தேர்தலும் சட்டங்களும் 8: தேர்தல் ஒத்திவைப்பு, மறு வாக்குப்பதிவு:| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

தேர்தலும் சட்டங்களும் 8: தேர்தல் ஒத்திவைப்பு, மறு வாக்குப்பதிவு:

Updated : ஏப் 12, 2016 | Added : ஏப் 11, 2016

வாக்குப் பதிவுக்கு முன்னர் வேட்பாளர் இறந்துவிட்டால்?மக்களவையில் ஓர் அவையில் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர் மற்றோர் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால்?


ஒரே நபர் இரண்டு இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டால்? - இது போன்ற பல கேள்விகள் நம் முன் உண்டு. அதற்கு சட்டம் என்ன சொல்கிறது?


ஒரு நபர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பிறகு, அதாவது, ஒரு நபர் வேட்பாளராக நிற்க தன் விண்ணப்பத்தை அளித்து, அது கூர்ந்தாய்வில் (பிரிவு 36) மறுக்கப்படாதிருந்து, பிரிவு 37ன் கீழ் அவர் தன் விருப்ப மனுவை திரும்பப் பெறாமல் இருந்து தேர்தல் ஆணையத்தால் 'வேட்பாளர்' என ஏற்கப்பட்ட பிறகு ஆனால் வாக்குப் பதிவு ஆரம்பிக்கப்படும் முன்னர் இறந்துவிட்டால் அந்தத் தகவல் அறிக்கை தேர்தல் பொறுப்பு அலுவலர், அத்தகவலை தேர்தல் ஆணையத்திற்கும், அதற்கென உள்ள அதிகாரிக்கும் தெரிவிக்க வேண்டும். வேட்பு மனுவைக் கூர்ந்தாய்வு செய்தபின்னர், அவரது வேட்பு மனு செல்லத்தக்கது என ஆய்வில் தெரிவித்த பின்னர் இறந்தால் மட்டுமே வாக்கெடுப்பிற்கு மாற்று ஆணை பிறப்பிக்கலாம்.

அவ்விதம் வாக்கெடுப்பிற்கான ஆணை புதிதாகப் பிறப்பிக்கப்படும் நேர்வுகளில், இறந்து போன வேட்பாளரின் கட்சியின் சார்பில் மற்றொரு வேட்பாளரை நிறுத்தச் சொல்லி ஏழு தினங்களுக்குள் சொல்லப்பட்ட வாக்குப் பதிவுக்குக் கோரலாம். இப்போது ஏற்கனவே செய்ததே போல இந்த புது வேட்பாளரின் விண்ணப்பங்கள் என அனைத்து தகவல்களும் கூர்ந்தாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்.

ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்திருந்து பின் தமது மனுவைத் திரும்பப் பெற்ற நபரும் மேற்கண்ட நிகழ்வில் வேட்பாளராக விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில் புதிய வேட்பாளர் பட்டியலை தேர்தல் பொறுப்பு அலுவலர் வெளியிட வேண்டும். அதாவது இறந்த நபருக்கு மாற்றாக வேட்புமனு தாக்கல் செய்த நபரின் பெயரையும் இணைத்து அந்தத் தொகுதியில் எந்தெந்த வேட்பாளர்கள் நிற்கிறார்கள் என்பதை அறிவித்து பட்டியல் வெளியிடல் வேண்டும். இந்தச் சூழலுக்கு எடுத்துக்காட்டாக 2013 ல் பெரியபட்ன தொகுதி சட்டசபை தேர்தலில் பாஜ வேட்பாளர் சன்னமகெ கெளடா வின் இறப்பு நிகழ்வை நினைவிற் கொள்ளலாம்.

எப்படி வேட்பாளர் ஒருவர் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் இறந்து போனால் வாக்குப் பதிவு தேதி ஒத்தி வைக்கப்படுகிறதோ அதே போல, நெருக்கடி நிலையின் போதும் வாக்குப் பதிவுத் தேதியை ஒத்திவைக்கலாமென மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 - ந் பிரிவு 57 சொல்கிறது.


பிரிவு 25 மற்றும் பிரிவு 29ன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட, ஏதேனும் ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நடக்கையில் குறுக்கீடு ஏற்பட்டாலோ, கலகம் ஏற்பட்டாலோ, இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலோ, அல்லது போதுமான ஏதேனும் ஒரு காரணத்தினால் வாக்குப்பதிவை நடத்த இயலாத சூழல் இருந்தால், அவ்வாக்குச் சாவடியின் தலைமை அலுவலர், வாக்குப் பதிவை ஒத்தி வைத்தலை அறிவித்தல் வேண்டும். அறிவித்ததோடு, உடனேயே தேர்தல் பொறுப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தல் வேண்டும். இந்த சூழலுக்கான எடுத்துக்காட்டாக ஹர்பஜன் சிங்(2003), ஜகதாம்பாள்(2006) வாக்குச் சாவடி கைப்பற்றல் நிகழ்வுகளைப் படித்தறியலாம்.

