ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 21

Added : ஏப் 08, 2016 | கருத்துகள் (3) | |
Advertisement
எதிரும் புதிரும்கேரள ஆன்மிக ஞானி நாராயண குருவின் மாணவ மரபில் வந்தவரான மறைந்த நித்ய சைதன்ய யதி அவர்கள் என்னுடைய குருநாதராக நான் சொல்வதுண்டு. எனது இருபத்தெட்டாவது வயதில் நான் அவரை முதலில் சந்திக்கும்போதே நூல்களை எழுதி எழுத்தாளனாக அறியப்பட்டிருந்தேன். ஆனால் கல்லூரியிலும், புத்தகங்களிலும் நான் உண்மையான கல்வியை பெறவில்லை என்பதை நான் அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.
 ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 21

எதிரும் புதிரும்

கேரள ஆன்மிக ஞானி நாராயண குருவின் மாணவ மரபில் வந்தவரான மறைந்த நித்ய சைதன்ய யதி அவர்கள் என்னுடைய குருநாதராக நான் சொல்வதுண்டு. எனது இருபத்தெட்டாவது வயதில் நான் அவரை முதலில் சந்திக்கும்போதே நூல்களை எழுதி எழுத்தாளனாக அறியப்பட்டிருந்தேன். ஆனால் கல்லூரியிலும், புத்தகங்களிலும் நான் உண்மையான கல்வியை
பெறவில்லை என்பதை நான் அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.
ஜெயமோகன்

நித்ய சைதன்ய யதி அமெரிக்கப் பல்கலைகளில் ஆசிரியராக இருந்தவர். ஆனால் இந்தியமுறை குருகுல அமைப்பை உருவாக்கியவர். தத்துவம் தொடர்பான ஒரு கருத்தை, பதினைந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு அவரிடம் நான் விரிவாகப் பேசி முடித்ததும் மெல்லிய புன்னகையுடன், 'சரி. இன்னொரு பதினைந்து நிமிடம் இதன் எதிர்தரப்பைப் பற்றி சொல்' என்றார்.
நான் குழப்பத்துடன், 'அதை நான் ஏன் சொல்ல வேண்டும்?' என்றேன். நித்ய சைதன்ய யதி, 'எந்தக் கருத்தும் அதன் எதிர்தரப்புடன் சேர்ந்துதான் செயல்படமுடியும். மனித மூளையின் இயல்பே அப்படித்தான். நீ சொன்ன கருத்துக்கான மறுப்பு என்ன? அதை சொல். இதே அளவு ஆற்றலுடன், இதே தெளிவுடன் அதைச் சொல்' என்றார். என்னால் சொல்ல முடியவில்லை.

