அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 23:பொம்மைகளின் அரசியல்

Updated : ஏப் 11, 2016 | Added : ஏப் 11, 2016
Advertisement
ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 23:பொம்மைகளின் அரசியல்

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் ஒரு போஸ்டர் நம்மில் பலருக்கு நினைவிருக்கும். பலநூறு கைகளால் ரஜினிகாந்த் மேலே தூக்கப்பட்டிருப்பார். தன் கையை முஷ்டி மடித்துத்தூக்கி உற்சாகமாக ஆர்ப்பரிப்பார். அந்த படத்தில் ஒரு பாடல்காட்சியில் மிகச்சிறப்பாக இக்காட்சி படமாக்கப்பட்டிருந்தது. அதன் இசையும் ஒலிக்கோர்ப்பும் மிகச்சிறந்த முறையில் அந்த சித்திரத்தை நம் மனதில் உருவாக்கின.
எனது நண்பரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் அது. காட்சி அமைப்பில் மிகக் கவனம் கொண்ட இயக்குநர் அவர். எந்த வகையில் ரசிகர்களின் உள்ளத்தில் ரஜினிகாந்த் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று யோசித்து வரைந்து உருவாக்கப்பட்ட காட்சி அது. அது என்ன சொல்கிறது? நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கரங்களால் அவர் மேலே தூக்கப்படுகிறார். அந்தக் கைகளில் ஒன்று அவரது கை. ஆனால் மற்ற கைகளை விட ஒரு படி மேலாக நிற்கிறது. அவர்களில் ஒருவர் ஆனால் அவர்களின் தலைவர் அவர்.
அந்தக் காட்சியை நாம் பார்க்கும்போது அதன் அர்த்தத்தை யோசிக்க மாட்டோம். ஆனால் அதன் அர்த்தம் நம் மனதில் எங்கோ நம்மை அறியாமலேயே ஆழப்பதிந்திருக்கும். இதுதான் இத்தகைய காட்சிகளின் வலிமை. இவ்வாறு நாம் நினைத்திருக்காத உள்ளர்த்தங்கள் ஏற்றப்பட்ட காட்சிகளைத்தான் இலக்கியவாதிகள், 'படிமம்' என்கிறார்கள்.
இன்று இருப்பது படிமங்களின் அரசியல். ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்களை ஒரு குறிப்பிட்ட வகையில் காட்சியாக, படிமமாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஒருவகையில் இந்த படிம அரசியலை தொடங்கி வைத்தவர் காந்தி. இந்தியாவின் சாதாரண விவசாயிகளின் உடையை அவர் அணிந்தார். அது சமணத் துறவியின் ஆடையும் கூட. சமணத் துறவிகளைப் போல கையில் ஒரு கோல் வைத்திருந்தார்.
அகிம்சை போராட்டம்:இந்தியா முழுக்க ரயிலில் பயணம் செய்து காந்தி மக்களை சந்தித்தார். ரயில் ஒரு நிலையத்தில் நிற்கும்போது அதன் வாசலில் வந்து நின்று மக்களைப் பார்த்து மெல்லிய குரலில் ஓரிரு சொற்களில் வாழ்த்து மட்டுமே அவர் சொல்வார். விரிவான உரைகள் நிகழ்த்துவதற்கான ஒலி அமைப்பு அன்று இல்லை. ஆனால் அவருடைய அந்தத் தோற்றமே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மக்களுக்கு உணர்த்தியது. அகிம்சைப் போராட்டம் என்பது காந்தியின் உருவம் மூலமே மக்களிடம் சென்று சேர்ந்தது. இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் லண்டனுக்கு ஆறாம் ஜார்ஜ் அரசரை பார்க்க செல்லும்போது காந்தி அதே எளிய உடையைத் தான் அணிந்திருந்தார்.
மன்னர் ஆடம்பரமான அரச உடை அணிந்திருந்தார். இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படம் உலகம் முழுக்க பிரசுரமாயிற்று. அந்தப் புகைப்படத்தை பார்க்கும்போதே சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்ட இந்தியா காந்தியாகவும், சுரண்டிக் கொழுத்த பிரிட்டன் அரசராகவும் மக்களுக்குத் தெரிந்தது. அப்படித் தெரியும் என்பது காந்திக்குத் தெரியும்.