இது போன்ற சூழலில் அது குறித்த முழுமையான அறிக்கை ஒன்றினை அனுப்ப வேண்டும். மறு வாக்குப் பதிவு தேதி குறிப்பிட்டு, மறு வாக்குப் பதிவு நடந்து முடியும் தேதி வரை வாக்குகளை எண்ணுதல் கூடாது. (மற்ற வாக்குச் சாவடிகளின் வாக்குகளை எண்ணி வெளியிட ஆரம்பித்தால், அந்த முடிவானது இந்த மறு வாக்கு நடக்கும் சாவடியின் ஓட்டுக்களின் முடிவை அது மாற்றக்கூடும் என்பன போன்ற காரணங்களால் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு முடியும் வரை வாக்குகளை எண்ணக் கூடாது.)

தேர்தல் ஆணையம் நெறிப்படுத்தும் வகையில் மறு வாக்குப் பதிவு தேதி, இடம், நேரம் அறிவிக்க வேண்டும்.

வாக்குப் பெட்டிகள் அழிக்கப்படுவது போன்ற நேர்வுகளிலும் புதிய வாக்குப் பதிவு நடத்தலாம். தேர்தல் பாதுகாப்பு அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்த வாக்குப் பதிவுப் பெட்டிகள் சட்டத்திற்குப் புறம்பான வழியில் எடுத்துச் செல்லப்படால், அழிக்கப்பட்டால், காணாமல் போனால், சேதம் அடைந்தால் அல்லது அந்த வாக்குப் பதிவின் முடிவை அறிய முடியாத படி மோசடி ஏதேனும் நடந்திருந்தால், அல்லது வாக்குப் பதிவு இயந்திரத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்படும் போது, எல்லது வேறேதேனும் காரணமாக வாக்குப் பதிவிற்கு கேடு நேர்ந்திருந்தால், வாக்குப் பதிவு ஒத்தி வைக்கப்படும். இந்தத் தகவலை தேர்தல் பொறுப்பு அலுவலர் அது குறித்து அறிக்கை ஒன்றினை உடனடியாகத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.

சூழலை மாநில தேர்தல் ஆணையம் கருத்தில், கவனத்தில் கொண்ட பின்னர், அதுவரை வாக்குச் சாவடியில் நடைபெற்ற வாக்குப் பதிவு செல்லாது என்றும், அந்த வாக்குச் சாவடியில் மறு வாக்குப் பதிவுக்கு நேரம் நாள் இடம் குறிப்பிட வேண்டும்.

மேற் சொன்ன பத்திகளில் வாக்குகள் கைப்பற்ற்கை என்பது பற்றி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் -1951 -ன் பிரிவு 135 அ ல் சொன்னபடி பொருள் கொள்ள வேண்டும்.


பிரிவு 135 A, வாக்குச் சாவடியில் இருந்து வாக்குச் சீட்டுகளை / பெட்டிகளை அப்புறப்படுத்துவது ஒரு குற்றச் செயலாக குறிப்பிட்டு அதை விளக்குகிறது.

(வாக்குச் சாவடி கைப்பற்றும் எவரும் ஒரு வருடத்திற்குக் குறையாத ஆனால் மூன்று வருடத்திற்கு நீட்டிக்கத் தக்க சிறைத் தண்டனையும், பணத் தண்டமும் விதித்து தண்டிக்கப்படத் தக்கவராவார். )


பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் ஒருவரே தேர்ந்தெடுக்கப்படும் போது, ஒரு இடம் காலி இடம் ஆகும். அவ்வித சூழலில், இரு அவைகளிலும் தனது பதவியினை ஏற்கும் முன், அவ்விதம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் இருந்து (இரு அவைகளிலும் முடிவு இரு வெவ்வேறு நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்தால் இரண்டில் பிந்தைய தேதியில் இருந்து) பத்து நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக, தாம் இரண்டு பதவிகளில் எந்த ஒன்றில் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தல் வேண்டும். மற்றொரு இடம் காலி இடம் என அறிவிக்கப்படும்.


அந்தக் கால அவகாசத்திற்குள், அவ்விதம் அவர் தமது தேர்வைத் தெரிவிக்காவிடில், மாநிலங்களவையில் அவரது இடம் காலியானதாக ஏற்கப்படும்.


எழுத்துபூர்வமாக அவரின் அறிவிப்பானது அதன்பின் மாற்றமுடியாதது ஆகும்.


தேர்தல் வெற்றியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அந்த தேர்தல் தேதியும், அவர் நியமிக்கப்பட்ட உறுப்பினர் எனில் அவ்வித்ம் அவர் நியமிக்கப்பட்ட தேதியும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியாக கணக்கு ஆகும்.

