பொதுவாகவே கங்கைக்கரை மாநிலங்கள் ஆரம்பக் கல்வியில் மிகவும் பின்தங்கியவை. 12 ஆண்டுகளுக்கு முன், ஹரியானா முதல்வராக இருந்த ஓம்பிரகாஷ் சௌதாலா, ஆசிரியர் நியமனத்தில் பெருமளவில் ஊழல் செய்து தவறானவர்களை ஆசிரியர்களாக ஆக்கினார். அதற்காக அவர் சிறை செல்ல நேரிட்டது. இதைவிடப் பிற்பட்ட நிலை பீஹாரில் இருக்கிறது. ஆரம்பக் கல்வி என்பதே பீஹாரில் ஒரு மோசடி என்று ஆய்வாளர்கள் எழுதி இருக்கிறார்கள்.
ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால், சுதந்திரம் கிடைத்ததும் மிகச்சிறந்த அரசியல்வாதிகளான ஆச்சாரிய கிருபாளனி, ஜெயப்ரகாஷ் நாராயணன் போன்றவர்களால் வழிநடத்தப்பட்ட அரசியல் கொண்டது பீஹார். நாற்பதுகளில் ஏற்பட்ட பஞ்சம் அதற்கு ஒரு பின்னடைவாக இருந்தாலும் சுதந்திரத்திற்கு பின் பீஹார், இந்தியாவின் மிக வெற்றிகரமாக ஒரு மாநிலமாக மாறிக் கொண்டிருந்தது. ஏனென்றால், கனிமவளம் கொண்டது அது. கங்கை ஓடுவதனால் நீர்வளம் நிறைந்தது. மிகப்பெரிய அளவில் மக்கள் வளம் கொண்டது. ஆனால், சாதி அரசியலால் பீஹார் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. பெரும்பான்மையினர் அரசியலைக் கைப்பற்றுவது ஜனநாயகத்தில் இயல்பானது. ஆனால், அது பீஹாரில் பெரிய அழிவை உருவாக்கியது.
அங்கே பெரிய எண்ணிக்கையில் உள்ள யாதவர்கள், ஜாட்டுகள் என்னும் இருபெரும் ஜாதியினரால் அங்குள்ள அரசியல் கையடக்கப்பட்டது. கிராமங்கள் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டுக்கு சென்றன. அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் அவர்கள் முடக்கினர். அதன்பிறகு அங்கே எந்த முன்னேற்றமும் நிகழ்வில்லை. தமிழ்நாட்டில், செங்கல் சூளைகளிலும், திருப்பூரில், நெசவு ஆலைகளிலும் வேலைக்கு வரும் பல்லாயிரக்கணக்கான வட இந்தியர்கள் பீஹார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஈரோடு பகுதிகளில் விவசாய வேலைக்கு கூட பீஹாரிலிருந்து மக்கள் கொண்டு வரப்படுகிறார்கள்.
சட்டத்தின் ஆட்சி:குஜராத்தில் விவசாய நிலங்கள் அனைத்தையுமே பீஹாரில் இருந்து வரும் கூலித்தொழிலாளர்கள் தான் செய்கிறார்கள். ஏன் லடாக்கில் ரத்தம் உறையும் கடுங்குளிரில் சாலை போடும் வேலையே பீஹாரிகள் தான் செய்கிறார்கள். இந்தியா முழுக்க மிகக்குறைவான ஊதியத்திற்கு பீஹாரிகள் கூலிகளாகச் செல்கிறார்கள். சொந்த நாட்டின் அகதிகள் அவர்கள்.நிதிஷ்குமார் பாரதிய ஜனதாவுடன் அமைத்த முதல் ஆட்சி என்பது பீஹார் பேரழிவின் விளிம்பில் நிற்கும்போது உருவான ஒரு சிறிய மாற்றம். மிகுந்த நல்லெண்ணத்துடன் பல சீர்திருத்த முயற்சிகளை நிதிஷ் மேற்கொண்டார். முதலில் கிராமங்கள் முழுக்க இருந்த கட்டைப் பஞ்சாயத்து முறையை ஒழித்து சட்டத்தின் ஆட்சியை அவர் கொண்டு வந்தார். நான் தொண்ணுாறுகளில் பீஹாரில் பயணம் செய்யும்போது பல ஊர்களில் சாலைகளில் அந்த கிராமத்துப் பண்ணையார்களே செக்போஸ்டுகளை நிறுவி, அவ்வழியே செல்லும் வாகனத்திலிருந்து தன் சொந்தச் செலவுக்கு கட்டாய வசூல் செய்வதை கண்டிருக்கிறேன். ஏதேனும் ஓர் ஆலயத்துக்கான நிதி வசூல் என்று ரசீதும் அளிப்பார்கள். எந்த காவல் துறையாலும் அதை தடுக்க இயலவில்லை.
