ம.ந.கூட்டணி கேட்கும் வட மாவட்ட தொகுதிகள் பலவற்றையும் விட்டுக் கொடுக்க முடியாது. கூட்டணியில் த.மா.கா., இணைவதாக பகிரங்கமாக அறிவித்தால் தொகுதியை பகிர்ந்தளிப்பது குறித்து பரிசீலிப்பதாக வைகோவிடம் விஜயகாந்த் கறாராக கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலை இணைந்து சந்திக்க தே.மு.தி.க.,- - மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளது. இதற்காக இருதரப்பிலும் கடந்த மாதம் 23ம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தே.மு.தி.க., 124 தொகுதிகளிலும் ம.ந.கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிட முடிவானது.கூட்டணியில் பலத்தை அதிகரிக்க கூடுதல் கட்சிகளை சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டது.
இதற்கிடையில் த.மா.கா.,வை சேர்க்கவும் அக்கட்சிக்கு தே.மு.தி.க., ஒதுக்கீட்டில் இருந்து தொகுதிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் ம.ந.கூ., தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் விஜயகாந்த் தரப்பு அதற்கு சம்மதிக்க வில்லை.இருந்தபோதும் நேற்று முன்தினம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., அலுவலகத்தில் விஜயகாந்தை சந்தித்து வைகோ ஆலோசனை நடத்தினார். இந்த பேச்சில் எந்த உடன்பாடும்
ஏற்படவில்லை.
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்ற வைகோ மீண்டும், அன்றிரவே ம.ந.கூ., தலைவர் களுடன் அங்கு வந்தார். தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ்,பார்த்தசாரதி, இளங்கோவனுடன் தொகுதி பங்கீடு
பேச்சுவார்த்தை நடத்தினார். 'வட மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளை
தே.மு.தி.க., விட்டுக் கொடுக்க வேண்டும்' என ம.ந.கூ., தலைவர்கள் கூறினர்.
அந்த பேச்சு வார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதையடுத்து மாமண்டூரில் நடக்கவிருக்கும் மாநாடு தொடர்பான ஆயத்த பணிகளை பார்வையிட புறப்பட்டு சென்றனர்.இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணியளவில் விஜயகாந்துடன் பேச்சு நடத்துவதற்கு கட்சி அலுவலகத்திற்கு வைகோ மீண்டும் வந்தார். அங்கு 50 நிமிடங்கள் வரை அவர் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:வட மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளை விட்டு கொடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் வைகோ கேட்டார். இந்த தொகுதிகளில் போட்டியிட வி.சி., மற்றும் மா.கம்யூ., கட்சிகள் விரும்புவதாகவும் கூறினார்.
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதித்து
இதுகுறித்து முடிவெடுப்பதாக விஜயகாந்த் அவரிடம் கூறினார். த.மா.கா.,விற்கு கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குவது குறித்து வைகோ பேசினார்.அப்போது விஜயகாந்த் நமது கூட்டணியில் இணைவது குறித்து த.மா.கா., பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். அப்படி அறிவித்தபிறகு தொகுதி ஒதுக்கீடு குறித்து பரிசீலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து,அங்கிருந்து வைகோ வெளியேறியுள்ளார். இரண்டாவது நாளாக வைகோ மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.இவ்வாறு
தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ம.ந.கூ., தலைவர்கள் ஆலோசனை: தொகுதிகளை விட்டுதர விஜயகாந்த் தயக்கம் காட்டும் நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ம.ந.கூ., தலைவர்கள் பேச்சு நடத்தினர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை ம.ந.கூ., ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று காலை சந்தித்து பேசியதில் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து ம.ந.கூ., தலைவர்களான வைகோ, ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் நேற்று மாலை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கூடினர். விஜயகாந்துடன் பகிர்ந்துக் கொண்ட கருத்துக்களை வைகோ அவர்களிடம் தெரிவித்தார். வட மாவட்டங்களில் 10 தொகுதிகளை விஜயகாந்த் விட்டு தருவதாக வைகோ கூறியுள்ளார்.
இதை கேட்டு வி.சி., - -மா.கம்யூ., தலைவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜயகாந்தை மீண்டும் சந்தித்து தொகுதிகளை கேட்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக நான்கு பேரும் இன்று கோயம்பேடு தலைமை அலுவலகம் செல்வது குறித்தும் ஆலோசித்துள்ளனர்.
-நமது சிறப்பு நிருபர்--
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (52)
Reply
Reply
Reply