வேலுார்:'உளுந்துார்பேட்டையை போல வாணியம்பாடி தொகுதியை, அண்ணா அறிவாலயத்தில், 'சரண்டர்' செய்து விடு' என, முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு, தி.மு.க.,வினர் மிரட்டல் விடுத்த தகவல் வெளியாகி உள்ளது.வேலுார் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 13 தொகுதிகளில், 10ல் தி.மு.க., போட்டியிடுகிறது; மூன்று தொகுதிகளில், கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. வாணியம்பாடி தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், ஆம்பூரில், மனிதநேய மக்கள் கட்சியும், சோளிங்கரில், காங்கிரசும் போட்டியிடுகின்றன.
வாணியம்பாடி தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், முகமது பாரூக் போட்டியிடுகிறார்.கடந்த, 37 ஆண்டுகளாக, கூட்டணி கட்சிகளுக்கே, வாணியம்பாடி ஒதுக்கப்பட்டு வந்துள்ளதால், இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்த்திருந்தனர். தொகுதி முழுவதும், சுவர்களில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்திருந்தனர்.
ஆனால், இந்த முறையும் தொகுதி கைமாறியதால், தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க.,வினர், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தி.மு.க., போட்டியிட வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி, உளுந்துார்பேட்டை தொகுதியை, தி.மு.க.,விடம் சரண்டர் செய்தது. அதேபோல், வாணியம்பாடி தொகுதியையும் சரண்டர் செய்ய வேண்டும் என, முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது பாரூக்கை, தி.மு.க.,வினர் மிரட்டியதாக, நேற்று தகவல் பரவியது.
இது குறித்து, முஸ்லிம் லீக் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:இதன் பின்னணியில், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் தேவராஜ் உள்ளார். அவரது மைத்துனர் அசோகன், ஆலங்காயம் ஒன்றிய செயலராக இருக்கிறார். அவரது துாண்டுதலில் தான், தி.மு.க.,வினர் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஆம்பூரிலும் எதிர்ப்பு:ஆம்பூர் தொகுதியை, மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, தி.மு.க.,வினர் போராட்டத்தில் குதித்தனர். ஆம்பூர் நேதாஜி சாலையில் மறியல் நடத்திய, 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், பின், நகர தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, 'ஆம்பூர் தொகுதியில், தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பணியில் ஈடுபட மாட்டோம்' என, கோஷமிட்டனர்.