பீஹாரில் சட்டம் - ஒழுங்கை திருப்பிக் கொண்டு வந்தது, நிதிஷ்குமாரின் மிகப்பெரிய சாதனை. கிராமத்துச் சந்தைகளை கட்டுப்படுத்தி வென்று வந்த குற்றவாளிகள் அகற்றப்பட்டனர். பீஹாரில் ஓரளவுக்கு வளர்ச்சி உருவாகியது. அடுத்த கட்டமாக ஆரம்பக் கல்வியை மேம்படுத்த நிதிஷ் முயன்றார். முப்பதாயிரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை, மூன்று படிகளாக நியமித்தார். அவர்களை நியமிக்கும் பொறுப்பு கிராமப் பஞ்சாயத்துகளுக்கும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது.
அவ்வாறு கிராம பஞ்சாயத்துகளுக்கு அவ்வுரிமை வழங்கப்பட்டது, மிகப்பெரிய பிழை என்று தெரிய வந்தது. இதழாளர்கள் சிலர் சேர்ந்து, பீஹாரின் இந்தப் புதிய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களில் மிகக் கணிசமானவர்கள் ஆரம்பப்பள்ளியே முடிக்காதவர்கள் என்றும், அவர்கள் அளித்த கல்விச்சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்றும் வெளிக்கொணர்ந்தனர். சான்றிதழ்களை பரிசோதிக்க வேண்டிய அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை வேலைக்கு சேர்த்திருந்தார்கள். எழுதப் படிக்கக் கூட தெரியாதவர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களாகி சம்பளம் பெற்றார்கள். அவர்கள் பள்ளிக்கு செல்லவோ பாடங்களை நடத்தவோ இல்லை. பீஹாரின் கல்வி முறை தரை மட்டத்திலிருந்து மேலும் கீழே சென்றது.
ஆனால், இந்த ஊழல் வெளிப்பட்டு, அதிகாரப்பூர்வமாக ஆவணங்கள் வெளிக்கொணரப்பட்டு, ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்ட பிறகும் கூட நிதிஷ் அரசால் எதுவுமே செய்ய முடியவில்லை. இந்த ஆசிரியர்களில் கணிசமானவர்கள் அதற்குள் பணிநிரந்தரம் பெற்று விட்டிருந்தனர். அவர்கள் ஆசிரியர் சங்கங்களில் உறுப்பினர்களாகி விட்டிருந்தனர். அவர்களுக்காக ஆசிரியர் சங்கங்கள் தெருவில் இறங்கி போராடவும் தயாராக இருந்தன. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பகைத்துக் கொள்ள நிதிஷ் விரும்பவில்லை. அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் பலவகையிலும் தக்க வைக்கப்பட்டனர். அடுத்த தேர்தலில் நிதிஷ் வென்று ஆட்சிக்கு வர இவர் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே முக்கியமான காரணமாக அமைந்தது என்பார்கள்.
பிணைக் கைதிகளாக...ஏன் ஆசிரியர்களுக்கு இந்த அதிகாரம் இருக்கிறது? அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்தியாவின் தேர்தல் முறையை மறைமுகமாக கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள். சென்ற முறை ஜெயலலிதா அரசு, அரசு ஊழியர்கள் மேல், ஆசிரியர்கள் மேல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தபோது ஒரு ஆசிரியர் என்னிடம் சொன்னார், “வரும் தேர்தலில் ஜெயலலிதாவை தோற்கடிப்போம். மக்கள் ஜெயலலிதாவை ஆட்சிக்கு கொண்டுவர நினைத்தாலும் எங்களால் தோற்கடிக்க முடியும்.”
