நடக்குமா பார்லிமென்ட் - கலாமைத் தூங்க விடாத கனவு

Updated : ஏப் 10, 2016 | Added : ஏப் 09, 2016 | |
Advertisement
'பார்லிமென்ட் ஜனநாயகம்' எனும் மரபைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட, எம்.பி.,க்களின் கையில் தான் உள்ளது.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, பார்லிமென்ட் ஜனநாயகம் என்பது ஜனாதிபதி, மக்களவை - லோக்சபா மற்றும் மாநிலங்களவை - ராஜ்யசபா ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. மூன்று சக்கர ஆட்டோ வாகனம் போல, இதில் ஒரு சக்கரம் சுழலவில்லை
 நடக்குமா பார்லிமென்ட் - கலாமைத் தூங்க விடாத கனவு

'பார்லிமென்ட் ஜனநாயகம்' எனும் மரபைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட, எம்.பி.,க்களின் கையில் தான் உள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, பார்லிமென்ட் ஜனநாயகம் என்பது ஜனாதிபதி, மக்களவை - லோக்சபா மற்றும் மாநிலங்களவை - ராஜ்யசபா ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. மூன்று சக்கர ஆட்டோ வாகனம் போல, இதில் ஒரு சக்கரம் சுழலவில்லை என்றாலும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் செயல்பட முடியாது.


ஏழை மக்கள் அதிகம் உள்ள நம் நாட்டில், அதிக சம்பளம் பெறும் எம்.பி.,க்கள், பார்லிமென்டில் செயல்படும் விதம், சில சமயம், நகராட்சி மன்ற கூட்டத்தை விட மோசமாக உள்ளது.

பார்லிமென்டில் கூச்சல் போடுதல், குழப்பம் செய்தல், சபையின் மையப் பகுதியில் தர்ணா செய்தல், சபாநாயகரின் மைக்கைப் பறித்தல், அவரிடம் உள்ள தாள்களை பிடுங்கி, கிழித்து வீசுதல் என்று, தங்களின் வீரத்தை, எம்.பி.,க்கள் பார்லிமென்டில் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, ௮௫ன் படி, நம் பார்லிமென்ட் கூட்டத் தொடரின் இடைவெளி ஆறு மாதங்களுக்கு மேல் போகக் கூடாது. பட்ஜெட் கூட்டத் தொடர், மழைக்கால கூட்டத் தொடர் மற்றும் குளிர்கால கூட்டத் தொடர் என்று, நம் பார்லிமென்ட், ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது. இவ்வாறு மூன்று முறை கூடினாலும், ஆண்டிற்கு, ௬௦ நாட்கள் கூட சரியாக பார்லிமென்ட் செயல்படவில்லை என்பது, வேதனையான உண்மை.


ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் கூட சரியாக செயல்படவில்லை என்னும் நிலையில், ஐந்தாண்டுக்கு, ௩௦௦ நாட்கள் கூட செயல்படாத பார்லிமென்ட்டிற்கு, உறுப்பினர்களை தேர்வு செய்யும் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று, நாம் நம்மை பெருமை பேசி என்ன பலன்?

நல்ல சம்பளத்துடன், நல்ல சலுகையுடன், எம்.பி.,க்களுக்கு அவர்களின் தொகுதி நிதியாக ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் தரப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில், ௨௫ கோடி ரூபாய் தரப்படுகிறது. ஆனால், எம்.பி.,க்கள், பலர் தொகுதி நிதியை நல்ல வழியில் செலவழிப்பதில்லை, பார்லிமென்டை நடத்த விடுவதும் இல்லை.


பார்லிமென்டை நடத்தவிடாமல் முடக்கும் எம்.பி.,க்களின் பதவியை பறிப்பது பற்றி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அரசியல் அமைப்பில் முக்கிய பதவி வகிப்போரின் பதவிகள் எவ்வாறு பறிக்கப்படுகிறது என்று பார்ப்போம்.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு, 61ன் படி, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி செயல்படும் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம், பார்லிமென்டின் இரு சபைகளுக்கும் உள்ளது


பிரிவு, 67(பி)படி, ராஜ்யசபா எம்.பி.,க்கள் பெரும்பாலானோர் இயற்றியுள்ள ஒரு தீர்மானத்தை, லோக்சபா ஏற்றுக் கொண்டால், துணை ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கலாம்

பிரிவு, 90(இ) படி, ராஜ்யசபா எம்.பி.,க்களில் பெரும்பான்மையோர் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, ராஜ்ய சபையின் துணைத்தலைவரை பதவியில் இருந்து நீக்கலாம்

பிரிவு, 94(இ) படி, லோக்சபா எம்.பி,,க்களில் பெரும்பான்மையோர் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, லோக்சபா சபாநாயகர் அல்லது லோக்சபா துணை சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கலாம்.

ஆனால், எம்.பி.,யை அல்லது எம்.எல்.ஏ.,வை பதவியில் இருந்து நீக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் இல்லாது போனது வருந்தத்தக்க விஷயம்.