முரணியக்கம்

அப்போதுதான் நான் சிந்தித்துக் கொண்டிருப்பது மிகப்பிழையான ஒரு முறை என்று தெரிந்தது. ஒரு கருத்து அதற்கு நேர் எதிரான இன்னொரு கருத்துடன் மோதி, முரண்பட்டு, உரையாடி, அதன் விளைவாக மூன்றாவது ஒரு கருத்தை உருவாக்குகிறது. நேர்க்கருத்தை தீஸிஸ் என்கிறார்கள்; எதிர்கருத்து ஆன்டிதீஸிஸ். விளைவுக்கருத்து சிந்தஸிஸ் எனப்படுகிறது.
ஆங்கிலத்தில் இதை டயலிட்டிக்ஸ் என்கிறார்கள். இன்றைய தமிழில் முரணியக்கம் என்கிறார்கள். வேதாந்த மரபில் இதை யோகமீமாம்ஸை என்பார்கள். சைவ சித்தாந்தத்தில்கூட சுபக்கம், பரபக்கம் என இரண்டாக கருத்துக்கள் பிரிந்து மோதி வளர்வதைப்பற்றி பேசுகிறார்கள். சிவசக்தி நடனம் என்பதே ஒருவகையில் இதுதான்.
நமது கல்வி நிறுவனங்களில் இந்த விவாத முறையை நாம் கற்பிப்பதே இல்லை. இங்கே கருத்து என்றாலே ஒருவிஷயத்தைச் சார்ந்து மூர்க்கமாக, ஆவேசமாக வாதாடுவதுதான். இதனால்தான் நம்முடைய அனைத்து மேடைகளிலும் அனைவரும் ஒற்றைப்படையாகவே ஒரு கருத்தை சொல்கிறார்கள். அதன் மறுதரப்பைப் பற்றி அவர்களால் யோசிக்கவே முடிவதில்லை.
இந்தியா தனியார்மயத்தின் பாதையில்தான் செல்ல வேண்டும் என்று ஒருவர் வாதிடும்போது, அவரிடம், 'தனியார்
மயத்தின் ஆபத்துகள் என்ன என்பதை ஒரு பத்து நிமிடங்கள் சொல்லுங்கள்' என்று கேட்டால் அவரால் சொல்ல முடியாது. 'தனியார் மயத்தால் ஆபத்தே இல்லை, அனைத்துமே சிறந்தவை' என்று அவர் சொல்வார். தனியார்மயம் ஆபத்தானது என்று வாதிடும் இடதுசாரியிடம் தனியார்
மயத்தின் லாபங்களைப் பற்றிக் கேட்டாலும் அவரால் சொல்ல முடியாது. இந்த ஒற்றைப்படை தன்மைதான் உண்மையில் நம்முடைய அரசியல் விவாதங்கள் அனைத்தையுமே பயனற்றதாக ஆக்கியிருக்கிறது.
ஒரு தரப்பை நாம் பார்க்கும்போதே அதன் மறுதரப்பை பார்க்கமுடியாமலாகும் மன அமைப்பை பெற்று விடுகிறோம். அந்த ஒற்றைதரப்பை நடைமுறைச் செயலாக ஆக்கும்போது அதன் எதிர்த்தரப்பு கிளர்ந்துவரும். நாம் அதை வேருடன் அழிக்க முயல்வோம். அப்படி அழிக்கப்படுவது உண்மையில் ஒரு முக்கியமான தரப்பாக எதிர்காலத்தில் வளர வாய்ப்புள்ளவையாக இருக்கும். அதை அழித்ததனால் மிகப்பெரிய இழப்பு நமக்கு வரக்கூடும்.
ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 70கள் வரைக்கும் இந்திய அரசு காடுகளை பொருள் உற்பத்திக்கான இடங்களாகத்தான் பார்த்தது. நான் படிக்கும் காலத்தில் பாடப்புத்தகங்களிலேகூட, 'காடு நமக்கு, விறகு, அரக்கு, தோல் முதலியவற்றை தருகிறது' என்றுதான் இருக்கும். வருடம் தோறும் காட்டில் முதிர்ந்த மரங்களை வெட்டி விற்பதற்கு அரசே குத்தகைக்கு கொடுக்கும் பழக்கம் இருந்தது. 'கூப் காண்ட்ராக்ட்' என்று அதை இளமையில் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். ஆம், அரசாங்கமே திட்டமிட்டு காடுகளை வெட்டி அழித்துக் கொண்டு இருந்தது.
அதற்கு எதிராக இங்குள்ள காந்தியவாதிகளில் ஒரு தரப்பினர் பேசினர். காடுகளை அழிக்கக்கூடாது என்றும், அவற்றை பேண வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர். பல இடங்களில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக அவர்கள் போராட்டங்களை நடத்தினர். இமயமலைச்சாரலில் மரங்களை வெட்ட வந்த அரசு அதிகாரிகளுக்கெதிராக மரங்களை கட்டிப் பிடித்து நின்று போராடும் ஒரு போராட்ட முறையை, காந்தியவாதி சுந்தர்லால் பகுகுணா அவர்களால் உத்தரப்பிரதேசம், கர்வால் பகுதியில், 1971ல் தொடங்கப்பட்ட சிப்கோ இயக்கம்
அறிமுகம் செய்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

அப்போது இங்குள்ள அறிவுஜீவிகளுக்கு அது ஒரு தேவையற்ற பிடிவாதமாகவும், ஏளனத்துக்குரியதாகவும் தான் தோன்றியது. வளர்ச்சியை பற்றி பேசும் வலதுசாரிகளும் தொழிலாளர் நலன் பேசும் இடதுசாரிகளும் அவர்களை எதிர்த்தனர்.
வளர்ச்சி என்பது ஒரு கருத்து என்றால், அவ்வளர்ச்சி சுற்றுச்சூழலை அழிக்கக்கூடாது என்பது எதிர்க்கருத்து. ஜனநாயகத்தில் இரண்டு கருத்துகளும் முரண்பட்டு, இரண்டுக்கும் நடுவே உள்ள ஒரு முடிவுதான் எட்டப்பட வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் இருந்ததால் தான் பகுகுணா அவர்கள் தன்னுடைய கருத்தை இந்தியா முழுக்க அலைந்து ஊடகங்களில் சொல்ல முடிந்தது.
கடந்த, 1972ல் சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடந்த உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடுதான் உலக அளவில் சுற்றுச்சூழல் பற்றிய முதல் முயற்சி. அது ஒரு பெரிய எச்சரிக்கை மணியை அடித்தது. உலகின் பசுமைவளம் அழிந்து கொண்டிருக்கிறது என்றும், நீர்வளம் குறைந்து கொண்டிருக்கிறது என்றும், காடுகள் அழிக்கப்படும் என்றால் உலகமே சிலவருடங்களில் அழிந்து விடக் கூடும் என்றும் அது குரல் கொடுத்தது.
அந்த மாநாட்டுக்கு சென்றிருந்த இந்திரா காந்தி அந்தக் குரலை புரிந்துகொண்டார். உலகநாடுகளிலேயே ஆரம்பத்திலேயே சுற்றுச்சூழல் பற்றிய பிரக்ஞையை அடைந்த நாடுகளில் ஒன்று இந்தியா. அதன் பின் தான் இந்தியாவில் இன்றிருக்கும் சுற்றுச்சூழல் சார்ந்த எச்சரிக்கைகளும், கட்டுப்பாடுகளும் உருவாயின. காடுகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. கண்காணிப்பு அமைப்புகள் பிறந்தன
இன்றும்கூட இந்தியாவைச் சூழ்ந்துள்ள பலநாடுகளில் இப்படி ஓர் எச்சரிக்கையே இல்லை. மலேசியாவும், இந்தோனேசியாவும் காடுகளை தீவைத்துக் கொளுத்தி அழித்து எண்ணைப்பனை விவசாயம் செய்ய பெரிய நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கின்றன. கிட்டத்தட்ட தமிழகம் அளவுக்கு பரப்புள்ள காடுகள் வானிலிருந்தே எரிபொருள் வீசி எரித்து அழிக்கப்படுகின்றன. மாதக்கணக்காக தீ எரிகிறது.
இந்தோனேசியாவுக்குச் சமீபத்தில் சென்றிருந்தபோது, மொத்த நாடே புகையால் மூடப்பட்டு இருண்டிருந்ததைக் கண்டேன். மொத்த மக்களும் இருமிக் கொண்டிருந்தனர். எங்கும் கரி. அந்தப் புகை மேகம் போல சிங்கப்பூருக்கு வந்து மூடி சிங்கப்பூர் அரசு பலநாட்கள் விடுமுறை விட வேண்டிய நிலைமை உருவாகிறது. சீனாவில் மூச்சு வடிகட்டிகள் இல்லாமல் பலநகரங்களில் நடமாடவே முடியாது.
ஏனென்றால் அங்கெல்லாம் வளர்ச்சி பற்றி பேசும் ஆட்சியாளர்கள் சுற்றுச்சூழல் பற்றிய பேச்சை எடுப்பதற்கே எவரையும் விடுவதில்லை. அங்குள்ளது சர்வாதிகார அரசு. ஆகவே மறுதரப்பே இல்லை. இந்தியாவில் ஜனநாயகம் இருப்பதனால் தான் சுற்றுச்சூழல் பற்றி காந்தியவாதிகள் பேசிய பலவீனமான குரல் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது.