ஆனால் காந்தியின் படிமம் என்பது நடிப்பு அல்ல. அவர் எதைச் சொன்னாரோ அதை அவர் வாழ்ந்து காட்டினார். ஆகவே அவர் ஒரு படிமமாக ஆனார். ஆனால் நவீனக் காட்சி ஊடகங்களைக் கொண்டு படிமங்களை உருவாக்கி அதை அரசியலுக்குப் பயன்படுத்துவதில் ஜெர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர்தான் மிகப்பெரிய முன்னோடி. அன்று உருவாகி வந்த சினிமா என்னும் கலையை அவர் மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.ஹிட்லரின் பிரச்சாரப்பட இயக்குநரான லெனி ரீஃபென்ஸ்டல் [Leni Riefenstahl] அவரை மிகச்சிறந்த காட்சிப் படிமங்களாக ஆக்கினார். மிகப்பெரிய ராணுவ அணிவகுப்புகளை உறைந்த முகத்துடன் பார்த்து நிற்கும் ஹிட்லரின் படங்கள் அன்று பெரிய அளவில் ராணுவ வெறியை உருவாக்கின. அவருக்குப் பின்னால் எப்போதுமிருந்த ராணுவமும், மிகப்பெரிய கவச வண்டிகளும், இரும்பும், அவரை உறுதியான மனிதராகக் காட்டின.
உதாரணமாக, ஹிட்லர் குள்ளமான சிறிய மனிதர். ஆனால் லெனியின் படங்களில் அவர் ஓங்கிய உடலுடன் பெரிய தளபதி போலத் தெரிவார்! கையை ஓங்கியபடியும், நீட்டியபடியும் ராணுவ வாகனங்களுக்கு அருகே நின்றிருக்கும் ஹிட்லரின் படங்கள் இன்றும் நினைக்கப்படுகின்றன. பிரசாரப் படங்களை எடுப்பதில் லெனி ஒரு பெரிய மேதை என்றே இன்று சினிமா நிபுணர்கள் கொண்டாடுகிறார்கள்.சுதந்திரத்திற்குப் பின்னர் ஜனநாயக அரசியல் உருவாகி வந்த போது அரசியல்வாதிகள் தங்களைப் பற்றிய படிமங்களை மக்களைக் கவர்வதற்கும், அதிகாரத்திற்கு செல்வதற்கும் பயன்படுத்திக் கொண்டார்கள்.உதாரணமாக, கையில் புத்தகங்களுடன் இருக்கும் அரசியல்வாதிகளின் சிலைகளும் படங்களும், அவர்கள் கற்றறிந்தவர்கள் என்ற சித்திரத்தை உருவாக்கின. சுட்டுவிரல் காட்டி நிற்கும் அரசியல்வாதி மக்களை வழிநடத்துபவர் என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்.
படிமங்களின் அரசியல்:பல படிமங்களை நாம் உடனடியாக நினைவு கூரலாம். எம்.ஜி.ஆர்., ஒரு வயதான மூதாட்டியை இறுக அணைத்திருக்கும் ஒரு படம், அவரது அரசியல் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணமாகியது. அவர் ஒரு மாபெரும் செங்கோலை, ஜெயலலிதாவுக்கு அளிக்கும் படம், ஜெயலலிதாவின் அரசியலை தொடங்கி வைத்தது. சி.என்.அண்ணாத்துரை குனிந்து கருணாநிதியின் காதில் ரகசியமாகப் பேசும் ஒரு படம், அவரது அரசியல் வாழ்வில் மிக முக்கியமான ஒரு தொடக்கமாக அமைந்தது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் நமக்கு படிமங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பார்த்து விட்டு கடந்து போவோம். ஆனால் நம் மனம் அதிலுள்ள அர்த்தத்தை நம்மை அறியாமலே எடுத்துச் சேர்த்து வைத்திருக்கும். ஓர் அரசியல்வாதியைப் பற்றி ஒரு பொதுவான கருத்தை நாம் சொல்லும் போது. அதை ஏன் சொல்லுகிறோம் என்று யோசித்தால் பெரும்பாலும் அது அவருடைய பேச்சுகளாலோ எழுத்துகளாலோ அது வந்திருக்கவில்லை என்பதை உடனே புரிந்து கொள்வோம்.