காரணம், நம் அரசியல் நிர்ணய சபையில், இடம் பெற்ற சட்ட மேதைகள், வருங்கால எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மிகவும் கண்ணியமாக நடந்து, அரசியல் அமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவர் என்று எண்ணியிருக்க வேண்டும். இவ்வாறு தரம் தாழ்ந்து போவர் என்று எண்ணியிருக்க மாட்டார்கள்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், எம்.பி.,க்களின் தகுதி குறைபாடுகள் பற்றியும், எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவதற்கு யார் தகுதியற்றவர்கள் என்றும் கூறுகிறது. ஆனால், பார்லிமென்டில் கூச்சல், குழப்பம் செய்யும் எம்.பி.,க்களை பதவி நீக்கம் செய்வது பற்றி கூறவே இல்லை.

தொகுதி நலன் பற்றியும், மக்கள் நலன் பற்றியும் பேசாமல், பார்லிமென்டில் கூச்சல், குழப்பம் செய்யும் எம்.பி.,க்களை மறுமுறை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும்.

எம்.பி.,க்கள் இரண்டு அல்லது மூன்று பேர் இறந்து விட்டாலோ அல்லது இரண்டு, மூன்று எம்.பி.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டாலோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஊழல் வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற, இரண்டு, மூன்று எம்.பி.,க்கள் ஒரே நேரத்தில் பதவி இழந்து விட்டாலோ, பார்லிமென்ட் செயல்படாமல் போய் விடாது.

பார்லிமென்ட் கூடுவதற்கு குறைந்தபட்சம் (கோரம்) சபையின் மொத்த உறுப்பினர்களில், 10ல் ஒரு பங்கு எம்.பி.,க்கள் இருந்தால் போதும். ஆனால், 10ல் ஒரு பங்கு எம்.பி.,க்கள் கூட இல்லாமல், எதிர்க்கட்சி எனும் தகுதியை இழந்த காங்கிரஸ் கட்சி கூட்டத் தொடரை முடக்குவது என்பது பார்லிமென்ட் ஜனநாயக முறைக்கு முற்றிலும் எதிரானது.


ராஜ்யசபா பயிற்சி மற்றும் நடத்தை விதிகள், பார்லிமென்ட் நல்லொழுக்கம் மற்றும் ஒழுங்குமுறை படி, ராஜ்யசபா எம்.பி., என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று தெளிவாக கூறியுள்ளது. ஆனால், இதை எம்.பி.,க்கள் அனைவரும் தெரிந்து கொண்டனரா என்பது மட்டும் தெரியவில்லை.


மேலும், ராஜ்யசபையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கு பலம் உள்ளதாலும், ராஜ்யசபாவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்பதாலும், லோக்சபாவில் எம்.பி.,க்களை இடைநீக்கம் செய்தது போல் ராஜ்யசபாவில் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.


'என் பதவி காலத்தில், நான் இரண்டு கட்சிகளின் ஆட்சிகளைப் பார்த்து விட்டேன். என் பதவிக்கு பின்னரும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. எனினும், பார்லிமென்ட் முடக்கம் மற்றும் கூச்சல், குழப்பம் மட்டும் மாறவே இல்லை. பார்லிமென்டில் எப்போதும் கூச்சல், குழப்பமாக உள்ளது. இது நல்லதல்ல. இது தொடர்பாக இன்று மாணவர்களிடம் சில கேள்விகள் மூலம் ஆலோசனைப் பெற வேண்டும்' என்று, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் ஆலோசகர் ஸ்ரீஜன் பால் சிங்கிடம், கடந்த ஜூலை 27ம் தேதி கூறியுள்ளார்.

அப்துல் கலாமின் கடைசி வருத்தமும் அதுவாகத் தான் இருந்தது.


கட்சித் தாவல், ஊழல் என்று எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பதவி இழந்து, மக்கள், தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையை, இன்று சட்டம் ஏற்படுத்தியுள்ளது. முன் உறுப்பினர்களின் இறப்புக்கு மட்டும் தேர்தலை மக்கள் சந்தித்தனர். இன்று, கட்சித் தாவல், ஊழல் என்று உறுப்பினர்கள் பதவி இழக்கும் நிலையில், மக்கள் தேர்தலை சந்திக்க வேண்டியுள்ளது. அதுபோல, ஒழுக்கம் மற்றும் நெறிமுறை விதியின்படி பதவி இழக்கும் உறுப்பினர்களின் தொகுதி மக்கள் தேர்தலை சந்திப்பதில் தவறு இல்லை.

எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் குறித்து நீண்ட விவாதம் நடைபெற வேண்டும் அல்லது இவர்களின் செயல்பாடுகள் குறித்து சுப்ரீம் கோர்ட், அரசியல் சட்ட அமர்வு முன் வழக்குத் தொடர்ந்து தீர்வு காண வேண்டும். இல்லையேல், மக்களின் வரிப் பணம் வீணாகப் போய்விடும். தானாக முன்வந்து எந்த அரசியல் கட்சியும் இதற்கு தீர்வு காணாது என்பது மட்டும் உண்மை. கொள்ளிக் கட்டையால் தலையை சொறிய நம் அரசியல் தலைவர்கள் என்ன முட்டாளா?

'துாக்கத்தில் காண்பது அல்ல கனவு, உன்னை துாங்க விடாமல் செய்வதே கனவு' என்று கனவு காணச் சொன்ன கலாமின், துாங்க விடாத கனவு நிறைவேறுமா? நல்ல முறையில் பார்லிமென்ட் நடக்குமா?- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி ---

வழக்கறிஞர்

இ-மெயில்: asussusi@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X