்றனர். அருவருப்பூட்டும், கீழ்த்தரமான மேடை பேச்சுகளை அங்கும்கூட காணமுடியும் தான். ஆனால், ஆரோக்கியமான விவாதங்களோடும், அறிவுப் பூர்வமான ஆய்வு பார்வையோடும் ஒப்பிடும்போது, இந்த போக்கின் தாக்கம் குறைவானது.அங்கே அரசியல்வாதிகளும்கூட, பதிவுகள் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதிபர்கள் மட்டுமல்ல, அதிபர் வேட்பாளர்களும், இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களும், செனட்டர்களும், மேயர்களும் கூட, தங்கள் வாழ்வையும் அரசியல் பார்வையையும் பதிவு செய்கின்றனர்.பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகள் என்று பலரும், ஒவ்வொரு அரசியல் தலைவரையும், கறாரான முறையில் மதிப்பிடுகின்றனர்.ஒரு சில விதிவிலக்குகள் தாண்டி, இங்குள்ள அரசியல் தலைவர்கள், தங்கள் அரசியல் பணிகளையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டதில்லை. தங்களின் வெற்றி, தோல்விகளை விவாதித்ததில்லை. மற்றவர்களும் அவர்களை நெருங்கிச்சென்று ஆராய்ந்ததில்லை.பெர்னார்ட் பேட் என்னும் பேராசிரியர், தமிழ்நாடு மேடைப் பேச்சு, திராவிட அழகியல் ஆகியவற்றை ஆராய்ந்து ஆய்வு நுாலொன்றை எழுதியிருக்கிறார். மொழியை, குறிப்பாக மேடைப்பேச்சை மையமாக கொண்டு வளர்ந்து செழித்த திராவிட இயக்கத்தையும், மக்கள் வாழ்வியலையும் அவர் அந்த நுாலில் ஆராய்ந்து உள்ளார்.முறையான ஆய்வுப் பார்வையும் விமர்சன போக்கும், இங்கு வளர்த்தெடுக்கப் படாததால் தான், அச்சமின்றி, இன்றைய அரசை, பலரால் விமர்சிக்க முடிவதில்லை. அறிவுஜீவிகளும், சமூக/அரசியல் ஆய்வாளர்களும் இயங்காததால் ஏற்பட்ட வெற்றிடத்தில், கண்மூடித்தனமான தலைவர் வழிபாடும், இன்னபிற நிலப்பிரபுத்துவ நடைமுறைகளும் வளர்ந்து செழித்திருக்கின்றன. இந்த நிலை ஏற்பட்டதற்கு அறிவார்ந்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்.கட்டுரையாளர், கிழக்கு பதிப்பகத்தின் நுாலாசிரியர். அரசியல், வரலாறு ஆகிய துறைகளில் நுால்கள் எழுதியுள்ளார்தொடர்புக்கு: marudhan@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X