இதைப் போலவே ஏற்கனவே ஒரு அவையில் உறுப்பினராகப் பதவியில் இருப்பவர், மற்றோர் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அதாவது மக்களவையில் உறுப்பினராகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவாராயின், மக்களவையில் அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் இருந்து காலி இடமாகிவிடும்.


அதே போலவே மாநிலங்களவையில் உறுப்பினராக ஒருவர் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அவர் மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவாராயின், மாநிலங்களவையில் அவர் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் இருந்து மாநிலங்களவையில் இடம் காலி ஆகிவிடும்.


இது குறித்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1951 - ந் பிரிவு 68, மற்றும் பிரிவு 69 ஆகிய பிரிவுகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

இதைப் போலவே பாராளுமன்றத்தின் ஈரவையில் ஒன்றில், அல்லது மாநில சட்டமன்றத்தின் ஈரவையில் ஒன்றில், ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதன் பின் அவர் குறிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், தன் கைப்பட எழுத்து வடிவில் ஒரு இடம் தவிர மற்ற இடங்களையும் விட்டுவிடுவதாக நேர்விற்கேற்ப சபா நாயகருக்கு அல்லது அவைத் தலைவருக்கு எழுதித் தர வேண்டும். அவ்விதம் எழுத்து வடிவில் தான் தேர்ந்தெடுத்த இடம் தவிர பிற இடங்களில் இருந்து ராஜினாமா செய்யும் வரை, அனைத்து இடங்களுமே காலி இடங்களாகவே இருக்கும்.


அதாவது மக்கள் பிரதிநிதிச் சட்டத்தின் பிரிவு 70ன் படி, இரு இடங்களில் (ஒரே அவையில்) ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மற்ற இடங்களில் இருந்து தான் விலகுவதாக தானது ராஜினாமா மூலம் மட்டுமே அவர் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க இயலும். மற்ற இடங்களில் அவர் ராஜினாமா செய்யாதவரை அனைத்து இடங்களூமே காலி இடங்களாகவே கருதப்படும்.


ராஜினாமா மூலம் அவர் தன் தொகுதி வெற்றியைத் தேர்ந்தெடுக்கிறார் எனவும் கொள்ளலாம்.

மேற்சொன்னபடி ஒரே நபர் ஒரு அவைகளிலுமோ, ஒரே அவையில் இரு இடங்களிலோ நேர்விற்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டாலோ, நியமனம் செய்யப்பட்டாலோ, இரண்டில் ஒன்றை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை எழுத்து வடிவில் அவைத் தலைவருக்குத் தெரிவிக்கவும் வேண்டும்.


அவ்விதமான அவரின் முடிவுக்குப் பின் உள்ள காலி இடங்களுக்கு மறு தேர்தல் நடத்தப்படும்.


இவ்விதம் மறு தேர்தல் நடத்தப்படும் சூழ்ல் தேவையற்றது, அதிக செலவு வைக்கக்கூடியதாகவும் இருப்பதால், ஒரே நபர் இரு இடங்களில் தேர்தலில் நிற்கக்கூடாது என்பன போன்ற சில முடிவுகளை சட்டப்படி எடுத்தலே சரி எனவும், கருத்து உண்டு.

ஆனால், அவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் மக்கள் பிரதிநிதி. எனவே எத்தனை அவைகளில் அவர் தேர்தலில் நிற்க வேண்டும் என்பது மக்களின் உரிமைக்குப் பங்கம் விளைவிப்பது எனவே அந்த கட்டுப்பாடு கூடாது எனவும் கருத்து நிலவுகிறது.

எனவே இந்த பிரச்சனைக்குத் தீர்வாக, தேர்தல் ஆணையம், மறுதேர்தலுக்கு வழி வகுக்கும், நபருக்கு, அந்த காலி இடத்தில் மறு தேர்தல் வைக்க ஆகும் செலவை ஏற்கும் கடப்பாடு உண்டு என சட்டத்திருத்தம் செய்யலாம் எனும் தீர்வுக் கருத்தும் நிலவுகிறது. இதுவும் கூட, முன்னதே போல அதாவது, 'இரு இடங்களுக்கு ஒரு நபர் நிற்கக்கூடாது' கருத்து ஏற்படுத்தும் விளைவையே ஏற்படுத்தும்.

இவ்விதமாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மேற்கண்ட நிகழ்வுகளில் தேர்தல் ஒத்தி வைப்பு, மறு தேர்தல் ஆகியவற்றை தேர்தல் ஆணைய செயல்பாடுகளில் இருந்து செயல்படுத்துகின்றன.

-ஹன்ஸா. (வழக்கறிஞர்) legally.hansa68@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X