அழிவு சக்தி

ஆகவே ஒரு ஜனநாயக சூழலில் எவர் ஒருவர் எந்த வகையான செய்தியை சொன்னாலும் அவரே அதில் உள்ள குறைகளையும் அதன் மாற்றுத் தரப்புகளையும் எடுத்துரைக்கிறாரா, அவற்றை அவர் தர்க்கபூர்வமாக நிதானமாக அணுகுகிறாரா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
எதிர்தரப்பென்பதே முட்டாளதனத்தின் உச்சம் என்றொருவர் மேடையில் வாதிடுவாரென்றால், அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் வெறும் பிரச்சாரகர். அந்தக் குரலை கீழ்மட்டத்திலுள்ள ஒரு எளிமையான அரசியல் தொண்டன் பேசினால் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் நாட்டை ஆள்பவர், ஆள விரும்புபவர் அவ்வாறு பேசினாரென்றால் நாம் மிகுந்த எச்சரிக்கை அடைய வேண்டும். அவர் பெரிய அழிவுசக்தி.
ஜனநாயகமென்பது ஒன்றுக்கு மேற்பட்ட தரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி முரண்பட்டு முன்னகரும் ஓர் இயக்கம். முரணியக்கமே ஜனநாயகம். ஆகவே எவர் எந்தத்தரப்பைப் பற்றிப்பேசினாலும் அதன் மறுதரப்பு என்ன என்று அவரிடமே கேட்டாகவேண்டும்.
கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com www.jeyamohan.in

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

GOPALASAMY - bengaluru,இந்தியா
09-ஏப்-201607:12:20 IST Report Abuse
GOPALASAMY ஜெயமோகனின் சீரிய கருத்துக்களுக்கு நிறைய வாசகர்கள் கருத்து பதிவது இல்லையே ? ஏன்?
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-ஏப்-201605:56:21 IST Report Abuse
ஆரூர் ரங் வளர்சிக்காக அளிக்கிறோம் நிரந்தர (Sustainable ) வளர்ச்சி என்பதே உண்மை வளர்ச்சி என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறோம்
Rate this:
Cancel
KRK - Kumbakonam,இந்தியா
09-ஏப்-201603:24:22 IST Report Abuse
KRK மிக அருமையான கட்டுரை, நியுட்டனின் விதிகளை படித்த மாதிரி இருக்கு. ஆனால் இப்போல்லாம் நண்பர்கள் விவாதிக்கும்போது கூட, நபர் தான் ஜெயிக்க பார்க்கிறார் ஆனா கருத்தல்லவா ஜெயிக்க முற்பட வேண்டும்? முதலில் நபர் போயி தன்கருத்து முன்னிலை படுத்தனும், பின்பு அதுவும் போயி எதிர் கருத்து முன்னிலை படுத்தனும், பின்பு அதுவும் போயி நடுநிலை கருத்து / பொது கருத்து உருவாகனும். ஆஹா நிறைய பேருக்கு வேறொரு பக்கத்தை திறந்து காட்டி இருக்கிறீர்கள், நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X