நான் வியப்புடன், “எப்படி?” என்று கேட்டேன். மக்கள் வாக்களிக்க வராத பல்லாயிரம் வாக்குச் சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. அவை முழுக்க முழுக்கத் தேர்தல் அதிகாரிகளாகச் செல்லும் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றார் அவர். எப்படி வெவ்வேறு தேர்தல்களை தாங்கள் முடிவு செய்தோம் என்று அவர் விளக்கியபோது ஒருகணம் உறைந்து போய்விட்டேன். இந்தியா முழுக்க எல்லா அரசுகளும் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் பார்த்து அஞ்சுகின்றன. ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கும் போது, ஊதிய உயர்வோ பிற சலுகைகளோ கேட்டு அவர்கள் போராடுவதையும், அதற்கு அரசு அடிபணிவதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு மாஃபியா போல இந்திய ஜனநாயகத்தை பிணைக் கைதிகளாக வைத்திருக்கிறார்கள் இவர்கள். வாக்கு எந்திரம் வந்த பிறகு இவர்களுடைய அதிகாரம் பெருமளவுக்கு மட்டுப்பட்டிருக்கிறது என்றாலும் இன்றும் கூட ஓரளவுக்கு தேர்தல்களை விரும்பியபடி மாற்றும் வல்லமை இவர்களுக்கு இருக்கிறது.
இந்த மறைமுக அதிகாரத்தை இவர்களிடமிருந்து எப்படி அகற்றுவதென்பது எல்லா அரசுகளும் எண்ணிக் கொண்டிருக்கும் செயல்தான். ஆனால், அது மக்களின் தொடர் முயற்சியால் மட்டும் தான் முடியும். தேர்தல் அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டால் தேர்தல் வாக்களிப்புகளை பலவகையிலும் மாற்றி அமைக்க முடியும் என்ற நிலை இன்றும் நீடிக்கிறது. ஒவ்வொரு தேர்தல் மையங்களிலும் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களும் ஏதேனும் ஒரு வகையில் கண்காணிக்கத் தொடங்க வேண்டும். முறைகேடுகள் நிகழுமென்றால் அவற்றை செய்தியாக்கவும் புகாரளிக்கவும் தயங்கக்கூடாது.
வரிப்பணம் அழிப்பு:தொலை துாரத்தில் அதிகம் மக்கள் செல்லாத பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள வாக்கு சாவடிகளை கண்காணிக்க மக்கள் கண்காணிப்பகங்கள் அமைய வேண்டும். இல்லையேல் வரிப்பணத்தை ஊதியமாக பெற்றுக் கொண்டு அதற்குரிய எந்த நியாயமான பங்களிப்பையும் சமுதாயத்துக்கு வழங்காமல் இருக்கும் அரசு ஊழியர்களின் கைகளில் அரசாங்கம் பாவையாக ஆகிவிடும் இந்தியா போன்ற பெரும் தேசத்திற்கு அரசு ஊழியர்கள் மிக அவசியமானவர்கள்; அவர்களின்றி இந்த சிக்கலான விரிந்த நிலப்பரப்பை ஆள முடியாது. இந்தியா முழுக்க பரவியிருக்கும் ஒரே கல்வியும், ஒரே வகைப் பயிற்சியும் கொண்ட அரசூழியர்களின் அமைப்பு வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. அதுவே இந்தியாவை ஒன்றாகக் கட்டி நிறுத்துகிறது. இந்தியா என்னும் உடம்பின் நரம்புவலை அவர்களே.
ஆகவே, அவர்களுக்கு தவிர்க்க முடியாமல் ஓர் அதிகாரம் கை வருகிறது. அதை வெள்ளையர் காலம் முதலே ஊழலுக்காகத்தான் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். வெள்ளையர்கள் அவர்கள் தங்களை ஆதரிப்பதற்கு அளித்த கப்பம் அது. சுதந்திரத்திற்குப்பின் அவர்களை இந்திய ஜனநாயக அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் போனது அவர்களுக்கு தேர்தலில் இருக்கும் பங்களிப்பால்தான்.
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்வாதிகள் அரசியல்வாதிகள் அல்ல; இந்த அரசு ஊழியர்கள் தான். ஒட்டு மொத்தமாக இந்தியாவின் வரிப்பணத்தை இவர்கள் தான் சுருட்டி அழிக்கிறார்கள். எந்த ஒரு அரசு, அரசு ஊழியர்களுக்கு எதிரானதாக இருக்கிறதோ அதுவே மக்களுக்கு சாதகமான அரசாக இருக்க முடியும் என்பதே இந்தியாவின் நடைமுறை உண்மை.
-ஜெயமோகன்-