அவருடைய ஒரு புகைப்படமோ ஒரு போஸ்டரோ தான் அந்த சித்திரத்தை நமக்களித்திருக்கும். கவனியுங்கள், கையை தலைக்குமேல் ஓங்கி ஆவேசக் கூச்சலிடும் அரசியல்வாதியின் படம் அவர் மிகத் தீவிரமானவர் என்று நமக்கு சொல்கிறது. உண்மையிலேயே அவர் தீவிரமானவரா என்று நமக்குத் தெரியாது. அந்தப்படத்தை வைத்து அந்த முடிவுக்கு நாம் வருகிறோம். இளைஞர்கள் அந்த காட்சியாலேயே கவரப்படுகிறார்கள். அதைப்போல தாங்களும் நடிக்கிறார்கள். இதுதான் படிமங்களின் அரசியல்.
இன்று மிகச்சிறந்த விளம்பர நிபுணர்களைக் கொண்டு படிமங்கள் உருவாக்கப்படுகின்றன. சுரேஷ் கிருஷ்ணா எப்படி ரஜினிகாந்துக்கு ஒரு புகழ் பெற்ற படிமத்தை உருவாக்கினாரோ அதே போல காட்சித்தொழில் செய்யும் தொழில்முறை நிபுணர்கள் வணிகத்திற்கும் படிமங்களை உருவாக்குகிறார்கள்.
நாம் வாங்கும் ஒரு பொருளை எப்படித் தேர்வு செய்கிறோம்? ஹீரோ ஹோண்டா ஒரு சிறுத்தை என நம் மனம் நம்புவது அந்த விளம்பரத்திலுள்ள படிமத்தால். டி.வி.எஸ்., ஒரு குதிரை என நம் மனதில் எங்கோ பதிகிறது இல்லையா?இன்றைய ஜனநாயகத்தில் இந்தப் படிமங்களை நாம் சந்தேகத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நம்மை அறியாமலேயே நமது கருத்தை ஒருவர் மாற்றுவது நமது நன்மைக்காகவே அல்ல. நமது கருத்தை ஒருவர் மாற்ற வேண்டும் என்றால், அவர் நம்முடன் பேச வேண்டும். நமது தர்க்க புத்தியை அவர் திருப்தி செய்ய வேண்டும். நமது கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் நாம் அவரை நம்ப காரணங்கள் அமைகின்றன.
ஒருபோதும் நம்பக்கூடாது:மாறாக, வெறும் படிமங்களை நம்பி நம்மையறியாமலேயே அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொண்டு வாக்களிக்கும்போது நாம் உண்மையில் ஏமாற்றப்படுகிறோம். செய்தித் தொடர்புகள் இல்லாமல் இருந்த ஒரு காலகட்டத்தில் ஜனநாயகம் என்றால் என்ன என்றே தெரியாத மக்களிடம் பேசுவதற்கு காந்திக்கு படிமங்கள் தேவைப்பட்டன. இன்று அடிப்படைக்கல்வி கற்று விவாதிக்கக்கூடிய ஒரு தலைமுறை உருவாகி வந்திருக்கிறது. அவர்கள் ஒரு போதும் இந்த படிமங்களை நம்பக்கூடாது. அவற்றை விவாதத்திற்கு கொண்டு வரவேண்டும்.“பொம்மையை காட்டி ஏமாற்ற நான் குழந்தையல்ல. என்னிடம் பேசுங்கள், என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்” என்று அரசியல்வாதிகளிடம் சொல்லப்போகிற ஓர் இளைஞன்தான் உண்மையில் ஜனநாயகத்தில் நுழைகிறான்.
கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com www.jeyamohan.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X