சென்னை,: கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் புகார்களை பெற, மாவட்டங்களில் தனி குழுவை ஏற்படுத்தும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவை சேர்ந்தவர், திலீப்குமார்; ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர். வேறு சமூகத்தை சேர்ந்த, விமலாதேவி என்ற பெண்ணை, கலப்பு திருமணம் செய்தார். பின், இருவரையும் பிரித்து விட்டனர்; விமலாதேவி கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடவும், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், திலீப்குமார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி ராமசுப்ரமணியன், இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். விமலா மரணத்துக்கான சூழ்நிலைக்கு காரணமான அதிகாரிகளின் நடத்தை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும், நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 2014 நவம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற
உத்தரவை தொடர்ந்து, மதுரை தென்மண்டல, ஐ.ஜி., அறிக்கை தாக்கல் செய்தார்.
திலீப்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிர்மலா ராணி, ஐந்து ஆண்டுகளில்
நடந்த, 47 கவுரவ கொலைகள் பற்றிய சம்பவங்களை பட்டியலிட்டார்.
நீதிபதி வி.ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்தில், நீதிபதி கே.கண்ணன் பிறப்பித்த உத்தரவை, இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு, மனுதாரரின் வழக்கறிஞர் கொண்டு வந்தார். கவுரவ கொலைகளை ஒழிப்பதற்கு, பஞ்சாப் - அரியானா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போல், சில உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது.எனவே, கீழ்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
* தவறுகள் செய்த அதிகாரிகள் மீது, துறை நடவடிக்கை எடுக்க ஏதுவாக, டி.ஜி.பி.,க்கு, மதுரை ஐ.ஜி., அறிக்கை அனுப்ப வேண்டும்
* பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி, ஒவ்வொரு மாவட்டத்திலும், தனி பிரிவை, அரசு ஏற்படுத்த வேண்டும். அதில், மாவட்ட எஸ்.பி., மாவட்ட சமூக நல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நல அதிகாரி இடம் பெற வேண்டும். கலப்பு திருமணம் செய்தவர்களை துன்புறுத்தினால், அச்சுறுத்தினால், அவர்கள் அளிக்கும் புகார்களை,இக்குழு பெற வேண்டும்
* இந்த தனி பிரிவு, 24 மணி நேர, உதவி மையத்தை
ஏற்படுத்த வேண்டும். புகார்களை பெற்று, பதிவு செய்து, கலப்பு திருமணம்
செய்தவர்களுக்கு உதவி, பாதுகாப்பு, ஆலோசனைகளை வழங்க வேண்டும்
* புகார்களை பெற்ற உடன், தானாக முதல் தகவல் அறிக்கை வழங்க, ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
* தனி பிரிவுகளை, 'ரெகுலர்' அடிப்படையில் கண்காணிக்க வேண்டும்
* எந்த போலீஸ் நிலைய வரம்புக்குள், கலப்பு திருமண தம்பதி வருகின்றனரோ, அந்த போலீசார், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
* தம்பதியினரை துரத்தும் பெற்றோருக்கு, கவுன்சிலிங் வழங்கும் நடவடிக்கையையும், தனிப் பிரிவு மேற்கொள்ள வேண்டும்
* கவுரவ கொலையை ஒழிக்க, தனிப் பிரிவுக்கு என, தேவையான நிதியை, அரசு வழங்க வேண்டும். தம்பதியினருக்கு, தற்காலிகமாக தங்கும் வசதியை அளிக்க, இந்த நிதியை பயன்படுத்தலாம்
* ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், கடமை தவறிய போலீஸ் அதிகாரியை பொறுப்பாக்க வேண்டும். போதிய பாதுகாப்பு அளிக்க தவறும் அதிகாரியை, கடுமையாக கருத வேண்டும்
* மூன்று மாதங்களில், தனிப்பிரிவை ஏற்படுத்தி, மேற்கூறிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (15)
Reply
Reply
Reply